ஓம் நமோ நாராயணாய

முப்பத்து முக்கோடி தேவர்களின் சரணாலயம்... நித்யசூரிகள் புடைசூழ, ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் நீளாதேவியுடன், ஆதிசேஷ ஆசனத்தில் புருஷோத்தமன் கொலு வீற்றிருக்கும் திவ்வியதேசம்... அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் ஆதாரமூலமான ஆதிநாராயணன் குடியிருக்கும் வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்குமா?
'கிடைக்கும்!' என்கிறது கௌசீதிகீ உபநிஷத்!

விவேகம்: தர்மம்- அதர்மத்தைப் பிரித்தறிந்து செயல்படுதல், நிர்வேதம்: 'இத்தனை காலம் பரம்பொருளை எண்ணாமல் இருந்து விட்டோமே' என்று வருந்தி நிற்கும் நிலை, வைராக்கியம் (விரக்தி): உலகப் பற்றுகளை துறத்தல், பீதி: பரம்பொருளை அடைய வேண்டுமே எனும் அக்கறை, பிரசாதஹேது: இறைவனின் அனுக்கிரகம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த எண்ணம், உட்கிரமணம்: சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறும் நிலை, அர்ச்சிராதி மார்க்கம்: வைகுண்டம் செல்வதற்கான வழி, திவ்யதேச பிராப்தி: திவ்யதேசத்துக்குள் நுழையும் பாக்கியம், பரமாத்ம பிராப்தி: பரம்பொருளின் திவ்விய அனுபவம்!
- இந்த ஒன்பது படிநிலைகளையும் கடந்து, வைகுண்டத்தை அடையலாம் என்கிறது உபநிடதம். முதல் ஐந்து படிநிலைகளை நாம் கஷ்டப்பட்டுக் கடந்து விட்டால், அடுத்தடுத்த நிலைகளுக்கு பகவானே நம்மை கைதூக்கி விடுவார் என்பது ஆன்றோர்களின் கருத்து.
இந்த நிலைகளைக் கடந்த பிரம்மஞானிகள்- சனத் குமாரர்கள். பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய இந்த நான்கு முனிவர்களையும் 'சனகாதியர்' என்பர்.
பரம பக்தர்களான சனகாதியர், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவர்கள். இப்போதும் அப்படித்தான்... பெருமாளை தரிசிக்கும் பேரார்வத்துடன் பரமபதத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர்!
வைகுண்டம்! சலசலக்கும் விரஜா நதி, அதில் மலர்ந்து மிதக்கும் தங்கத் தாமரைகள், கேட்பதைத் தரும் கற்பக விருட்சங்கள், வைர- வைடூரியங்களால் இழைக்கப்பட்ட மணிமாடங்கள், ரத்தினங்கள் மின்னும் விமானக் கலசங்கள்... இவை எதுவும் சனகாதியரை ஈர்க்கவில்லை. அவர்களின் மனம் முழுக்க நாராயணரின் தரிசனம் குறித்த எண்ணமே மேலோங்கி இருந்தது!
வீறுநடை போட்ட சனகாதியர், வைகுண்டத்தின் மகத்தான 7-வது பிராகாரத்தின் வாயிலை நெருங்கும் வேளை... 'நில்லுங்கள்!'' - திடுமென ஒலித்த குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தியது!
சற்றே நிதானித்த நால்வரும், குரல் வந்த திசையை நோக்கினர். அங்கே... ஜய- விஜயர்கள்; வைகுண்டபதியின் துவார பாலகர்கள் நின்றிருந்தனர்!
''இதற்குமேல் ஓர் அடிகூட எடுத்து வைக்கக் கூடாது!'' - இடியென முழங்கினான் ஜயன்.
''துவார பாலகர்களே, நாங்கள்...'' - முனிவர்கள் ஆரம்பிப்பதற்குள் விஜயன் இடைமறித்தான்: ''யாராக இருந்தாலும் சரி... இப்போது, உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது''
அதிகாரத் தொனியுடன் கூடிய விஜயனின் பேச்சும் செயலும் சனகாதியருக்கு வியப்பைத் தந்தது.
''ஆண்டவனை தரிசிக்க அவருடைய அடியவர்களுக்கு அனுமதி கிடையாதா?'' என்றனர்.
''அடியவர் என்ன... ஸ்வாமி ஏகாந்தத்தில் இருக்கும் இந்த தருணத்தில், தேவதேவியரே வந்தாலும் அனுமதி கிடையாது!'' - கர்வத்துடன் பதிலளித்தான் ஜயன்.
'ஏதோ... இதுவரை கடமையை ஆற்றும் ஆர்வத்தில் இப்படிப் பேசுகிறார்கள் என்று நினைத்தால், இவர்களிடம் ஆணவமும் அல்லவா தலை விரித்தாடுகிறது' என்று சற்றே கோபம் எழுந்தது முனிவர்களுக்கு! இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கேட்டனர்...
''அன்பர்களே, நாங்கள் பிரம்ம குமாரர்கள்; திவ்விய தரிசனம் வேண்டி வந்திருக்கிறோம் என்பதை ஸ்வாமியிடம் தெரிவியுங்கள். அவரே எங்களை அழைத்து வரச் சொல்வார்!'' என்றனர்.
''நிச்சயம் முடியாது. நீங்கள் திரும்பிச் செல்லலாம்!'' உறுதியாகத் தெரிவித்தனர் ஜய-விஜயர்கள்.
அவ்வளவுதான்! முனிவர்கள் நால்வரில் சனத்குமாரரின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. ''அற்பர்களே... ஆண்டவனின் சந்நிதியில் சேவை செய்பவருக்கு அகந்தை கூடாது. அடியவர்களை தரம் தாழ்த்தும் நீங்கள் இங்கே வசிப்பதற்கு தகுதி இல்லாத வர்கள். நீங்கள்... காமம், குரோதம், லோபம் நிறைந்த பூவுலகில் வசிப்பதே பொருந்தும். எனவே, வைகுண்டவாசிகள் எனும் பெருமையை இழந்து பூலோகத்தில் வீழ்வீர்களாக!'' என்று சபித்தார்.
ஜய-விஜயர்கள் ஆடிப் போனார்கள்! 'எத்தகைய சாபம்! ஸ்வாமியைப் பிரிந்து பூலோகத்தில் வீழ்வதா... கனவிலும் நினைத் துப் பார்க்க முடியாத துன்பம் அல்லவா?' எனும் சிந்தனை மேலோங்க, தங்களின் தவறை உணர்ந்தனர். முனிவர்களின் திருவடிகளில் விழுந்தனர்.
''அறியாமல் தவறு செய்து விட்டோம்.
தவறுக்கு தகுந்த தண்டனை அளித்தீர்கள். ஆனாலும் தயைகூர்ந்து ஒரு வரம் தர வேண்டும். சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்தாலும் நாங்கள் மோகத்துக்கு வசப்படா மல், எந்த நிலையிலும் ஸ்ரீஹரியின் நினைவு மாறாமல் வாழ ஆசி புரியுங்கள்'' - பணிந்து வேண்டினர் ஜய-விஜயர்கள்.
அப்போது... அழகுப் புன்னகை துலங்க, வனமாலை தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸ மருவும், கிரீட- குண்டலங்களுடனும்... சங்கு-சக்கர, கதா, பத்ம பாணியாக, சதுர் புஜங்களுடன்... திவ்யாலங்கார பூஷிதராக தரிசனம் அளித் தார் ஸ்ரீமந் நாராயணன்.
அருளை அள்ளிச் சொரியும் அவரின் கண்ணழகைக் கண்ட சனகாதி முனிவர்கள் மெய்ம்மறந்து நின்றனர்! ஸ்ரீஹரிசரண துளசியின் மணம் அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது!
''சனகாதியரே நலம் உண்டாகட்டும்!''
- பரந்தாமனே அவர்களின் சிந்தையைக் கலைத்தார்.
''ஸ்ரீமந் நாராயணா போற்றி; திருமகள் திருவே போற்றி போற்றி!''- வணங்கித் துதித்தனர் சனகாதியர்.
''உங்களின் பக்தியும் பண்பும் மகிழ்விக்கின்றன. யுகம் யுகமாக உங்கள் புகழ் நிலைத் திருக்கும்!'' அருள் புரிந்தார் அனந்தன்.
மீண்டும் அவரைப் பணிந்து வணங்கிய சனகாதியர், ''தேவதேவா! பிரம்ம ஞானிகளாகிய எங்களுக்கு கோபம் கூடாது. ஆனாலும், தங்களை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ எனும் ஆதங்கத்தில் ஜய- விஜயர்களை சபித்துவிட்டோம். இதனால் மறு ஜன்மம் எடுக்க நேருமோ என்று மனம் பதறுகிறது. அப்படி ஒருவேளை...
பிறவி எடுத்தாலும் எங்கள் உள்ளம் தங்களின் பாதாரவிந்தங்களிலேயே லயித்திருக்க அருள் புரியுங்கள்!'' என்று கண்ணீர் மல்க வேண்டினர்.
''தவயோகிகளே, வருந்தாதீர்கள் என் அடியவர்களை துவேஷிப்பவர் என்னையே துவேஷிப்பவர் ஆவர். ஆகவே, ஜய- விஜயர் சாபம் பெற்றது சரியே!''
- இறைவனின் வார்த்தைகள், சனகாதி முனிவர்களை ஆறுதல்படுத்தவில்லை போலும்! தொடர்ந்து வேண்டினர்: ''ஸ்வாமி, கோபத்தில் சபித்துவிட்டோம். பாவம்... ஜய- விஜயர்களை மன்னித்து அவர்களுக்கு விமோசனம் அருளுங்கள்!'' என்றனர்.
புன்னகைத்த இறைவன், ''முனிவர்களே, இந்த சாபமானது என்னால்தான் ஏற்பட்டது! யுகம்தோறும் தர்மத்தை நிலைநிறுத்த நான் எடுக்கப் போகும் அவதாரங்களுக்கு உங்களின் இந்த சாபமும் ஒரு காரணமாகப் போகிறது! எனவே, சஞ்சலம் கொள்ளாமல் சென்று வாருங்கள்!''
சனகாதி முனிவர்களை வாழ்த்தி வழியனுப்பிய இறைவன், ஜய- விஜயர்களை ஏறிட்டார்; இருவரும் பதைபதைப்புடன் தலைகுனிந்து நின்றிருந்தனர்.
''துவார பாலகர்களே! நினைவிருக்கிறதா? ஒருமுறை கடமை உணர்வு மேலிட, திருமகளையே வைகுண்டத்துக்குள் அனுமதிக்க மறுத்தீர்கள். கோபம் கொண்ட திருமகள், அந்தண சாபத்துக்கு உள்ளாகும்படி உங்களை சபித்தாள். அது பலித்து விட்டது. ஆகவே, நீங்கள் பூமியில் பிறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!'' என்றார் பகவான்.
மனம் கலங்கிய துவார பாலகர்கள், ''புரிந்தது ஸ்வாமி!
சாபத்தை அனுபவிக்க சித்தமாகி விட்டோம். இருந்தாலும் பூலோக ஜன்மம் விடுத்து, விரைவில் வைகுண்டம் அடைவதற்கான வழியை தாங்களே அருள வேண்டும்!''- சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொண்டனர்.
''ஜய-விஜயரே... பூமியில், என் பக்தர்களாக நீங்கள் பிறக்க விரும்பினால், நூறு ஜன்மங்கள் எடுக்க நேரிடும். விரைவிலேயே வைகுண்டம் திரும்ப வேண்டுமெனில்... மூன்று ஜன்மங்கள் என் பகைவர்களாகப் பிறந்து, என்னை துவேஷித்து, என்னாலேயே வதம் செய்யப்பட்டு வைகுண்டம் அடைவீர்கள். இதில் உங்கள் சித்தம் என்ன?'' - முடிவை அவர்கள் வசமே ஒப்படைத் தார் இறைவன்!
''ஸ்வாமி... நூறு ஜன்மங்கள்... அவ்வளவு காலம் தங்களைப் பிரிந்திருக்கும் சக்தி எங்களுக்கு இல்லை. மூன்றே ஜன்மங்கள்... உங்களின் பகைவர்களாகவே தோன்றி விரைவில் வைகுண்டத்தை அடைய அருளுங்கள்!''
அப்படியே அருள்புரிந்தார் அனந்தன். அதன்படியே அனைத்தும் நடந்தேறின!
கிருத யுகத்தில் இரண்யாட்சன்- இரண்ய கசிபுவாகப் பிறந்தனர் ஜய- விஜயர். பகவான், வராகமாக அவதரித்து இரண்யாட்சனையும், நரசிம்மமாக வந்து இரண்யகசிபுவையும் வதைத்தார்.
திரேதா யுகத்தில் ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பிறப்பெடுத்து, ஸ்ரீராமனால் வதைக்கப்பட்டனர்.
துவாபர யுகத்தில் சிசுபாலனாகவும் தந்தவக்ரனாகவும் பிறந்து ஸ்ரீகிருஷ்ணரால் அழிவைச் சந்தித்தனர்!
ஜய- விஜயர்கள் தொடர்பு உடைய இந்த அவதாரங் களுக்கு முன்னரே நிகழ்ந்தது ஸ்ரீமச்ச அவதாரம்! நாமும் ஸ்ரீமச்சத்தில் இருந்தே துவங்குவோம்... பகவானின் அவதாரப் பெருமைகளை!
முன்னதாக, தசாவாதார மகிமைகளை இந்த உலகுக்குச் சொன்ன அடியவர்களை அறிவதும் அவசியம்தான், இல்லையா?
வாருங்கள், அவர்களை அறிவோம்!

Comments