ஒருமுறை வியாசரை சந்தித்த தர்மபுத்திரர் அவரை வணங்கி, ''தவசீலரே! கலியினால் உண்டாகும் துன்பங்களை அகற்ற, சுலபமான ஒரு வழியைக் கூறி அருளுங்கள்!'' என்றார்.
அப்போது தருமருடன் வந்த பீமன் ஒரு கேள்வி கேட்டான்: ''முனிசிரேஷ்டரே! உடன் பிறந்தவர்களும் தாயும் மனைவியும் நீங்கள் சொன்ன ஏகாதசி விரதத்தைச் செய்கிறார்கள். என்னையும் உபவாஸம் இருக்கச் சொல்கிறார்கள். ஒருபொழுது இருப்பதே என்னால் முடியாத காரியம். அப்படிப்பட்ட நான் எப்படி உபவாஸம் இருப்பேன்? மேலும் என் வயிற்றில் 'விருகம்’ என்று ஓர் அக்னி இருக்கிறது (இதனால் பீமனுக்கு 'விருகோதரன்’ என்றும் பெயர் உண்டு!). திருப்தியாக சாப்பிட்டால் அன்றி, அது அடங்குவதில்லை. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாஸம் இருக்க முடியும். அதன் மூலம் எல்லா ஏகாதசிகளின் பலனையும் நான் பெற வேண்டும். அப்படிப்பட்ட ஓர் ஏகாதசியைப் பற்றிச் சொல்லுங்கள்!'' என வேண்டினான்.
''எல்லாத் துன்பங்களும் நீங்குவதற்கு, ஏகாதசி உபவாசத்தைத் தவிர, வேறு வழியேதும் இல்லை. சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே!'' என்றார் வியாசர்.
வியாசர் விளக்க ஆரம்பித்தார்: ''பீமா! உனது இந்தக் கேள்விக்கு... ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா என்னிடம் சொன்னதையே பதிலாக தருகிறேன். நீ கேட்டபடி ஓர் ஏகாதசி உண்டு. அதற்கு 'நிர்ஜலா ஏகாதசி’ என்று பெயர். தண்ணீர் கூடக் குடிக்காமல் அன்று விரதம் இருக்க வேண்டும். அதனால் அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. ஆனி மாத வளர்பிறையில்
வரும் அந்த ஏகாதசியன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபடு! இதன் மூலம் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்!'' என்றார் வியாசர்.
அப்படியே செய்தான் பீமன். இதனால் இந்த ஏகாதசி 'பீம ஏகாதசி’ எனப் பெயர் பெற்றது. பீமன், அன்று முழுவதும் தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான். அதனால் அந்த துவாதசி 'பாண்டவ துவாதசி’ எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள்.
Comments
Post a Comment