சூரியனை, சிவபெருமானின் அம்சம் என்கிறது சைவ மரபு. சிவபெருமானின் எட்டு வடிவங்களுள் சூரியனும் ஒன்று. இதை உணர்த்தவே சிவாலயங்களில் திருவிழாக்களின்போது, 2-ஆம் நாள் காலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருள்கிறார் சிவனார். சிவ பூஜையின் ஓர் அங்கமாகவே சூரிய வழிபாடு செய்யப்படுகிறது.
சிவாலயங்களில் தனிச் சந்நிதியில் எழுந்தருளும் சூரிய பகவான், ஆலயங்களின் வட கிழக்கு அல்லது தென் கிழக்கு மூலைகளில் தரிசனம் தரும் நவக்கிரகங்களின் மத்தியிலும் காட்சி தருவார். நவக்கிரகங்கள், 'வைதீகப் பிரதிஷ்டை'யில் அமையும்போது கிழக்கு நோக்கியும், ஆகம முறைப்படி அமையும்போது மேற்கு நோக்கியும் காட்சி தருவார் சூரிய பகவான். சூரியன், ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசியில் பிரவேசிக்கும்- ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளன்று இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அடையபலம் அப்பய்ய தீட்சிதரது ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் எனும் நூல், 14 பாடல்கள் மூலம் சூரிய வழிபாட்டை விளக்குகிறது. இதில் 12-வது பாடல், சிவபெருமானின் வடிவமாகவே சூரியனை போற்றுகிறது.
சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)களது பெயர்கள், கோயில்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சிவாலயங்கள் குறித்து காசி காண்டம்எனும் நூல் விவரிக்கிறது. இவர்களை தரிசிப்பது, 'சௌர யாத்திரை' எனப்படும்.
லோலார்க்கர்: நமது மன சஞ்சலங்களை தமது ஞானத்தால் தீர்ப்பதால் இவருக்கு 'லோலார்க்கர்' என்று பெயர். இவரது ஆலயம், அதிசங்கமத்தில் பிரசித்திப் பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது. இங்குள்ள குளத்தில் நீராடி லோலார்க்கரை வழிபடுவது விசேஷம்.
உத்திர அர்க்கர்: காசிக்கு வடக்கே 'அலேம்புரா' எனும் இடத்தில் உள்ள சூரிய தீர்த்தமே உத்திர அர்க்க குண்டம். வக்ரியா குண்டம் என்றும் கூறுவர். இங்குள்ள சூரியனை 'உத்திர அர்க்கர்' என்பர். இங்கு, ஓர் ஆடு மற்றும் பெண் ஆகியோர் தவம் இருந்து அருள் பெற்றனராம். எனவே, இது 'வக்ரியா குண்டம்' எனப்படுகிறது (வக்ரி-ஆடு).
ஸாம்பாதித்யன்: இவரது ஆலயம், விஸ்வநாதர் கோயிலுக்கு மேற்கே உள்ளது. ஒரு முறை, தன் தந்தை கிருஷ்ண பரமாத்மாவால் குஷ்டரோகி ஆகும்படி சபிக்கப்பட்டான் ஸாம்பன். பிறகு, ஸ்ரீகிருஷ்ணரது அறிவுரைப்படி காசிக்கு வந்து, சூரியனை வழிபட்டு நலம் பெற்றானாம். இப்படி, ஸாம்பன் வழிபட்டதால் இவரை 'ஸாம்பாதித்யன்' என்பர்.
திரௌபதி ஆதித்யன்: இவரது ஆலயம், விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில், அட்சய பீடத்தின் கீழ் உள்ளது. திரௌபதி, இவரை வழிபட்டு அட்சய பாத்திரம் பெற்றதால், இவருக்கு 'திரௌபதி ஆதித்யன்' எனப் பெயர்.
மயூகாதித்யர்: ஒரு முறை, காசியில்- ஸ்ரீமங்களகௌரி மற்றும் ஸ்ரீகபஸ்தீஸ்வரர் எனும் திருநாமங்களுடன் அம்மை- அப்பனை ஸ்தாபித்து, சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் தவம் புரிந்தார் சூரியன். இதனால் மகிழ்ந்த சிவனார், 'மயூகன்' எனும் பெயர் சூட்டி சூரியனுக்கு அருள் புரிந்தாராம். இந்த மயூகாதித்யர், 'பஞ்ச கங்காகாட்' அருகிலுள்ள மங்கள கௌரி கோயிலில் காட்சி தருகிறார்.
கஷோல்கா ஆதித்யர்: கருடன் மற்றும் அவன் தாய் வினதை ஆகியோரால் வழிபடப்பட்ட இந்த சூரிய தேவர் புகழ்பெற்ற திரிலோசனர், காமேஸ்வரர் ஆலயப் பிராகாரத்தில் எழுந்தருளி உள்ளார்.
அருணாதித்யர்: காசியபரின் மனைவி வினதை. ஒரு முறை இவள் மூன்று முட்டைகளைப் பெற்றாள். முதல் முட்டையில் இருந்து ஆந்தை ஒன்று தோன்றி யது. இரண்டாவது முட்டையில்- அருணன் (ஊனமான நிலையில்); 3-வது முட்டையில்- கருடன் ஆகியோரும் தோன்றினர். இவர்களில் ஆந்தையும், அருணனும் காசிக்கு வந்து சூரியனை வழிபட்டனர். அவர்களுக்கு அருளிய சூரிய பகவான் அருணனைத் தன் தேரோட்டியாக ஏற்றார். எனவே இவருக்கு அருணாதித்யர் என்று பெயர். இவர் ஸ்ரீதிரிலோசனர் ஆலயத்தில் அருள் பாலிக்கிறார்.
விருத்தாதித்யர்: வேதங்களில் தேர்ந்தவனான விருத்தன் என்பவன், சூரியனைக் குறித்து தவம் இருந்து குன்றாத இளமையைப் பெற்றான். இவனுக்கு அருளிய சூரியன் விருத்தாதித்யர் எனும் பெயரில் 'மீர்காட்' எனும் இடத்தில் எழுந்தருளி உள்ளார்.
கேசவாதித்யர்: இவர், வருணா சங்கமத்தில் உள்ள ஸ்ரீகேசவர் கோயிலில் எழுந்தருளியுள்ளார். கேசவனாகிய திருமாலின் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவருக்கு கேசவாதித்யர் என்று பெயர்.
விமலாதித்யர்: குஷ்ட நோயால் துன்புற்ற விமலன் என்பவன் காசிக்கு வந்து சிவலிங்கம் அமைத்து சிவபெருமானையும் சூரியனையும் வழிபட்டான். இதனால் மகிழ்ந்த சூரியன், 'இனி, உன் பரம்பரைக்கே இந்த நோய் வராது!' என்று அருள்புரிந்தார். எனவே விமலாதித்யர் எனும் பெயர் பெற்றார். கதோலியாவுக்கு அருகே ஜங்கம்பாடியில் இவரை தரிசிக்கலாம்.
கங்காதித்யர்: பகீரதன், கடும் தவம் செய்து ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தபோது, தானும் காசிக்கு வந்து கங்கைக் கரையில் தங்கிய சூரியன்- கங்காதித்யர் எனப்பட்டார். காசியில் லலிதா காட் எனும் இடத்தில் கோயில் கொண்டுள்ளார் இவர்.
யம ஆதித்யர்: சூரிய தேவரின் புதல்வனான யம தர்மன் காசியில் தன் தந்தைக்கு கோயில் அமைத்து, தவம் இயற்றி அரிய வரங்களைப் பெற்றானாம். இப்படி, யமனுக்கு அருள் புரிந்த யம ஆதித்யர் காசியில் 'சங்கடா காட்' என்ற இடத்தில் எழுந்தருளியுள்ளார்.
இந்த 12 சூரியர்களையும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுவது விசேஷம் என்கிறார் கள். ஞாயிற்றுக்கிழமையுடன் சஷ்டி திதி சேர்ந்து வந்தால் அந்த நாளை 'பானு சஷ்டி' என்றும், சப்தமி சேர்ந்தால் 'பானு சப்தமி' என்றும் கூறுவர். பானு சப்தமியை- 'பானு யோகம் என்று குறிப்பிடுவர். இது, ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சமமாம்! இந்த நாளில் 12 சூரியர்களை தரிசிப்பது இன்னும் சிறப்பு!
சூரியன் பூஜித்த ஏழு சிவத் தலங்கள்
சூரியன் வழிபட்டு, பேறு பெற்ற திருமுறை திருத் தலங்கள் ஏழு. அவற்றை, 'திருவேதிக்குடி தல புராணம்' கீழ்க்கண்ட பாடலில் பட்டியலிடுகிறது.அதாவது- கண்டியூர், வேதிக்குடி, நல்ல குடந்தைக் கீழ்க் கோட்டம் எனும் குடந்தை நாகேஸ்வரர் ஆலயம், பண்பமைந்த பரிதி நியமம், திருத்தெளிச்சேரியான கோயில் பத்து, பனங்காட்டூர் மற்றும் திருநெல்லிக்கா ஆகிய ஏழும் சூரியன், சிவபெருமானை பூஜித்த தலங்களாகும்.கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க் கோட்டம்பண் பரிதி நன்நியமம் பாங்காற் தெளிச்சேரிபொற்புற வார்பனங்காட் டூர் நெல்லிக் காவேழும்பொற்பரிதி பூசனை செய்யூர்... |
Comments
Post a Comment