பகவானுக்கு எதைக் கொடுப்பது?

சங்கீத கச்சேரிக்கு நீங்கள் போயிருக்கலாம்; பலவித பாடகர்கள் பாடியதை கேட்டிருக்கலாம். "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்று துவங்கும் பாடலை ஒரு கச்சேரியில், பாடகர் பாடியதும் சபையில் இருந்தவர்கள் ஒரேயடியாக சிரித்து விட்டனர். 
காரணம், பாடிய பாடகர் இரட்டை நாடிக்காரர்! "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்றால், சரீரம் இளைத்து விட்டது என்று பொருளல்ல! "பிறப்பதும், இறப்பதுமாக இப்படி எத்தனையோ ஜென்மங்கள் எடுத்தெடுத்து, என் உள்ளம் தேய்ந்து, இளைத்து விட்டது. பிறவியே இல்லாமல் உன்னையே (பகவானையே) அடைவது எப்போது?' என்று, உள்ளம் உருகிப் பாடும் பாடல் இது. இதை இரட்டை நாடியான அவர் பாடும்போது, சபையினர் சிரித்து விட்டனர்.
முக்தியை எப்படி பெறுவது? எந்த கடையிலும் அது கிடைக்காது. புண்ணியம் செய்தவர்களின் ஆத்மா மேலுலகம் போனால், அங்கே தான் கிடைக்கும் முக்தி. அதற்கு பகவானிடம் பக்தி இருக்க வேண்டும்; இதயத்தில், பகவானிடம் பக்தி பெருக வேண்டும்; பகவானின் நாமத்தை சொல்வது, காமக் குரோதங்களை விட்டு விடுவது போன்ற நற்குணங்களை பெற்று, பக்தர்கள் மேலே போனால், முக்தி கிடைக்கும்.
அது, ஒரே பிறவியில் கிடைத்து விடாது. முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் பக்தி இருக்குமானால் முக்தி கிடைக்கலாம். இந்த பக்தி சிறுவயதிலேயே இருந்திருந்தால், அது என்றும் நிலைத் திருக்கும். கடைசி காலத்தில் கூட, பகவான் நாமா வாக்கில் வரும். கடைசி காலத்தில் பகவான் நாமாவைச் சொல்லி உயிர் விட்டவனுக்கு முக்தி கிடைக்கும். 
பாகவதத்தில் அஜாமிளன் சரித்திரம் இதற்கு ஒரு உதாரணம்.
மனதை பகவானிடம் வைத்து விட வேண்டும்; வேறு எதிலும் வைக்கக் கூடாது. அப்படி இருந்து விட்டால், ஒரு ஜென்மா இல்லா விட்டாலும், மற்றொரு ஜென்மாவில் முக்தி கிடைக்கும். பகவானிடம் எல்லா ஐஸ்வர்யங்களும் உள்ளன. நம்மிடம் உள்ள பொருட்கள் யாவும் அவன் கொடுத்தது. அப்படி இருக்க, நாம் பகவானுக்கு எதைக் கொடுப்பது? அவனுக்குக் கொடுக்க நம்மிடம் ஒன்று உள்ளது; அதுதான் பக்தி. பகவானுக்கு நம் நெஞ்சில் சிறிய இடமாவது கொடுத்து, அவனிடம் பக்தி செய்தால், முக்தி பெறலாம்.
நாம் இதற்குத் தான், பாடுபட வேண்டும். மற்றபடி செல்வம், சுக துக்கம் எல்லாம் விதி வசப்பட்டு நிற்பவை. பக்தி, பக்தி மார்க்கம் இவை தான் முக்திக்கு ஆதாரம். மனம் இதில் ஈடுபட வேண்டும். மற்ற களியாட்டங்களெல்லாம் முக்திக்கு வழியாகாது.
***

ஆன்மிக வினா-விடை!
மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை, அதிக அளவில் ஈர்க்கும் சக்தி மாவிலையில் உண்டு. அதனால் தான் மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள், பண்டிகை, கும்பாபிஷேகம் ஆகியவற்றின் போது, மாவிலை தோரணம் கட்டுகின்றனர்.
***

Comments