நிஜ பக்தி செலுத்துங்கள்!

டிவி', சினிமா, போதை வகைகள், பீரோ நிறைய உடைகள், தேவைக்கு மேல் நகை... இப்படி ஆடம்பரத்திற்காக, மக்கள் ஏராளமாக செலவிடுகின்றனர். ஆனால், கோவிலுக்கு போனால், சிறிதளவாவது காணிக்கை செலுத்துவோமே என எண்ணுவதில்லை. ஏன்... சிலர், வீடுகளில் உண்டியலில் காணிக்கைக்காக என சேர்த்த பிறகு கூட, அவசரத்தேவை என்றால் உடைத்து விடுகின்றனர். கோவில் நிலங்களை குத்தகை எடுத்தவர்கள், கொஞ்சம் கூட நன்றி இல்லாமல், ஆண்டவனுக்குரிய பங்கை செலுத்துவதில்லை.
ஆனால், அந்தக் கால பக்தி எப்படி இருந்தது தெரியுமா! அதிபத்தர் என்ற சிவபக்தரின் கதையைக் கேளுங்கள்...
அக்காலத்தில், நெய்தல் எனப்படும் கடல்சார்ந்த நிலத்தில் வசிப்பவர்களை, "நுளையர்' என்று அழைத்தனர். இந்த நுளையர் (மீனவர்) குலத்தில் அவதரித்தவர் தான் அதிபத்தர். இவருக்கு ஏராளமான நாவாய்கள் (மீன்பிடி மரக்கலம்) உண்டு. அவற்றின் மூலம், ஏராளமான மீன்கள் கிடைத்தன. மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார் அதிபத்தர்.
பெரிய முதலாளியாக இருந்தாலும், அதிபத்தரும் ஒருநாள் கூட உழைப்பைக் கைவிட்டதில்லை. அவரும் ஒரு மரக்கலத்தில் மீன்பிடிக்க போய் விடுவார். வலையில் சிக்கும் முதல் மீனை, மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டு, "சிவபெருமானுக்கு அர்ப்பணம்' என்பார்.
இறைவனுக்கு, நாம் என்ன காணிக்கை கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. கண்ணப்பநாயனார், சிவனுக்கு இறைச்சியை அளித்தார். வாயில் கொண்டு வந்த தண்ணீரை, லிங்கத்தின் மேல் உமிழ்ந்து, அபிஷேகம் செய்தார். இறைவன் அந்தப் பொருட் களின் சுத்தத்தை விட, அதில் புதைந்து கிடந்த அன்பைத்தான் பார்த்தார். அதுபோல், அவர், தனக்கு பக்தன் மீனைத் தினமும் காணிக்கை யாக்குகிறானே என்பதைப் பார்க்கவில்லை. அதில் புதைந்து கிடந்த பக்திப் பெருக்கை ஏற்றுக் கொண்டார்.
எவர் ஒருவர் கடவுளை அதிகமாக நேசிக்கிறாரோ, அவரைச் சோதிப்பது ஆண்டவனுக்கு கைவந்த கலை. அதிபத்தரின் பக்தியை, உலகறியச் செய்வதற்காக, அவரையும் சோதிக்க முற்பட்டார் சிவன். அதிபத்தர் சார்பில் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு, அதிக மீன்கள் கிடைக்கவிடாமல் செய்தார். அதிபத்தருக்கோ தினமும் ஒரே ஒரு மீன் தான் கிடைத்தது. வழக்கப்படி, அதை கடலிலே, சிவனுக்கு காணிக்கையாக்கி விட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்புவார். தொழில் சரிவால், வீட்டில் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.
இருந்தாலும், நம்பிக்கையுடன், "சிவாயநம' என்னும் <நாமத்தை உச்சரித்தபடியே, கடலுக்கு தினமும் சென்றார் அதிபத்தர். ஒருநாள், ஒரு தங்கமீன், நவரத்தின செதில்களுடன் வலையில் சிக்கியது. சக மீனவர்கள், "ஐயா! இத்தனை நாள் தொழில் சரிவும், இந்த ஒரே மீனில் சரியாகி விட்டது. இதை விற்றால், நீர் தான் இவ்வூரிலேயே செல்வச் சீமான்...' என்றனர்.
அதிபத்தரோ அவர்களின் வார்த்தையை பொருட்படுத்தவே இல்லை. "இன்று எனக்கு இறைவன் அளித்தது இந்த ஒரு மீனைத்தான்! வழக்கப்படி அது அவனுக்கே சொந்தம்...' எனச்சொல்லி, கடலில் விட்டு விட்டார். "இப்படியும் பக்திப் பைத்தியமான மனிதர் இருக்கிறாரே' என எல்லாரும் ஆச்சரியப்பட்ட வேளையில், சிவபார்வதி வானில் தோன்றினர்.
"அதிபத்தரே... உம் பக்தியை <உலகறியச் செய்யவே, இவ்வாறு நாடகம் நிகழ்த்தினோம். நீர் இப்பூமியில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்து, சிவலோகப் பதவி அடைவீர்...' என வாழ்த்தினர். அதிபத்தரின் வாழ்வில் இருந்து, இறைவன் சோதிப்பான், ஆனால், கைவிட மாட்டான் என்பதையும், யார் ஒருவர் நம்புகிறாரோ, அவரே நிஜமான பக்தர் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்கிறோம்.
ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில், அதிபத்தரின் குருபூஜை நடக்கும். அன்று சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இருக்கும் அதிபத்தரை தரிசித்து, அவரைப் போலவே நிஜபக்தி வேண்டுமென பிரார்த்தியுங்கள். கோவில்களுக்கு குத்தகை பாக்கியை உடனே செலுத்துங்கள். காணிக்கையை வாரி வழங்கி, நம் கலைச் சிற்பங்களைப் பாதுகாக்க உறுதியெடுங்கள்.
***

Comments