குமாரகோவில் - வள்ளி திருமணம்









மங்களமேளம் முழங்க, கம்பீரமாக வந்து கொண்டிருந்தார் அந்தக் கல்யாண மாப்பிள்ளை! உற்றாரும் உறவினரும் ஆனந்தமாக அவரை பின்தொடர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் மணமகளின் வீட்டை அடைந்து விடுவார்கள். அங்கே போனதும், பெண்ணின் கரம்பிடித்து வலம் வரவேண்டியதுதான். கல்யாணம் என்றாலே பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இயல்பாகவே ஓர் அழகு வந்துவிடும். அதிலும் காதல் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். இதுவும் காதல் கல்யாணம்தான். எத்தனையோ வேஷங்கள் போட்டும், நாடகம் ஆடியும் தன் காதலை அரங்கேற்றியவர் இந்த மாப்பிள்ளை. அதனால் ஏற்கெனவே அழகான அந்த மாப்பிள்ளையின் முகம் கல்யாண சந்தோஷத்தில் மேலும் பலமடங்கு அழகேறி ஜொலித்தது.
எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருந்த அந்த சமயத்தில், யார் கண்பட்டதோ... விர் என்று பறந்து வந்த ஓர் அம்பு மாப்பிள்ளைக்கு மிக நெருக்கமாகக் குத்தி நின்றது.
“யார்... யாரது இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது...?’ எல்லோரும் திகைக்க, வில், அம்பு, வாள், ஈட்டி என்று விதவிதமான ஆயுதங்களோடு ஒரு கும்பல் அவர்களை சூழ்ந்தது. “கல்யாணத்தை நிறுத்து!’ கரகரப்பாக உத்தரவிட்டு மிரட்டியது.
“ஏன்?’ அஞ்சாமுகத்துடன் மாப்பிள்ளை தான் எதிர்க்கேள்வி கேட்டார்.
“பெண் எங்கள் குலத்தவள்..! அவளை மணக்கும் தகுதி உனக்கில்லை...!’
“விவாகம் நடப்பதில் ஏதாவது விவகாரம் வந்துவிடுமோ..!’ எல்லோரும் பயந்தார்கள்.
“உங்கள் இனப் பெண்ணை மணக்க என்ன தகுதி வேண்டும்?’
“எங்களோடு சண்டையிட்டு நீ வெல்ல வேண்டும்...!’
“அவ்வளவுதானா?’ அலட்சியமாகக் கேட்ட மணமகன், தன் அழகான ஒரு முகம் மட்டுமே பார்த்தவர்களுக்கு வீரம் நிறைந்த மறுமுகத்தைக் காட்டினான்.
வேலால் அவன் காட்டிய வீரத்தைப் பார்த்தவர்கள் வியந்து, வியர்த்து விலகிப் போனார்கள். தங்கள் குலமகளை அவனுக்கே மணம் முடித்துத் தர சம்மதித்தார்கள்.
மணமகனுக்கு சீதனமாக என்னென்ன வழங்குகிறாரகள் என்பதை பட்டியலிட்டுப் படித்தார்கள். வள்ளிச்சோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை, வள்ளிக்காவு இப்படிப் பட்டியல் நீள்கிறது. வந்தவர்களுக்கு தேன், தினைமாவு, குங்குமம் கொடுக்கிறார்கள். கல்யாணம் நல்லபடியாக நடந்துமுடிகிறது.
என்ன, எல்லாம் ஏதோ நாடகம் பார்ப்பதுபோல இருக்கிறதா?
ஆமாம். இது ஒரு நாடகம்தான். இதை நடத்தியவர், முருகன். குறமகள் வள்ளியின் கரம்பிடிக்க வேலவன் ஆடிய திருவிளையாடல்தான் இது.
இந்த நாடகத்தை அப்படியே அச்சு மாறாமல் ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ஓர் ஆலயத்தில்.
எங்கே, எப்போது, எதற்காக என்பதையெல்லாம் பார்ப்போமா?
கன்னியாகுமரி மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்புமிக்க வேளிமலை குமாரகோவிலில்தான், இந்த வள்ளி கல்யாண நாடகம் நடக்கிறது.
இங்கே சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படக் காரணம், முருகப்பெருமானுக்கும் வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்தமலை இதுவே என்பதால்தான். வேள்வி மலை என்று பெயர் ஏற்பட்டு, அதுவே வேளிமலை என மருவியதாகக் கூறுகின்றனர். திருமணத்தை மலையாள நாட்டினர், குறிப்பாக நம்பூதிரி இனத்தவர் வேளி என்று குறிப்பிடுவர். வள்ளியை முருகன் காதலித்து இங்கே கடிமணம் புரிந்ததால் இம்மலை வேளிமலை எனப் பெயர் பெற்றதாகவும் சொல்கின்றனர்.
கிழக்கு நோக்கிய கோயிலின் வலப்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்திருக்க நடுப்பகுதியில் குளம் அமைந்துள்ளது. குளத்தின் முன்புறம் விநாயகருக்குச் சன்னதி உள்ளது. வேளிமலை அடிவாரத்திலிருந்து 38 படிகள் ஏறிச்சென்றால் கோயில் சன்னதியை அடையலாம்.
கொடிமரத்தை தாண்டி இடப்புறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் மூலவர் 8 அடி 8 அங்குல உயரத்தில் வரதஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறார். மூலவரின் இடப்புறம் வள்ளி 6 அடி 2 அங்குலத்தில் காட்சி தருகிறாள். பெரும்பாலான நாட்களில் சந்தனக்காப்பில் வசீகரப்புன்னகையுடன் காட்சி தரும் முருகன், பக்தர்களை பரவசத்திலாழ்த்துகிறார். மூலவரை அடுத்து நந்தியோடு சிவபெருமான் காட்சி தருகிறார். ஆறுமுகநயினாரும் நடராஜரும் தெற்குநோக்கி காட்சி தருகின்றனர்.
தலவிருட்சமான வேங்கை மரத்திற்கு தனி சன்னதி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைக் காதலித்த காலத்தில் வள்ளியின் உறவுக்கூட்டம் அங்கே வர, வேங்கைமரமாக முருகப் பெருமான் மாறினார் என்ற புராணக்கதை தெரிந்ததுதானே...! வேல்வேல் வேலவா வேங்கை மரமானவா என்ற பாடல் குமரிமாவட்டத்தில் மிகப்பிரசித்தம். வேங்கை மரம் எதனாலோ வெட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வேங்கை மரத்தின் எங்சிய பகுதிக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ஆட்டுத்தலையுடன் காட்சிதரும் தட்சனுக்கு தனிச்சன்னதி கோயிலின் மேற்கு வாயிலில் அமைந்துள்ளது. பக்தர்கள் தட்சனை முதலில் பின் வாசலில் வணங்கிவிட்டு, கோயில் முன் வாயில் வழியாக வழிபாட்டுக்குச் செல்கின்றனர். வழிபாடு முடிந்து பின் வாசல் வழியாக திரும்பும்போது, தட்சனைப் பார்த்துவிட்டால் கிட்டிய புண்ணியம் பறிபோகும் என்ற ஐதிகத்தில், கண்களைக் கைகளால் மறைத்த வண்ணம், தட்சன் சன்னதியைக் கடந்து செல்கின்றனர்.
கோயிலிலிருந்து அறை கிலோமீட்டர் தொலைவில் வள்ளியை முருகப் பெருமான் மணம் செய்த கல்யாண மண்டபம் காணப்படுகிறது. அதன் அருகில் உள்ள குகையை வள்ளிக்குகை என்கிறார்கள். அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறுகோயில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை என்றழைக்கப்படும் இடங்கள் உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் உள்ளன.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் சிறப்பு வாய்ந்தது, பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் வள்ளி திருமணம். அந்த சமயத்தில்தான் ஆரம்பத்தில் சொன்ன நாடக சம்பவம் நடக்கிறது.
போர் முடிவில் குறவர்கள் அனைவரும் கீழே விழ, வள்ளியின் வேண்டுகோளின்படி அவர்களை முருகன் எழுப்பிவிடுவதாக கதை செல்லும்.
திருக்கல்யாண நாளில் காலையில் முருகப் பெருமான் மலைக்கு பல்லக்கில் எழுந்தருளி வள்ளிக்குகை அருகே உள்ள கல்யாண மண்டபம் செல்வார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பர். தீபாராதனைக்குப்பின் கல்யாண மண்டபம், கோயிலைச் சுற்றியுள்ள சத்திரங்கள், மலைப்பாதைகள் எனப் பல இடங்களிலும் அன்னதானம், கஞ்சி தர்மம் நடக்கும்.
பிற்பகல் முருகன், வள்ளியை பல்லக்கில் அழைத்துவருவர். அதைக் காணும் குறவர்கள், முருகனையும் வள்ளியையும் தடுத்துந நிறுத்தி போர்புரிவர். குறவர் படுகளம் எனும் இந்நிகழ்ச்சி மலைப்பாதை வழிநெடுகிலும் நிகழ்த்தப்படுகிறது. இறுதியில் கோயிலின் பின்புற வாசலில் குறவர்கள் முருகப்பெருமானிடம் தோல்வியடைந்து சரணடைவர். இந்நிகழ்ச்சியில் மலைப்பகுதியில் வாழும் குறவர் இனத்தவர்களே கலந்து கொள்கிறார்கள்.
இரவு, வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் தேன், தினை மாவு, குங்குமம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாளன்று தேவஸ்வம் போர்டு ஊழியரால் வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்கள் வாசிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தோறும் இக்கோயிலில் நடைபெறும் கஞ்சி தர்மம் மிக விசேஷமானது. தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாக கஞ்சி பிரசாதத்தை பக்தர்கள் கருதுகின்றனர். தீரா நோயுடையவர்கள் கஞ்சி தர்மம் முடிந்ததும், கஞ்சி தர்மம் வழங்கப்பட்ட இடத்தில் உருண்டு நோய் தீர்க்கின்றனர்.
கார்த்திகை தீபத் திருநாளில் இங்கு சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பலவகை காவடிகள், துலாபாரம், பிடிப்பணம் வாரியிடுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு, மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி, பயறு வகைகள், காய்கறி, பழங்கள் காணிக்கை கொடுத்தல், வெளிப்பிராகாரத்தில் அங்கப்பிரதட்சணம் முதலான நேர்ச்சை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
நவராத்திரி பூஜையின்போத குமாரகோவிலில் இருந்து முருகப்பெருமான் பல்லக்கில் பத்மநாபபுரம் எழுந்தருளி, அங்கிருந்து சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரத்திலிருந்து வரும் முன்னுதித்த நங்கை சகிதம் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளுகிறார். குழித்துறையில் இரவு, தங்கி, மறுநாள் புறப்பட்டு கரமனை என்ற இடத்தில் வெள்ளிக் குதிரையேறி, திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜைமுடிய காட்சியருளுகிறார். அங்கு அம்பு சாத்துதல், வேல்குத்துதல், காவடி எடுத்தல் என விதவிதமான பக்தர்களின் நேர்ச்சைகளை ஏற்று மீண்டும் குமாரகோவில் திரும்புகிறார்.
சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோயில் தேரோட்டத்தின் போதும், முருகப்பெருமான் பல்லக்கில் புறப்பட்டு சுவாமி கிருஷ்ணன் கோயிலில் இரவு தங்கி, மறுநாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுசீந்திரம் சென்று அங்க பக்தர்களுக்கு அருள்பாலித்துத் திரும்புகிறார்.
இங்கு மன்னராட்சி காலத்திலிருந்தே பொதுப்பணித்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தக்கலை காவல்நிலையத்திலிருந்தும், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்தும், மேள தாளங்கள் முழங்க போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் காவடி எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தெற்கு கேரள மக்களின் குலதெய்வமாகவும் குமாரகோவில் முருகன் உள்ளார்.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் குமாரகோவில் உள்ளது.

Comments