பித்ரு தோஷம் போக்கும் தலம்!

மூவராய் அருள் பாலிக்கும் ஒரு பாண லிங்கத்தின் உயரம் 11 அடி 3 அங்குலம் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும்.
பனமங்கலம் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கும் வாரணபுரீஸ்வரரின் திருமேனி அமைப்பு இப்படித்தான் உள்ளது.
11 அடிக்கும் அதிகமான மகா உயரத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திருமேனியில் சுமார் இரண்டரை அடி உயரம் ஆவுடையார் மீதும்; மீதமுள்ள பகுதி அவுடையாரின் உள்ளேயும்; ஆவுடையாருக்கு அடியிலும் பதிக்கப்பட்டுள்ளது.
உளிபடாத லிங்கத் திருமேனியாக இங்கு காட்சியளிக்கும் இறைவன் சுயம்புலிங்கம் என்கின்றனர்.
இறைவனின் திருமேனில் பட்டை பட்டையான பதிவுகள் காணப்படுகின்றன. இறைவனின் நிறமும் சற்றே பொன் நிறமாகக் காணப்படுவது கண்டு நாம் சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது.
இறைவியின் பெயர் வடிவாம்பிகை.
இறைவிக்கு நான்கு கரங்கள். மேல் இருகரங்களில் தாமரை மலரை சுமந்தபடியும்; கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு!
கோ செங்கோட்சோழன் காலத்தில் மாடக்கோயில் அமைப்பிலான இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
முற்றிலும் கருங்கற்களாலேயே இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.
பழுதடைந்த இந்த ஆலயத்தை சீரமைத்து புதுப்பொலிவு தரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாலாலயம் நடைபெற்றதால் அனைத்து இறைவன் இறைவி திருமேனிகளும் தனிக்கோயில் போல் அமைந்திருக்கும் ஒரு மண்டபத்தில் முறைப்படி வைக்கப்பட்டுள்ளன.
ஆலயங்களில் நடைபெறும் அனைத்த விசேஷங்களும் இங்கு நடைபெறுகின்றன.
பிரமாண்ட உயரம் கொண்ட மூலவரை இடமாற்றம் செய்ய இயலாது என்பதால் மூலவருக்குப் பதில் ஒரு சிவலிங்கத்தை அந்த அறையில் முறையாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இந்த மூலவர் திருமேனி அத்திமரத்தால் ஆனது.
இறைவன், இறைவி தவிர பாலசுப்ரமண்யர், வள்ளி, தெய்வானை, பாலகணபதி, சண்டீஸ்வரர், கால பைரவர், நவகிரக நாயகர்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்தின் மேற்குதிசையில் ஆலயத்தின் திருக்குளம் உள்ளது. இங்கு நீராடி இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
பங்கு உத்ரம், சஷ்டி, சோமவாரங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பங்குனி உத்ரம் அன்று ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பால்குடம் சுமந்து வருவதும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதும் பரவசமளிக்கும் காட்சியாகும்.
சுமார் நூறு குடங்களுக்கு மேல் பக்தர்களால் சுமந்து வரும் பால் குடங்களால் அன்று முருகப் பெருமானுக்கு குளிர குளிர அபிஷேகம் செய்யப்படுகிறது.
மறுதினம் முருகனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும்; அன்று முருகன் தன் துணைவியர்களுடன் வீதியுலா வந்து பக்தர்களை பரவசப்படுத்துவதும் வழக்கமாக நடைபெறும் சம்பவமாகும்.
குழந்தை வேண்டியும், நல்ல இடத்தில் திருணமாக வேண்டியும், ராகு, கேது நிவர்த்திக்காகவும் பக்தர்கள் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொள்ள, அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் இந்த சோழர் கால ஆலயத்தில், பணிகள் விரைந்து நடைபெற்று, குடமுழுக்குத் திருவிழா விரைவில் நடக்க பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் காத்திருப்பது நிஜமே!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் பனமங்கலம் கிராமத்தில் வாரணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது!

Comments

  1. பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.



    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

    இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.




    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது


    21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்




    A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR

    MOBILE-9910738463/96505720/011-27307584

    ReplyDelete

Post a Comment