64 யோகினிகள் - பராசக்தியின் பரிவார தேவதைகள்

நம் நாட்டில் எத்தனையோ வகையான தெய்வ வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றுள் மிகப் பிரபலமானதும் பொது மக்களால் மிகவும் கடைப்பிடிக்கப்படுவதுமான வழிபாடு சாக்தம் எனப்படும் சக்தி வழிபாடாகும். ஆதி சங்கரர் முதல் சகல சித்திகளும் கைவரப் பெற்றவருமான கோரக்கச் சித்தர் வரை அன்னை ஆதிபராசக்தியை வழிபாட்டு அவள் பாத கமலங்களைச் சரணடைந்து பலனடைந்தவர்கள் பலகோடி.
அந்த சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான பரிவார தேவதைகளாக விளங்குபவர்கள்தான் 64 யோகினிகள் என்ற அன்னையின் உடல் பாகங்களிலிருந்து தோன்றிய சக்திகள். இவர்கள் 64 கலைகளின் குறியீடுகளாக காண்பவர்களும் உண்டு. இவர்களை வணங்கி வழிபடுபவர்களுக்கு எந்தப் பிணியும் வராது காக்கும் வல்லமை படைத்தவர்கள் இவர்கள். இந்த 64 யோகினியரில் எட்டுப் பேருக்கு ஒன்று என்ற வகையில் உருவம் கொடுத்து “அஷ்ட மாத்ருகா’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அந்த அஷ்ட மாத்ருகா வழிபாடே நாளடைவில் சப்த கன்னியர் அல்லது சப்த மாதர்கள் என்ற பெயரில் மருவி ஏழு அன்னையர்களாக மாறி விட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட சில தகடுகளில் ஏழு அன்னையரின் உருவம் பொறிக்கப்பட்டத் தகடுகளும், காசுகளும் இருந்தன என்பது இந்த வழிபாட்டின் தொன்மையை நமக்கு நன்கு விளங்குகிறது.
பொதுவாகவே இந்த 64 யோகினி வழிபாடு டாகினி என்றழைக்கப்படும் தாந்திரீக வழிபாடுகளின் முன்னோடியாகும். இந்த யோகினியர் தோன்றிய கதை மிகவும் அழகானது தேவி மஹாத்மியம் அதை சுவைபடக் கூறுகிறது.
பன்னெடுங்காலம் முன்பாக கம்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் அழிப்பவர்களே இல்லாத நிலையில் அவர்களின் அட்டகாசங்கள் மிக அதிகமாயின. குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் மிகவும் துன்புறுத்தினார்கள். மும்மூர்த்திகளும் செயலற்ற நிலையில் இருந்தனர். என்ன செய்ய? அந்த நேரத்தில் மக்களுக்கு யார் காவல்? அப்போது அனனை ஆதி பராசக்தி கண் மூடி மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். தேவரும் மூவரும் மனிதரும் அவளை அண்டி வேண்டினர். “லோக மாதாவே! எங்கள் எல்லோரிடமும் மூச்சுக்காற்றாக இருப்பவளே! குண்டலினி சக்தியாக எங்களுள் நிறைந்திருப்பவளே! எங்களைப் பாராய்! எங்களைக் காக்க மனம் இரங்காயோ’வெனக் கதறினர். குழந்தைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னையால் தாங்க முடியுமா? கண்கள் மலர்ந்து சும்ப, நிசும்பர்களை சம்ஹாரம் செய்வதாக வாக்கு கொடுத்தாள் அன்னை.
வீறு கொண்டு எழுந்தாள். தன் உடலை ஒவ்வொரு பாகத்திலிருந்தும் 64 பேரைத் தோற்றுவித்தாள். அதில் மேல பாகங்களிலிருந்து உருவான எட்டு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அந்த 64 பேருக்கும் தலைவியாக்கினாள். மற்றவர்கள் அந்தத் தலைவிக்கு பணி புரிந்தார்கள். ஒவ்வொரு தலைவிக்கும் தங்களுடைய திவ்ய சக்தியை தெய்வங்கள் வழங்கின.
பிரம்மனின் சக்தி பெற்றவள் பிராம்மணி என்றும், மஹாவிஷ்ணுவிடமிருந்து சக்தி பெற்றவள் வைஷ்ணவி, மஹேஸ்வரரிடமிருந்து சக்தி பெற்றவள் மாஹேஸ்வரி, இந்திரனிடமிருந்து சக்தி பெற்றவள் இந்திராணி, முருகனிடமிருந்து சக்தி பெற்றவள் கௌமாரி, வராஹப் பெருமானிடமிருந்து அருள் பெற்றவள் வாராஹி, நரசிம்மரின் உக்கிரகத்தைப் பெற்றவள் நாரசிம்ஹி என்றும், வினாயகரிடமிருந்து சக்தி பெற்றவள் விகடானனா என்றும் அழைக்கப்பட்டனர். இந்த எட்டுத் தலைவிகள் கீழும் எட்டெட்டுப் பணிப்பெண்களாக மொத்தம் 64 யோகினியர் விளங்கினர்.
கடும் போர் நடந்தது. தெய்வ சக்திகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லை அசுர சக்திகள். ஆனாலும் அன்னையின் படை தீரத்தோடு போரிட்டது. அந்த நேரத்தில் தான் ரத்த பீஜன் என்பவன் அசுரர்கள் சார்பில் போரிட வந்தான். அவனுக்கு ஒரு வினோத சக்தி வரமாகக் கிடைத்திருந்தது. அதாவது அவனுடைய உடலிலிருந்து கீழே விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒரு ரக்தபீஜனாக மாறி போரிட்டன. அதனால் அவனை எத்தனை முறை சம்ஹரித்தாலும் அவனைப் போலவே பல ரக்த பீஜர்கள் தோன்றி போரிட்டுக் கொண்டே இருந்தனர்.
யோசித்தாள் லோகமாதா! அவளுக்கு ஒரு சிறந்த தந்திரம் தோன்றியது. அவனது உடலிலிருந்து ரத்தம் வெளியில் வந்து பூமியைத் தொடு முன்பே அவற்றைத் தன் பரிவார தேவதைகளைக் கொண்டு பருக செய்தாள் அன்னை. ரத்தம் வெளியேறி சோர்ந்து போன நிலையில் வேறு ரக்த பீஜர்களும் தோன்ற முடியாமல் அன்னையின் வீரத்துக்குப் பலியானான் ரக்த பீஜன். சும்பனையும் வென்று விட்டாள் அன்னை.
அந்நிலையில் அன்னையையும் அவள் பெரும் படையைக் கண்டு பயம் கொண்டான் நிசும்பன். பயத்தில் அன்னையிடம், “நீ தனியாக என்னோடு போராடி வெற்றி பெறுவதே உனக்கு அழகு. நானோ தனியாக இருக்கிறேன். ஆனால் நீ இப்படி உன் துணைவிகளோடும் படையோடும் மோதுவது வீரமே அல்ல’ என்றான். அதைக்கேட்டுச் சிரித்த அன்னை 64 யோகினிகளையும் தன்னுடைய உடலிலேயே ஐக்கியப்படுத்திக் கொண்டாள். பிறகு படையின்றித் தனியாகப் போராடி நிசும்பனையும் வென்றாள். ஆனால் அன்னையின் கோபாவேசம் தணியவில்லை. பிறகு அவளை தேவர்களும் மூவர்களும் சாந்தப்படுத்தி அமைதி அடைய செய்தார்கள். அப்போது அன்னை 16 வகையான அலங்காரங்களோடு அழகின் இருப்பிடமாக ராஜராஜேஸ்வரியாகக் காட்சி தந்து அருளினாள்.
64 யோகினியர் என்ற கணக்கை ஆதிசங்கரர் தன்னுடைய சொந்தர்யலஹரி என்னும் நூலில் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறுகிறார். சொந்தரியலஹரி என்பதை தமிழில் மொழி பெயர்த்தால் அழகின் அலை என்று சொல்லலாம். அன்னையின் திவ்ய சொரூப அழகைக் கண்ணால் காணும் பேறு பெற்ற ஆதிசங்கரர் அவளது அழகை தலை முதல் கால் வரை வர்ணித்து பின்னும் திருப்தியில்லாமல் மீண்டும் கால் முதல் தலை வரை வர்ணித்து தீட்டிய காவியமே சௌந்தர்ய லஹரி. அதில் ஒரு கட்டடத்தில் அன்னை தர்பாரில் கொலு வீற்றிருக்கும் அழகைக் கூறுகிறார்.
“சது: சஷ்டி கோடி கண சேவிதா’ என்கிறார். சஷ்டி என்றால் ஆறு; சதுர் என்றால் நான்கு. இப்படி 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுகிறவள் அன்னை என்று இயம்புகிறார் சங்கரர். இந்த எண்ணிக்கையை மையமாக வைத்தே தன்னுடைய ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்தார் சங்கரர் என்று கூறுவதும் உண்டு.
பிராம்மணி முதல் விகடானனா வரை மொத்தம் 8 யோகினிகள் என்றும்; அவர்களுக்குப் பணி செய்ய இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு என்றும் முதலில் பார்த்தோம் அல்லவா? அதில் அந்த ஒவ்வொரு யோகினிகளுக்குள்ளும் ஒரு கோடி யோகினியர் அடங்கி பணி செய்வதாகக் கூறுகிறார் ஆதிசங்கரர். இந்த 64 கோடி யோகினியரே நம் உலகத்தின், ஏன் இந்தப் பேரண்டத்தின் பல்வேறு இயக்கங்களுக்குக் காரணகர்த்தா ஆகிறார்கள் என்கிறார் அவர்.
ஸ்ரீ சக்கரத்தில் மொத்தம் இருக்கும் ஆவரணங்கள் ஒன்பது. ஒவ்வொன்றும் ஒரு கோணம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கோணமும் ஒரு யோகினியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பது ஆதிசங்கரர் கூற்று. ஸ்ரீசக்கரத்தில் மொத்தம் அவ்வாறு 64 கோணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 64 என்ற எண்ணானது பல இடங்களில் முதன்மை பெற்று விளங்குகிறது. இதை ஸ்லோகங்கள் 235, 236 ஆகியவற்றில் உணர்த்துகிறார் சங்கரர். ஒரு சாரார் இந்த 64 என்ற எண் 64 வகை தத்துவங்களைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றோடு நம்முடைய மனம், புத்தி, நம்பிக்கை, அகங்காரம் என்னும் குணங்களும் சேர்ந்து மொத்தம் 64 என்ற எண் வருகிறது. இவைகள்தான் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்தும் காரணிகள். அதற்குப் பதிலாக நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தால் அதுதான் சித்தி. அதுவே அன்னையை உணரும் ஆன்மிக நிலையின் இறுதி என்பதே ஸ்ரீசக்கரத் தத்துவம்.
இந்த வகையான பயிற்சியில் அன்னையை அடைய கடுமையான மனக்கட்டுப்பாடும் யோகப் பயிற்சியும் தேவை. சிறு தவறு கூட நேர்ந்துவிடக்கூடாது. அந்த நிலையை அடைய யோகியருக்கு அருள்பாலிப்பவர்கள்தான் இந்த 64 யோகினியரும். ஆதிசங்கரர் அந்த நிலையை அடைந்தவர்களுள் முதன்மையானவர்.
இப்படிப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட இந்த 64 யோகினியருக்கும் ஒரு காலத்தில் தனியே கோயில் இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. நம் நாட்டில் மொத்தம் 9 இடங்களில் இத்தகைய கோயில்கள் இருந்திருக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோயில் இருந்திருக்கலாம். திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது கிட்டத்தட்ட நான்கே நான்கு கோயில்களே உள்ளன. அதிலும் சில மிகவும் இடிபாடான நிலையில் இருக்கின்றன.
அதில் இரண்டு ஒரிஸ்ஸாவிலும் மற்ற இரண்டு மத்தியப்பிரதேசத்திலும் அமைந்துள்ளன. ஒரிஸாவின் ராணிப்பூர் ஜரியல் என்ற இடத்திலும் ஹீராப்பூரிலும் உள்ளன இக்கோயில்கள். மத்தியப்பிரதேசத்தில் பேராகாட்டிலும் கஜுராஹோவிலும் உள்ளன. இதில் கஜுராஹோவில் உள்ளது பெரிய கோயில்.
இதில் ஒரிஸாவில் ஹீராப்பூரில் இருக்கும் கோயில்தான் முழுமையாகக் காணக் கிடைக்கிறது. இந்தக் கோயில் மிகவும் சிறிய அளவிலானது. ஆனால் இதன் வேலைப்பாடுகள் மிகவும் கவனத்தை ஈர்ப்பவையாக அமைந்திருக்கிறது குறிப்பிடத் தக்கது.
ஹீராப்பூர் யோகினி கோயில்: இது ஒரிஸா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் ஹீராப்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழியாமல் தன்னுடைய அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்கும் இடங்களில் இந்தக் கிராமமும் ஒன்று. புவனேஸ்வரிலிருந்து பூரி போகும் பாதையில் சந்தன்பூர் என்ற இடத்தில் திரும்ப வேண்டும். போகும் வழியெல்லாம் தண்ணீரும் மணலும் நிறைந்த நதி பார்கவி நம்மோடு ஓடி வருகிறாள். அவளுக்கும் அன்னையையும் கோகினியரையும் தரிசிக்கும் ஆர்வம்.
பார்கவி நதியின் கரையிலேயே அமைந்திருக்கிறது அந்த யோகினியர் கோயில். ஊர் மக்கள் அதை மஹாமாயா கோயில் என்று அழைக்கிறார்கள். ஊரில் யாரைக் கேட்டாலும் பயபக்தியோடு வழி காட்டுகிறார்கள். அன்னையின் மாய லீலைகளை நன்கு கண்டு உணர்ந்தவர்கள் அளித்த பெயராக அது இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இது மிகவும் பழம் பெருமை வாய்ந்த கோயில் என்று இங்குள்ள மக்கள் புரிந்துகொண்டு அதைப் பாதுகாக்க தங்களாலான முயற்சிகள் செய்கிறார்கள். மற்றபடி இது இந்தியத் தொல்பொரும் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பூஜைகள், புனஸ்காரங்கள் எல்லாம் வழக்கம் போல் நடைபெறுகிறது.
காற்றில் ஏற்படும் நுண் அதிர்வுகள் நம் அன்னையின் தர்பாரை நெருங்கி விட்டோம் என்று சொல்லாமல் சொல்கின்றன. சக்தி இருக்கும் இடம் அல்லவா? அதனால் அதை நன்கு உணர முடிகிறது. மற்ற கோயில்கள் போலில்லாமல் இத்தகைய யோகினி கோயில்கள் வட்ட வடிவிலும் மேற்கூரை இல்லாமலும் தான் கட்டப்படுமாம். அதுபடியேதான் இந்த ஹீராப்பூர் கோயிலும் இருக்கிறது. ஒரே ஒரு வட்டப்பிரகாரம். மூலவர், கருவறை, கொடி மரம் என்ற எதுவும் கிடையாது. அந்த வட்ட வடிவப் பிராகாரத்தில் வரிசையாக அன்னையரின் திருவுருவச் சிலைகள் சுவரோடு சேர்த்து செதுக்கப்பட்டுள்ளன. சிலைகளும் சுமார் இரண்டடி உயரம் தான்.
நடு நாயகமாக துர்க்கையின் சிலை இருக்கிறது. இங்கு சிவப்பு வர்ணம் மிகவும் விசேஷமாக் கருதப்படுகிறது. சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்புக் கண்ணாடி வளையல்கள் அணிவித்து குங்குமம் அணிந்து துர்க்கை கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள். வாகனம் சிங்கம்.
அதேபோல மற்ற அன்னையரின் அழகை காணக் காணத் தெவிட்டாத இன்பம் நமக்கு. கோயிலே அன்னையின் கோயி,“ அதில் வீற்றிருப்பவர் அனைவரும் பெண்மையின் பெருமையைப் பேசுபவர்கள். அப்படியிருக்க அவர்களின் அலங்காரங்களும் உடைகளும் தலை அலங்காரமும், விதம் விதமாய் இருப்பதில் ஆச்சரியம் என்ன? இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு அன்னையின் வாகனமோ, இல்லை ஒரு அன்னையுடையதைப் போல மற்றொரு தலை அலங்காரமோ வேறொரு இடத்தில் பார்க்க முடியாது. ஒவ்வொன்றும் தனித்தனி.
அடங்கா வியப்புத் தோன்றுவது அவர்களுடைய தலை அலங்காரத்தில் தான். எத்தனை விதமான அலங்காரங்கள்? கொண்டை, நெளிந்த கூந்தல், சரிந்த குழல், விரித்த நுனி முடிச்சிட்ட கூந்தல் என காணக் காண நாம் அன்னையரின் நடுவே அவர்களுடைய கண்காணிப்பில் அன்பான அரவணைப்பில் மிதப்பது போல் இருக்கிறது. இந்த இடத்தின் தெய்வீகம் அதன் மாசற்ற குழல், வாகன ஒலி இல்லாத சாலைகள், மிகுந்த மௌனம் இவையேதான். இந்தச் சூழல் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. தாயின் மடியின் இருப்பது போல் சுகமாக இருக்கிறது.
ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இந்தக் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்து வழிபட்டு, பூசாரி கையால் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு போவதும் உண்டாம். பூசாரியிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்ன தகவல் இது. இந்த இயற்கை சூழ்ந்த இடத்தில் விறகடுப்பில் சமையல் செய்து அன்னைக்குப் படைத்து நாமும் உண்டால் அது தேவாமிர்தமே அல்லவா? எங்களுக்கும் அதுபோலச் செய்ய ஆசை இருந்தாலும் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை.
மேலும் அவரோடு பேச்சுக் கொடுத்தபோது இந்த கோயில் திருஷ்டி தோஷம், அபிசார தோஷம் போன்றவை விலகும் இடமாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும் இடமாகக் கருதப்படுகிறது. அன்னையின் பிரசாதமாக சிவப்பு வளையலையும் சிவப்பு அரளிப்பூவையும் தருகிறார்கள். அவற்றை பத்திரமாக வீட்டில் வைத்து வழிபடும் பெண்களுக்கு எந்த ஒரு குறையும் வராது என்பது நம்பிக்கை.
அன்னையின் தர்பாரில் அவளுடைய யோகினியர் புடை சூழ வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் கண்டு மகிழந்து, அலங்காரங்களைக் கண்டு நெகிழ்ந்து போனவர்களாய்க் கோயிலை விட்டு வெளியே வந்தோம். ஒரிஸா செல்பவர்கள் கண்டிப்பாக இந்தக் கோயில் சென்று பார்க்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியே கூடக் கூறுவேன். ஏனென்றால் இந்தக் கோயிலின் பழைமையும், தெய்வீகத் தன்மையும் அங்கு நமக்குள் ஏற்படும் அதிர்வுகளையும் நம் குழந்தைகளோடு சென்று உணர வேண்டியவைகள். புவனேஸ்வரிலிருந்து ஆட்டோவிலோ, டாக்சியிலோ செல்லலாம். பஸ் வசதி இல்லை.
தாய்மையைப் போற்றும் நம் கலாசாரத்தைக் கட்டிக் காப்பது மட்டும் நம் கடமை இல்லை. அது அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கச் செய்வதும் நம் கடமைதான். குயில் பாடும் சோலையும் மீன்கள் ஆடும் நதியும் நிறைந்த அந்த அமைதியான சூழ்நிலையை நாம் அனுபவிக்க அனுபவிக்க நம்முள் தெய்வீகம் பரவுகிறது. எங்கும் எதிலும் சுடராகப் பிரகாசிக்கும் அன்னையின் ஆனந்த நிலை நம்மை மறக்கச் செய்கிறது.
ஹீராப்பூர் சென்று வாருங்கள்; 64 யோகினியரின் தெய்வீக நிலையை உணருங்கள்.

Comments