''அகில உலகங்களையும் தன்னில் கொண்டவர்; அனைத்தும் தானே ஆனவர் ஸ்ரீமந்நாராயணன். அவரின் கல்யாண குணங்களையும், அற்புதங்கள் நிறைந்த அவரது லீலைகளையும் விவரித்து, வேதவியாசர் சொன்ன வியத்தகு காவியம் இது...''
- கணீரென ஒலித்த சூதமுனிவரின் குரலைத் தவிர, வேறு எந்த சத்தமும் இல்லை நைமிசாரண்யத்தில். அவரைச் சூழ்ந்திருந்த சௌனகாதி முனிவர்கள் மட்டுமல்ல... இயற்கை எழிலார்ந்த இந்த வனத்தின் மரங்களும், அவற்றின் கிளைகளில் அமர்ந்திருக்கும் மந்திகளும், பறவைகளும்கூட தத்தம் வழக்கத்தை மறந்து சூத முனிவரிடமே லயித்திருந்தன. ஆதிநாராயணனின் அவதாரக் கதைகளை கேட்கப் போகிறோம் என்ற சந்தோஷம் அவற்றுக்கு!
காலைக் கதிரொளியில் கோடிசூரியப் பிரகாசத்துடன் முகம் மலர, அகம் மகிழ தொடர்ந்து பேசினார் சூத முனிவர்... ''அன்பர்களே, பகவானின் அவதாரக் கதைகள்- கலியுகத்தின் கஷ்டங்களை நீக்கி மனதில் நிலையான பக்தியையும், சகல சம்பத்துகளையும், முடிவில் முக்தியையும் கொடுக்கும் வல்லமை பெற்றது!'' என்று சொல்லிக் கொண்டே போனார்!
மாலவனின் அவதாரக் கதைகளுக்கு இத்தனை மகத்துவமா?
ஆமாம்! பல்வேறு ஞானநூல்களும் சிலாகிக்கும் மாலவனின் அவதாரக் கதைகளை படிப்பவர்களும் கேட்பவர்களும் பெரும் பேறு பெற்றவர்கள் என்கிறது பாகவத மகாத்மியம். அதுசரி... இந்த அற்புதமான அவதாரக் கதைகளை சூத முனிவர் தெரிந்து கொண்டது எப்படி? ஸ்வாமியின் அவதாரங்கள் எந்தச் சூழலில் நிகழ்ந்தன?
- இதுகுறித்தே விரிவாக இந்தத் தொடரில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.மட்டுமின்றி... திருமாலின் அவதாரத் தொடர்புடைய தலங்களையும் தரிசிக்கப் போகிறோம்! அதற்குமுன், பெருமாளின் அவதாரங்களுக்கான காரண- காரியங்களை அறிவது அவசியம் இல்லையா?!
ஆதியந்தம் இல்லாத ஸ்ரீமகாவிஷ்ணுவே உலகின் ஆதியும் அந்தமுமாகத் திகழ்கிறார். இதை உணர்த்தவே... பகவான், பூமியில் தனது அவதாரங்களை எடுத்தருளினார் என்பது ஞானிகளின் கருத்து. மச்சம் முதலான திருமாலின் தசாவதாரங்களை உற்று கவனித்தால்... அவை, உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை, பரிபூரணமாக விளக்கி அருள்வதைக் காணலாம்.
ஆம்... அவர் யாதுமாகி நிற்பவர்!
பிரபஞ்சத்தின் மூலம் எது என்பது குறித்த ஒரு கேள்விக்கு எழுத்தாளர் சுஜாதா பதில் சொல்கிறார்: 'ஒருவிதமான பரமாணு மிக மிக ஆதிநாட்களில் வெடித்து (ஙிவீரீ ஙிணீஸீரீ) மொத்த சக்தியும் விண்வெளியில் பரவியிருக்கிறது என்கிறார்கள். அதற்குப் பல பௌதிக ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். ஆதியோடு அநாதி காலத்தில் சிருஷ்டியின் மிக முதல் கணங்களை, செகண்டுகளை- ஏன் முதல் மில்லி செகண்டு வரை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன் என்ன? எப்படி அந்த ஆதி அணு முதலில் வந்தது என்று கேட்பின் விஞ்ஞானம் அம்பேல்தான். சூன்யம்தான் என்கிறார்கள்!'
உண்மைதான்! இயற்கையின் பேராற்றலை, அதன் ரகசியத்தை எவரால் அறிய இயலும்? அந்த இறைவனே உணர்த்தினால்தான் உண்டு!
இதற்காகவும்தான்... அதாவது, 'பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை- தனது படைப்புத் தத்துவத்தை, தானே குருவாக இருந்து சொல்லாலும் செயலாலும் உபதேசிக்க முடிவு செய்த இறைவன், ஆனந்தக் கோலங்களில் அவதரித்தார்' என்று மகான்கள் சிலாகிப்பார்கள்!
கிருபானந்தவாரியார் கதை ஒன்று சொல்வார்...
புதிதாக பதவியேற்ற அரசன் ஒருவனுக்கு மூன்று சந்தேகங்கள். இறைவன் எங்கிருக்கிறான்? எந்த திசையை நோக்கியிருக்கிறான்? இந்த கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? - இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி அரசவைப் பண்டிதரை கேட்டுக் கொண்டான். பண்டிதர் திகைத்தார். ஒருநாள் அவகாசம் வேண்டிப் பெற்றுக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தார். வருத்தத்துடன் வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டறிந்தாள் அவரின் பேத்தி. 'அரசரின் சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன்' என்றாள்.
மறு நாள் அவைக்குச் சென்றாள். மன்னனுக்கு வியப்பு! அவனிடம், ''அரசே, உமது சந்தேகங்களுக்கு பதிலளிக்க, நானே போதும் என்று என்னை அனுப்பியிருக்கிறார் தாத்தா!'' என்றவள், பாத்திரம் நிறைய பால் கொண்டுவரச் சொன்னாள். பால் வந்தது! மன்னரிடம் அதைச் சுட்டிக் காட்டியவள், ''இதில் நெய் இருக்கிறதா?'' எனக் கேட்டாள். 'ஆமாம்' என்று மன்னன் தலையசைக்க, ''அந்த நெய், பாலில் எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்டுங்கள்!'' என்றாள் சிறுமி.
''அது எப்படி? பாலைக் காய்ச்சி உறைக்குத்தி, அது தயிராகிப் பக்குவப்பட்டால்தானே கடைந்து நெய் எடுக்க முடியும்!''- என்று சிரித்தான் மன்னன்.
சட்டென்று சொன்னாள் சிறுமி: ''அப்படித்தான் மன்னா!
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், பக்குவப்பட்ட வர்களுக்கு எளிதில் புலப்படுவான்!''
மன்னனுக்கு திகைப்பு. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''சரி... இறைவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டேனே?'' என்றான்.
உடனே அருகில் சுடர்விட்டுக் கொண்டிருந்த திரு விளக்கைச் சுட்டிக்காட்டிய சிறுமி, ''இந்த தீபம், எந்த திசையை நோக்கி ஒளி வீசுகிறது?'' என்று கேட்டாள்.
''தீப ஒளி, அனைத்து திசைகளிலும் பரவுமே!''- அரசன்.
''அதுபோலவே, இறைவனின் அருட் பார்வையும் எல்லா திசைகளிலும் வியாபித்திருக்கிறது!'' என்றாள். அரசனின் திகைப்பு அதிகரித்தது; அடுத்த கேள்வியைக் கேட்டான். ''இந்த கணத்தில் இறைவன் என்ன செய்கிறான்?''
''இதற்கு பதில் சொல்ல... சிறிது நாழிகை மட்டும் நான் அரச பொறுப்பேற்க வேண்டும்'' என்றாள் சிறுமி.
பதிலறியும் ஆர்வத்தில், வேறு எதையும் யோசிக்காமல் செங்கோலை சிறுமியிடம் ஒப்படைத்தான் அரசன். அவ்வளவுதான்... ''அரசனை சிறையில் அடையுங்கள்...மந்திரிகளை நாடு கடத்துங்கள்...'' - வரிசையாக ஆணை பிறப்பித்தாள் சிறுமி. மன்னன் அதிர்ந்தான். ''சிறுமியே... தெரிந்துதான் செய்கிறாயா?'' என்றான் பதைபதைப்புடன்.
இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தவள், ''பார்த்தீர்களா அரசே... கணப்பொழுதில் என்னை அரியணையில் அமர்த்தி, உங்களை புலம்ப வைத்துவிட்டார் இறைவன். இந்த கணத்தில் அவர் நிகழ்த்தியது இதுதான்!'' என்று கூறி விட்டு, மீண்டும் சிரித்தாள் சிறுமி. பரம்பொருளின் ரகசியம் மன்னனின் புத்தியில் உறைத்தது. ஓடோடி வந்து, சிறுமியை கட்டியணைத்து உச்சி முகர்ந்தான்.
நம்மில் பலரும், இந்த மன்னனைப் போன்றே அறியாமையில் சிக்கித் தவிக்கிறோம். இந்த அறியாமையை நீக்கி, இன்னருள் புரியவும்தான் அவதாரம் எடுத்தருளினாராம் ஸ்ரீவிஷ்ணு.
சரி, புராணங்கள் என்ன சொல்கின்றன?
'அவதாரம்' என்பதற்கு, 'பர நிலையில் இருந்து பரம்பொருள் கீழ் இறங்கி வருவது' என்று பொருள்.
ஸ்ரீமந்நாராயணன், இந்த உலகையும் உயிர்களையும் காத்துப் பரிபாலிக்க...
வைகுண்டத்தில்- திவ்வியாசனத்தில், பரிபூரணனாக எழுந்தருளியிருக்கும் பரத்வம்; பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகம்; அவதார நிலையில் விபவம்; உயிர்கள் ஒவ்வொன்றின் உள்ளும் உறைந்து நிற்கும் அந்தர்யாமித்வம்; கோயில்களில் விக்கிரகமாகவும் தீர்த்தங்களாக வும் அருளும் அர்ச்சம் ஆகிய ஐந்து நிலைகளில் வியாபித்திருக்கிறாராம்.
இவற்றில் விபவ நிலை கொண்டு பெருமாள் எடுத்த அவதாரங்களின் எண்ணிக்கை 22 என்கிறது பாகவதம். அவை: விராட புருஷர், நாராயணர், ஸனாதியர், விராஜர், ஹம்சம், நரசிங்கம், மோகினி, தன்வந்திரி, கூர்மம், மத்ஸயம், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், கபிலர், வாமனன், விருஷபயோகி, யாக புருஷர், நரநாராயணர், வியாசர், பரசுராமர், ப்ருகு, ராமன், கிருஷ்ணன்.
இவற்றுள், பத்து அவதாரங்களை வகைப் படுத்தி தசாவதாரமாகப் போற்றுகிறோம்!
இப்படி... பரந்தாமன் மேற்கொண்ட அவதாரங்களுக்கு மிக முக்கியமான வேறொரு காரணமும் உண்டு. அதை, கீதையில் கண்ணனே சொல்கிறான்:'எப்போதெல்லாம் தர்மம் நலிவுற்று அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தைக் காக்கவும் நான் அவதரிப்பேன்!'
ஆம்... தர்மம் காக்கவும்; உலகை ரட்சிக்கவும் யுகம்தோறும் நிகழ்ந்தன அவரது அவதாரங்கள்.
Comments
Post a Comment