இல்லறம் செழிக்க அர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்!


'கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்... சிவ- பார்வதிதான்! நாணயத்தின் ஒருபக்கம் எதுவுமின்றி இருந்தால், அது நாணயமாக மதிக்கப்படுமா? ஆக, ஆணும் பெண்ணும் சமம் என்பதை விளக்கும் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும்'' என்றார் உபந்யாசகர் விசாகா ஹரி.
சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் ஆலயத்தில் இவரின் உபந்யாசம் என்றதுமே வழக்கத்தைவிட களைகட்டியது கூட்டம். அவருடைய உபந்யாசத்தில் இருந்து சில துளிகள்... இங்கே!
''ஒரு விருட்சம் தழைத்து நிற்க மண்ணும் வேண்டும்; விதையும் வேண்டும். இதில் ஒன்று பழுதானாலும், விருட்சமாக வளர முடியாது. கணவன்-மனைவி ஒருமித்து இருந்தால்தான், குடும்பம் தழைக்கும்!
ஆணவம் அழிவைத் தரும்; அடக்கம் மேன்மையைக் கொடுக்கும். தட்சன் ஆணவக்காரன்; சிவபெருமானோ விருப்பு- வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தட்சனின் புத்தியும் செயலும் அகந்தையில் நிரம்பியிருந்ததால்தான், அவன் அழிந்து போனான்.
தட்சனின் அழிவுக்கு அகந்தை மட்டுமா காரணம்? இன்றும் பண்டிகை நாட்களில், நம் வீடுகளில் முதல்மரியாதை மாப்பிள்ளைகளுக்குத்தான், இல்லையா? மாமனார்கள் சிலர், மாப்பிள்ளை வந்ததும் எழுந்து நிற்பார்கள்; பணிவாகப் பேசுவார்கள். இன்னும் சிலர் கடவுள் அளவுக்கு மாப்பிள்ளையை உயர்த்தி வைப்பார்கள். ஆனால் ஆதிநாயகனாம் சிவபெருமானை கடவுள் என்றும் பாராமல், மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதையையும் வழங்காமல் புறக்கணிக்கலாமா? இந்தத் தவறைச் செய்த தந்தையை, தாட்சாயிணி மன்னிக்கவில்லையே? 'தனக்கு மரியாதை தராததால் தன்னைவிட இவள் அல்லவா பெருந்துக்கம் கொள்கிறாள்' என்று அந்தக் கணவன் சிவபெருமான் பூரித்து, புளகாங்கிதம் அடைந்து, தன்னில் ஒரு பாகத்தையே அவளுக்குத் தந்து, 'நீயும் நானும் ஒன்று' எனும் பேருண்மையை உணர்த்தினான்!
பர்வத ராஜகுமாரியாகப் பிறந்த பார்வதி, சிவபெருமானை அடைய விரும்பினாள். அடியவர்களுக்குச் செய்யும் தொண்டுதான், நம்மை இறைவனிடம் சேர்க்கும் என நம்பியவள், சிவனடியார்கள் மீது பணிவும் பக்தியும் கொண்டிருந்தாள். அதாவது, கணவனுக்குப் பிடித்தவர்களை, நமக்கும் பிடிக்க வேண்டும் எனும் இல்லறத்தின் கட்டமைப்பை, சிவ-பார்வதியைத் தவிர இவ்வளவு எளிதாக வேறு எவராலும் காட்டிவிட முடியுமா..?
சரி... அடியார்க்குச் செய்யும் சேவையைக் கண்டு, பார்வதியின் கரம் பிடித்துவிட்டாரா சிவனார்? கிழவராக வந்து, தன்னைப் பற்றியே அவளிடம் அவதூறாகப் பேசுகிறார். சிவனாரைக் கேலி செய்வதை பொறுக்க முடியாதவள், அவரின் குதர்க்கமான கேள்விகளுக்குக் கூட, எத்தனை தெளிவாக பதில் தந்தாள்!
ஆமாம்... லட்சியங்களை நோக்கிச் செல்லும்போது, இப்படி இன்னல்களும், தடைகளும், சோதனைகளும் வரத்தான் செய்யும். சம்பளம், உடல் உபாதை, வேலைப்பளு, உறவுக்காரர்களின் குறுக்கீடு என பல பிரச்னைகள் வந்தாலும் மனம் தளராமல், கணவனும் மனைவியும் கைகோர்த்து செயல்பட்டால், இணைந்து வாழ்ந்தால், நினைத்ததை சாதிக்கலாம்; சிவ-பார்வதியை... அர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; இல்லறம் செழிக்கும்; சிறக்கும்!

Comments