தெய்வச்செயல்புரம்! தாமிரபரணி நதி வடக்கில் இருந்து தெற்காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் அருமையாகக் குடிகொண்டு, அருளாட்சி செய்து வருகிறார் ஸ்ரீவிஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர்!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியின் மையப் பகுதியாக இரண்டு ஊர்களுக்கும் நடுவில், சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தெய்வச்செயல்புரம். வல்லநாடு, முறப்பநாடு என சுற்றிலும் தெய்வங்கள் சூழ்ந்துள்ள ஊர் என்பதால் தெய்வச்செயல்புரம் என்று ஊரின் பெயர் அமைந்ததாகச் சொல்வர்! தவிர, கிழக்கில் கருப்பண்ண சுவாமி, மேற்கில் பெருமாள் கோயில், வடக்கில் சிவாலயம், தெற்கில் ஸ்ரீவிநாயகர் கோயில் அமைந்துள்ளதால், இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்கின்றனர்.
சஞ்ஜீவி மலையை அனுமன் தூக்கி வந்தார், இல்லையா?அப்போது அந்த மலையில் இருந்து சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்ததாம்! இதில் விழுந்த ஒரு துண்டுதான் வல்லநாட்டு மலையாகத் திகழ்கிறதாம்!
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி எனும் அடியவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், இந்தப் பகுதியில் கோயில் கட்டும்படி உத்தரவிட்டாராம்! இதையடுத்து இந்தக் கோயில் உருவானதாகச் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள்.
சுமார் ஐந்தடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர். இதையடுத்து மூலவர் சந்நிதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.
மூலவருக்கு எதிரே ஸ்ரீராமபிரான் ஸ்ரீசீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தரும் சந்நிதியும் தென்கிழக்கு மூலையில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளது. தவிர, ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், சொர்ண பைரவர் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.
அம்பாளும் ஆஞ்சநேயரும் ஒருசேர அருள்பாலிப்பது காண்பதற்கு அரிய சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். ஆலயத்தின் ஸ்தல விருட்சம் - அரசமரம்.
ஸ்ரீஅனுமத் ஜயந்தி நாளில், பஞ்ச சூக்த ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை வெகு விமரி சையாக நடைபெறுகின்றன. குறிப்பாக, 108 லிட்டர் பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 1008 செந்தூர அர்ச்சனை, 1008 வடை மாலை சார்த்துதல் ஆகியன நடந்தேறும்.
இங்கே... அனுமனுக்கு வடைமாலை சார்த்த நினைத்தது நிறைவேறும்; தேங்காய் மாலை சார்த்தி வணங்க, பிரிந்த தம்பதி இணைவார்கள்; வெற்றிலை மாலை சார்த்த கல்வியில் சிறந்து விளங்குவர்; வெண்ணெய்க் காப்பு செய்து வழிபட்டால் நோயில் இருந்து விடுபடலாம்; துளசி மாலை சார்த்தி வழிபட, பதவி உயர்வு நிச்சயமாம்!
Comments
Post a Comment