குங்குமப்பூ கொண்டு அர்ச்சனை நடத்தப்படும் குஸ்மேசம் குங்குமணேஸ்வரர் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது.
தேவகிரி மலையில் சுதர்மன் என் அந்தணர் சுதேகை என்பவளுடன் வாழ்ந்தார். சிவபக்தரான அவருக்கு குழந்தைப்பேறு இல்லை. குஸ்மா என்பவளை இரண்டாம் தாரமாக மணமுடித்தார். அவளும் சிவபக்தை. அவளும், சுதர்மனும் தினமும் ஒரு சிவலிங்கம் செய்து குங்குமப்பூவால் அர்ச்சனை செய்வர். அதை அங்குள்ள ஒரு குளத்தில் விட்டு விடுவார்கள். இதன் பலனாக குஸ்மாவுக்கு சுப்ரியன் என்ற மகன் பிறந்தான். அவன் மணப்பருவத்துக்கு வந்தான். ஒருநாள் சுதர்மனும் குஸ்மாவும் குளக்கரைக்கு சிவபூஜை செய்ய சென்று விட்டனர். வீட்டில் இருந்த சுப்ரியனை, முதல் மனைவி சுதேகை பொறாமையால் கொன்று விட்டாள். குஸ்மா லிங்க பூஜை முடித்து லிங்கத்தை குளத்தில் இட்டதும், உள்ளிருந்து சுப்ரியன் வந்தான். அப்போது சிவன் தோன்றி, ""சுதேகையால் உன் மகன் கொல்லப்பட்டான். அவனுக்கு உயிர் கொடுத்து உங்களிடம் ஒப்படைத்தேன். நீ லிங்கங்களை இட்ட இந்த இடம் இனி எனக்கு கோயிலாகும். குஸ்மாவின் பெயரால் எனது பெயர் "குஸ்மேசன்' என விளங்கும்,'' என்று அருள்பாலித்தார். அடியார் பெயரை ஆண்டவன் தனக்காக வைத்துக் கொண்டதால் இத்தலத்தை "ஜோதிர்லிங்கத் தலங்களின் கிரீடம்' என்று சொல்லலாம்.
இங்கு சிவாலய தீர்த்தம் இருந்தது. பெரியவர்களை நிந்தை செய்தால் இதில் நீராடி சாப விமோசனம் பெற்ற காலம் உண்டு. பிற்காலத்தில் இது சுருங்கி விட்டது. அபிஷேக நீர் மட்டும் இதில் எடுக்கிறார்கள். பாத்திரத்தில் தீர்த்தம் நிரப்பி பக்தர்கள் தலையில் தெளிப்பதும் உண்டு. கோயிலின் சுவர்களும் சிவப்பாக உள்ளன. கூம்பு வடிவத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக குஸ்மேஸ்வர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். இவரைத் தமிழில் "குங்குமணேஸ்வரர்' என்கின்றனர். லிங்கத்தின் அருகில் பளிங்குக்கல்லால் ஆன குஸ்மேஸ்வரி (பார்வதி) சிலை உள்ளது. சலவைக்கல் ஆமை ஒன்றும் இந்தக் கோயிலில் உள்ளது. ஆமை போல புலன்களை உள்ளடக்கி சிவனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவப்பான குழந்தை பிறக்க வேண்டி இங்குள்ள சிவனிடம் பக்தர்கள் சிலர் வேண்டுதல் வைக்கின்றனர்.தினமும் இங்கு ஐந்து முறை நடக்கிறது. இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் எல்லோரா குகை உள்ளது. இந்தக் குகையில் ஒன்றான கைலாயநாதர் குகையில் சிவபார்வதி நடனக்காட்சி, மகிஷாசுரமர்த்தினி, ராவணன் சிற்பங்கள் உள்ளன.
மும்பையில் இருந்து 430 கி.மீ., அவுரங்காபாத்தில் இருந்து 30கி.மீ.,
Comments
Post a Comment