பெரணமல்லூர் ஸ்ரீவரதஆஞ்சநேயர்


கிரிவலம் வந்தால், முழுநலம் பெறலாம்!
திருவண்ணாமலையில் அருணாசல ஈஸ்வரனை கிரிவலம் வந்து வணங்குவது விசேஷம். இதேபோல் இந்த ஊருக்கு அருகில் உள்ள பெரணமல்லூரில், சிறு குன்றில் குடியிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீவரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்!
ஊர் முழுதும் மலைகளும் வயல்களும்தான்! இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு, கொஞ்சி விளையாடப் பிள்ளை இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது!
ஒருநாள், கணவனும் மனைவியுமாக வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பை யில் ஏதோ தட்டுப்பட... அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த தம்பதி வியந்து நின்றனர். அது... அழகிய அனுமன் விக்கிரகம்! பிறகு, அங்கே இருந்த சிறு குன்றின் மேல் அனுமனை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர்.
அடுத்த வருடமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஊரே வியந்தது; அனுமனைக் கொண்டாடி வழிபட்டது. அனுமனின் அருளாடல் மெள்ள மெள்ள அக்கம்பக்க ஊர்களுக்கும் பரவியது. இப்போது ஸ்ரீவரத ஆஞ்சநேயருக்கு தினமும் வடைமாலை, அபிஷேகம், ஆராதனை முதலான கோலாகலங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
முக்கியமாக... அமாவாசை நாளில் இங்கே கிரிவலம் வந்து அனுமனை வணங்கிச் சென்றால், மன தைரியம் கூடும்; சனி தோஷங்கள் நிவர்த்தியாகும்; திருமண வரம் ஸித்திக்கும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.
தலங்கள் பலவற்றிலும், ஸ்ரீராமபிரான் மற்றும் சீதாபிராட்டியை கை கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருவார் ஸ்ரீஆஞ்சநேயர். ஆனால், இந்தத் தலத்தில் அபய முத்திரையுடன் அருளும் பொருளும் வழங்கி, பக்தர்களுக்கு பரிபூரண நலனைத் தந்து வருகிறார் ஸ்ரீவரத ஆஞ்சநேயர்.
வியாழன் மற்றும் சனிக்கிழமை, அமாவாசை, அனுமன் ஜயந்தி, ஸ்ரீராம நவமி முதலான நாட்களில் ஸ்ரீஅனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், விசேஷ பூஜைகள், பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவற்றை ஸ்ரீவரத ஆஞ்சநேயர் ஆலய அறக்கட்டளையினர் விமரிசையாக நடத்தி வருகின்றனர். மேலும் கோயில் திருப்பணி வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை- நங்கநல்லூரில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கு கோயில் எழுப்ப முனைந்து, ஸ்ரீஅனு மனை விக்கிரகமாக வடிப்பதற்காக, அருகில் உள்ள இஞ்சிமேட்டில் இருந்து கல்லை கிரேன் மூலம் எடுத்துச் சென்றனராம்! அப்போது பெரணமல்லூரைக் கடக்க முடியாதபடி இடையூறுகள் ஏற்பட்டதாகவும், இஞ்சிமேடு அனுமன் கோயில் பட்டாச்சார்யரது அறிவுரையின் பேரில், பெரணமல்லூர் அனுமன் ஆலயத்துக்கு வந்து, அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னரே எந்தத் தடங்கலும் இன்றி கிரேன் சென்னைக்குச் சென்றதாகவும் ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
''இப்படி சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட வரத ஆஞ்சநேயர் கோயிலைப் புதுப்பித்து, விரிவுபடுத்தி, கும்பாபிஷேகம் நடத்த எண்ணியுள்ளோம். அனுமனின் அருளுடன் பக்தர்களின் பொருளுதவியும் கிடைத்தால், விரைவில் பணி முடிந்துவிடும்'' என்கின்றனர் ஸ்ரீவரத ஆஞ்சநேயர் ஆலய அறக்கட்டளையினர் (97903 87313).
வருகிற  ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளன்று, பெரணமல்லூர் ஆஞ்சநேயரை கிரிவலம் வந்து வணங்குங்கள்; வளம் பெறுங்கள்!
வந்தவாசியில் இருந்து 22 கி.மீ., ஆரணியில் இருந்து சுமார் 20 கி.மீ., செய்யாறில் இருந்து 22 கி.மீ., சேத்பட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரணமல்லூர்.

Comments