சென்னையின் முக்கியப் பகுதிகளில் கோபாலபுரமும் ஒன்று. ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி இங்கே அழகுறக் கோயில் கொண்டிருப்பதால், இந்தப் பகுதிக்கு கோபாலபுரம் எனப் பெயர் அமைந்ததாம்!
1917-ஆம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில், சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது, பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது. அரசாங்க அனுமதியுடன் அதைச் சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோயில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று துவங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி.
அழகிய பசு நின்றிருக்க... நான்கு திருக்கரங்களில் புல்லாங்குழல் மற்றும் சங்கு, சக்கரங்களுடன் அழகுறக் காட்சி தரும் ஸ்ரீவேணுகோபாலரை கண்ணாரத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகுடன் காட்சி தரும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியை தரிசித்தால் போதும்... மனதுள் இருக்கும் பாரமெல்லாம் வடிந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள்.
ஆலயத்தில், திருமாலின் பத்து அவதாரங்களையும் சித்திரிக்கும் வகையிலான வெள்ளிக்கவசம் செய்யப்பட் டுள்ளது. கருவறையில், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி அழகிய திருக்கோலத்தில் காட்சி தர... ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீசீதாதேவி- லட்சுமணன் சமேத ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅனுமன் ஆகியோர் அற்புதமாக தனிச்சந்நிதிகளில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறும் ஆலயம் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரமான கோகுலாஷ்டமி நாள் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இங்கே ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்குப் பின்புறம் உள்ள பிருந்தாவன மண்டபத்தில் ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீதொட்டில் கிருஷ்ணர், ஸ்ரீராஜகிருஷ்ணர் எனப் பல அலங்காரங்களில் ஸ்ரீகிருஷ்ண பகவானைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்களாம். எனவே, அன்றைய நாளில் நள்ளிரவு வரை கோயில் நடை திறந்திருக்கும் என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.
மேலும், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளை முன்னிட்டு, உபந்யாசங்கள், கதாகாலட்சேபம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பஜனை என தினமும் மாலை வேளையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கோயிலில் உள்ள அரச மரம் சிறப்புக்கு உரிய ஒன்று. இந்த மரத்தில் ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மூவரும் உறைந்திருப்பதாக நம்பிக்கை. மரத்தடியில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி உள்ளது. இந்த விநாயகப் பெருமானின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததே ஸ்ரீகாஞ்சி மகானின் பேரருள்தான் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.
ஒருமுறை, மகா பெரியவா இந்தக் கோயிலுக்கு வந்து ஜபதபங்களில் ஈடுபட்டார். அப்போது கோயில் நிர்வாகிகளிடம், 'இந்த மரத்தடியில் விநாயகர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை பண்ணுங்கோ! இந்தக் கோயில் இன்னும் சிறப்பா வரும்’ என அருளிச் சென்றார். அதன்படி, மரத்தடியில் ஸ்ரீகணபதிக்கு சந்நிதி அமைக்கப்பட்டதாம். அரச மரப் பிள்ளையார் என்பதால் 'ஸ்ரீஅசோத்த மகாகணபதி’ எனும் திருநாமம் அமைந்தது பிள்ளையாருக்கு.
ஸ்ரீவிநாயகருக்குத் தோப்புக் கரணமிட்டு ஸ்ரீசிவா, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு ஆகியோரை மனதில் நினைத்தபடி சுற்றி வந்து பிரார்த்தித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை.திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாத வர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமாவாரம் என்பார்கள்) இந்த மரத்தை வழிபட்டு வர... விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்; பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர் பெண்கள்.
கோயிலில், கடந்த மாதம்தான் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இங்கு ஸ்ரீஐயப்ப ஸ்வாமி சந்நிதியில், உத்திர நட்சத்திர நாளில், அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை, மார்கழியிலும் மகர ஜோதி நாளிலும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி சந்நிதியைச் சுற்றி, 108 விளக்குகள் ஏற்றப்பட்டு, பூஜைகள் விமரிசையாகச் செய்யப்படு கின்றன. ஆலயத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கும் சந்நிதிகள் உள்ளன.
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு முத்தங்கி சேவை நடைபெறும்.
கேட்டதெல்லாம் கொடுக்கும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியை தரிசித்து நீங்களும் அருள் பெறுங்கள்.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.