பரந்தாமனின் பாதுகைகள்

புலி உறுமுது புலி உறுமுது.. நடு நடுங்குது.. வெவெலங்குது.. என்ன திரைப்பட பாடல்வரிகளை மாற்றி பாடுவதாக நினைக்கிறீர்களா? அதெல்லாம் இல்லை. பிலகிரி ரங்கநாதரை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு தான் இப்படி யெல்லாம் அனுபவங்கள் ஏற்படும். காரணம், அடர்ந்த காட்டின் வழியே பயணித்து, உயரமான மலை மீது ஏறினால் தான் அவரை தரிசிக்க முடியும். பிலகிரி என்றால் வெண்மையான மலை என்று அர்த்தம். வடமொழியில் ஸ்வேதாசலம், மைசூர் - பெங்களூர் இடையே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5091 அடி உயரத்தில், மலைமீது அமைந்திருக்கிறது பிலகிரி ரங்கன்னா கோயில். தமிழகத்தில் ரங்கநாதர் காவிரிக்கரையில் இருப்பது போல் இங்கும் காவிரிக்கும் கபில நதிக்கும் இடையே தான் இத்தலம் அமைந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் இந்த ரங்கநாதரை ஆதியில் பூஜித்தவர், வசிஷ்ட மாமுனிவர். பிள்ளை வரம் கேட்டு வழிப்பட்ட அவருக்கு இத்தலத்து பெருமாளின் அருளால் பிறந்தவரே சக்திமுனிவர். அவரது சந்ததியினரே பராசர், வியாசர், சுகமுனிவர் ஆகியோர்.
கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருப்பதால் தன் பக்தர்களை காத்திட பகவானே இங்கே வேட்டைக்காரன் வடிவில் வலம் வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதற்கான ஆதாரமாக கோயிலில் ஓர் அதிசய சாட்சியும் இருக்கிறது. அது என்ன என்பதை பார்ப்தற்கு முன் கோயிலை வலம் வந்துவிடுவோமா? பலி பீடமும் பெரிய்ய்ய கொடிமரமும் முன் நிற்க, பகவானின் திருக்கோலங்கள் தாங்கிய முகப்பு வரவேற்க, தலை தாழ்த்தி பணிந்து உள் செல்கிறோம். கம்பீரமாகவும், கலை அழகுட னும் காட்சி தரும் தூண்கள், ராமாயண, மகாபாரத காட்சிகளை தாங்கி நிற்கின்றன.
எழிலான கிருஷ்ணர், ஏகாந்தமான சரஸ்வதி, சாந்தமான சதாசிவன், பக்தபாவ அனுமன் போன்ற தெய்வத் திருவடிவங்களும் ஆதுண் சிற்பங்களாக அமைந்துள்ளன.
ரங்கநாதர், ஸ்ரீநிவாசர், வேங்கடேஸ்வரர் எனும் திருநாமங்களால் அழைக்கப்படும் இத்தலத்து மூலவரை முழுமனதும் ஒன்றி சேவித்து விட்டு, வலம் வருகிறோம். வசிஷ்டரின் பிள்ளை இல்லாக் குறையை தீர்த்த இவர் தன்னை வணங்குவோரின் எக்குறையையும் தீர்ப்பதில் வல்லவர். மகாலட்சுமி தாயார் தனிச்சன்னதியில் திருக்காட்சி அளிக்கிறாள். செல்லமகளை வழிபடுவோர் வாழ்வில் செல்வங்கள் அனைத்தும் சேரும் என்பதும் நிச்சயம்.க்ஷ
கோயிலை வலம் வரும்போது ஓரிடத்தில் மிகப்பெரிதான காலணிகள் இரண்டினை காணலாம். பகவானின் பாதுகைகள் இவை என்கிறார்கள். இப்பகுதி பக்தர்களை காப்பதற்காக தினமும் இரவு நேரத்திதல் வனப்பகுதியில் காவல் வலம் வரும் நேரத்தில் வனப்பகுதியில் ரங்கநாதர் அவற்றை அணிந்து கொள்வாராம். அதனை உறுதிப்படுத்துவதுபோல், இக்காலணிகள் குறிப்பிட்ட காலத்தில் தேய்ந்து கிழிந்துவிடுவதும், புதிய காலணிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதும் வாடிக்கையாக இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் இக்கோயிலில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ஆனந்தமாக ஆராதனைகள் நடத்துவது கண்கொள்ளா காட்சி.
காட்டுவழியே ஒரு வித்தியாசமான பயணணம் கண்குளிரும் இயற்கை காட்சிகள், மலைமேல் அமைந்திருக்கும் கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் ஆரோக்யம். எல்லாவற்றோடும் பகவானின் பாத அணிகளை தரிசிக்கும் பாக்கியம் இவற்றோடு அரங்கனின் அருளால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும். இந்த கோயிலுக்கு செல்ல? பெங்களூரிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், மைசூரிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிலகிரி மலை.

Comments