கட்டளைக்குப் பணிந்தது கடல்!

அந்தத் தீவில் எல்லோரும் வணிகத்தை முடித்துக் கொண்டு காவிரிப்பூம் பட்டினம் திரும்பும் நாளும் வந்தது. அவரவரும் தாம் வணிகத்தில் சேகரித்த செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு கப்பலேறினார்கள்.
மருதப்பிரானோ தம்மிடம் எஞ்சிய கொஞ்சப் பணத்திற்கு வரட்டிகளையும், அவல் பொரியையும் மூட்டை மூட்டையாக வாங்கி கப்பலில் அடுக்கினார். கப்பல் ஆடி அசைந்துக்கொண்டு மெல்லப் புறப்பட்டது.
கப்பலில் பயணம் செய்த மருதப்பிரானின் நண்பர்கள் அனைவரும் அவரைப் பார்த்துப் பார்த்து வருந்தினார்கள். பூம்புகாரில் அவரது தாய் தந்தை அவர் பெரும் செல்வத்தோடு வருவார் என்றல்லவா எதிர்பார்த்திருப்பார்கள்? ஆனால் இந்தப் பிள்ளை வரட்டியையும் அவலையும் மூட்டை மூட்டையாக வாங்கி அவற்றை எடுத்துக் கொண்டு செல்கிறதே?
பார்க்க லட்சணமான பிள்ளை. ஆனால் என்ன செய்ய? திடீரென புத்தி பேதலித்துவிட்டது. நண்பர்கள் பெருமூச்சு விட்டார்கள்!
அப்போது யாரும் எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கின. இயல்பாக இருந்த வானிலை திடீரென மாறத் தொடங்கியது. பிரளய காலம் வந்ததுபோல் கனமழை பிடித்துக் கொண்டது. கப்பல் திக்குத் திசை தெரியாமல் எங்கெங்கோ சென்றது. கடும்புயலில் அகப்பட்ட கப்பல் தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கியது.
எத்தனை நாட்களில் பூம்புகார் போய்ச் சேர்வோம் எனக் கணக்கிட்டிருந்தார்களோ அதைப்போல் நான்கு மடங்கு நாட்கள் ஆகியும் புகார் கண்ணுக்குத் தெரியவில்லை. இயற்கையின் சீற்றம் குறித்து யாரிடம் புகார் செய்ய முடியும்?
எல்லோரும் அஞ்சி வெலவெலத்துப் போனார்கள். கூட்டுக்குள் நடுங்கும் பறவைகள் போல் உயிர் மிஞ்சுமா என்ற அச்சத்தோடு நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள். பயணிகள் கொண்டுவந்திருந்த உணவுப் பொருள் அனைத்தும் சாப்பிட்டுத் தீர்ந்து போயிற்று. பசி உயிரை வாட்டியது. ஆனால் சாப்பிடத்தான் எதுவும் மீதமில்லை.
இந்தச் சூழலைப் பற்றி எதுவும் வருந்தாமல் மருதப்பிரான் கப்பலின் மேல்தளத்தில் கூரையடியில் ஒய்யாரமாகச் சாயந்துகொண்டு கோபத்துடன் சீறும் இயற்கையை ரசித்தவாறிருந்தார்! அவருக்கு உணவுப் பொருள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அதுதான் மூட்டை மூட்டையாக அவல் கொண்டு வந்திருக்கிறாரே? பசியெடுத்த நேரத்திலெல்லாம் ஆனந்தமாக அவலைச் சாப்பிட்டவாறிருந்தார் அவர்.
திருமாலாயிருந்தால் கிருஷ்ணாவதாரத்தில் குசேலர் அவல் கொண்டு வந்து கொடுப்பார். சிவனானதால் தாமே அவல் எடுத்துக் கொண்டுவர வேண்டிய நிலைமை. அவ்வளவுதான் வேறுபாடு என்று நினைத்துக் கொண்டது அவர் மனம்!
கடும்குளிரைப் பற்றியும் அவர் அக்கரைப்படவில்லை. தாம் கொண்டு வந்த வரட்டிகளில் நெருப்பு மூட்டி அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
எப்படி முன்யோசனையாக இதையெல்லாம் அவரால் திட்டமிட முடிந்தது என்று நண்பர்கள் திகைத்தார்கள். தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாகக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் எல்லாம் ஒவ்வொருவராக அவரிடம் வந்தார்கள்.
“ஐயா! பசி உயிர் போகிறது. கொஞ்சம் சாப்பிட அவல் தர முடியுமா? குளிரால் நடுங்கிச் செத்துவிடுவோம் போலிருக்கிறது. குளிர்காய கொஞ்சம் வரட்டிகள் தர இயலுமா?’
மருதப்பிரான் அனைவரையும் கனிவோடு பார்த்தார். கடவுள் இருப்பதே அருள்வதற்குத்தானே? அருள்புரிவது தானே இறைவனின் ஒரே வேலை! ஆனால் இப்போது அவர் வணிகர். ஏற்ற வேடத்திற்குப் பொருத்தமாக நடந்துகொள்ள வேண்டாமா? எனவே வணிகம் பேசினார்!
“அன்பர்களே! யார் யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு அவலையும் வரட்டிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பசியாறுங்கள். குளிர்காயுங்கள். ஆனால் எந்த அளவு எடுத்துக் கொண்டீர்களோ அதே அளவு அவலையும் வரட்டிகளையும் ஊருக்குப் போனதும் திருப்பித் தருவதாக இப்போதே உறுதி பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்! அது மட்டும்தான் வணிகத்திற்கான நிபந்தனை!’
உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுப்பதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்பதல்லவா அவர்களின் அப்போதைய நிலை!
மேலும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மருதப்பிரான் கூடுதலாக விலை வைத்து வணிகம் செய்வதாகவும் தெரியவில்லை. எடுத்துக் கொண்ட அதே அளவு அவலையும் வரட்டியையும் தானே திரும்பக் கேட்கிறார்! கொடுத்துவிட்டால் போயிற்று.
எல்லாப் பயணிகளும் மகிழ்ச்சியோடு உறுதிப் பத்திரம் எழுதித் தந்துவிட்டு அவலையும் வரட்டிகளையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டார்கள். தாம் நடத்த விரும்பிய திருவிளையாடலின் ஒரு பகுதி முடிந்ததும் மருதப்பிரான் கடலை நோக்கி கையசைத்தார். ஆகாயத்தை நோக்கி அருட்பார்வை வீசினார். கடல் கொந்தளிப்பு அடங்கியது. வானம் கட்டுக்குள் வந்தது. புயல் ஓய்ந்தது.
சிறிது நேரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் கரையும் தென்பட்டது. பயணிகள் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். பூம்புகாரில் கால்வைத்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
தாங்கள் இன்று உயிரோடு திரும்பியதற்குக் காரணம் மருதப்பிரான் உண்ணக் கொடுத்த அவலும் குளிர்காயக் கொடுத்த வரட்டிகளும் தான் என்பதை அவர்கள் நன்றியோடு நினைத்துக் கொண்டார்கள். உறுதிப்பத்திர வாக்குறுதிப் படி தாங்கள் எடுத்துக் கொண்ட அதே அளவு அவலையும் வரட்டிகளையும் புகாரிலிருந்து வாங்கி மருதப்பிரானிடம் உடனடியாகத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
மருதப்பிரான் கப்பலை விட்டு இறங்கிக் கரையிலேயே மூட்டைகளோடு அமர்ந்திருந்தார். அன்பர்கள் திருப்பிக் கொடுத்த அவல், வரட்டி ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மூட்டைகளின் எண்ணிக்கைக்கு கணக்கு சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு மூட்டையாக எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தங்கள் வளர்ப்பு மகன் வணிகத்தை முடித்துக் கொண்டு, கப்பலில் புகாருக்குத் திரும்பிவிட்டான் என்ற சேதி வெண்காடரையும் சிவகலையையும் எட்டியது. அவர்கள் மகனைப் பார்க்கக் கடற்கரை நோக்கி ஓடோடி வந்தார்கள்.
அதற்குள் அவர்களை வழிமறிந்தான் கப்பலில் வந்த பயணி ஒருவன். அவர்கள் மகன் மருதப்பிரானுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது என்று மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்தான்.
இல்லாவிட்டால் வணிகம் செய்து சம்பாதித்த காசையெல்லாம் வணிகம் செய்யச் சென்ற தீவிலேயே திருப்பணிக்குச் செலவிடுவானா? எஞ்சிய சொற்பக் காசிலும் பொன்னோ பெருளோ வாங்கி வராமல் வரட்டிகளையும் அவலையுமா வாங்கி வருவான்?
தங்களுக்குப் புயலிலும் குளிரிலும் அவை பயன்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் தான் விற்ற வரட்டிக்கும் அவலுக்கும் பதிலாகக் கூடுதலான காசைக் கேட்காமல் அவற்றையே அதே அளவு திரும்பக் கேட்டுப் பெறுவது என்பது சாமர்த்தியமான வணிகமா?
போங்கள்! போய் பாருங்கள். மூட்டை மூட்டையாக வரட்டியும் அவலும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!
ஏளனத்தோடு சொல்லியவாறே அவன் விடைபெற்றான். திருவெண்காடர் திகைத்துப் போனார். அவர் மனம் பதைபதைத்தது.
என்ன கொடுமை இது! கப்பலில் பலநாள் சென்று வணகம் செய்து பெற்றுவந்தது வெறும் வரட்டியும் அவலும் மட்டும்தானா? இப்படியுமா ஒரு பிள்ளை வணிகம் செய்வான்? குலத்தொழில் கல்லாமல் பாகம்படும் என்பார்களே? ஆனால் இவனுக்கு வணிகம் செய்யத் தெரியவில்லையே?
அதுசரி. இவன் நமது வளர்ப்பு மகன் தானே? எங்கிருந்தோ கிடைத்த பிள்ளை. ஏற்கெனவே இருக்கும் நம் சொத்தைக் கரைக்கத்தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது.
வருத்தத்தோடு தம் மனைவி சிவகலை பின்தொடர ஓடோடி கடற்கரைக்கு வந்த வெண்காடர் அந்தக் காட்சியைக் கண்டார். வரட்டி மூட்டைகளையும் அவல் மூட்டைகளையும் தம் மகன் ஏதோ பொக்கிஷம்போல் காவல் காத்துக் கொண்டிருந்த காட்சி!
பலநாள் கழித்து மகனைப் õபர்த்த மகிழ்ச்சியையும் மீறி அவர் மனத்தில் கோபம் பொங்கியது.
நீ வணிகம் செய்த லட்சணம் இந்த வரட்டி மூட்டைகளும் அவல் மூட்டைகளும்தானா? என் சொத்தைக் கரைக்கத்தான் என் பிள்ளையாக வந்தாயா நீ?
வெண்காடர் கடும் கோபத்தோடு வார்த்தைகளை அள்ளி வீசினார். மருதப்பிரான் உணர்ச்சிவசப்படாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் கலகலவென்று நகைத்தான். அந்த தெய்வீகச் சிரிப்பைப் பார்த்த சிவகலை திகைத்தாள்.
“தந்தையே! இந்த மூட்டைகளை வீட்டில் கொண்டுபோய் அடுக்க ஏற்பாடு செய்யுங்கள். தாயே! நான் இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்!’
இப்படிச் சொல்லிவிட்டுச் சடாரென்று எங்கோ விரைந்து சென்று மறைந்தான்.
வெண்காடர் சோர்வோடு மூட்டைகளையெல்லாம் வீட்டில் கொண்டு அடுக்க ஏற்பாடு செய்தார். அவ்விதம் அடுக்கிய கூலியாட்களுக்குக் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு, தம் வீட்டுக் கூடத்தில் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளையே விரக்தியோடு சற்றுநேரம் பார்த்தவாறிருந்தார்.
பின் கடும் எரிச்சலுடன் ஒரு வரட்டி மூட்டையைக் காலால் எட்டி உதைத்தார். அந்த மூட்டையில் இருந்த ஒரு வரட்டி கீழே விழுந்து சிதரியது. அதன் உள்ளிருந்து மாணிக்கமும் மரகதமும் வைடூரியமும் கூடத்தில் சிதறி ஒளி வீசின!
வெண்காடர் அடைந்த திகைப்பிற்கு அளவே இல்லை. பரபரவென்று ஓர் அவல் மூட்டையை அவிழ்த்தார். அவலுக்கு உள்ளே முத்துகளும் தங்கக் கட்டிகளும் பளபளத்தன.
பின்னர் கையில் கிடைத்த மூட்டைகளையெல்லாம் அவிழ்த்துக் கூடத்தில் கொட்டினார். அந்தக் கூடம் முழுவதும் வைர வைடூரியங்களாலும் மரகத மாணிக்கக் கற்களாலும் தங்கம் வெள்ளி இவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களாலும் நிரம்பியது.
இவருக்கு ஆனந்தத்தில் அழுகை வந்தது. இவ்வளவு செல்வமும் எனக்கா! உண்மையிலேயே அவர் விம்மி விம்மி அழலானார். “சிவகலை! சிவகலை!’ என்று தம் மனைவி பெயரைச் சொல்லிக் கூவினார். அதிர்ச்சியில் அவர் உடல் படபடத்தது. தூணைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டார் அவர்.
அப்போது அவர் மனைவி அவரைத் தேடி வந்தாள். அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அது ஆனந்தக் கண்ணீர் அல்ல. அவள் கையில் ஒரு சிறு மரப் பேழை இருந்தது. அந்தப் பேழையைத் தன் கணவர் கையில் கொடுத்துவிட்டு அவள் செயலோய்ந்து தானும் தரையில் அமர்ந்துகொண்டாள்.
வெண்காடர் பெரும் திகைப்படைந்தவராய், “யார் கொண்டுவந்து தந்தார்கள் இந்தப் பெட்டியை?’ என்று வினவினார். “நம் மகன் மருதப்பிரான் தான் இந்தப் பெட்டியைத் தங்களிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார்!’
“இப்போது அவன் எங்கே?’
“யாருக்குத் தெரியும்? இதைக் கொடுத்தான். உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னான். பிறகு போய்விட்டான். எவ்வளவோ நாள் கழித்து என் பிள்ளையை பார்த்தேன். என் கையால் ஒரு பிடி உணவுகூட உண்ணாமல் சென்றுவிட்டான். ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்கிறோம். நம் மகனுக்கு இன்று உணவு தர நம்மால் இயலவில்லை. நீங்கள் ஏன் அப்படி கோபித்துக் கொண்டீர்கள் அவனை? இதோ இந்தக் கூடமெல்லாம் சதறிக் கிடக்கும் முத்தும் மணியும் மரகதமும் எப்படி எங்கிருந்து வந்தன?’
சிவகலை கேட்ட கேள்விகளுக்கு வெண்காடரிடம் பதில் இல்லை. பிள்ளையாக வந்தவன் யார்? இப்போது அவன் எங்கே? அவன் தன்னிடம் கொடுக்கச் சொன்ன இந்தப் பேழையில் என்னதான் இருக்கிறது?

Comments