ஜ்ஞாநம் விநா முக்திபதம் லப்யதே குரு பக்தித:| குரோ: ஸமாநதோ நான்யத் ஸாதனம் குரு மார்க்கிணாம் ||
- ஸ்ரீகுரு கீதை (1-89)
பொருள்: ஞானம் அல்லாது, குரு பக்தியால் மட்டும் முக்தி நிலை அடையப்படும். குரு மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு குருவுக்குச் சமமான வேறு சாதனம் எதுவும் இல்லை!
சுராஜ்பாய்- ஜைன மதத்தைச் சேர்ந்தவள்; காம்கோன் எனும் நகரில் வசித்தாள். இவளின் கணவர், வயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டார். நோய் தீவிரமாகி, 1951-ஆம் ஆண்டு, உதாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவனின் நிலைக்கு வருந்தினாள் சுராஜ்பாய். காம்கோனில் இருந்து உதாபூர் வெகுதூரம்; தகுந்த துணையில்லாமல் பயணம் செய்ய முடியாது. எனவே, காம்கோனில் இருந்தபடி, கணவரின் உடல்நிலை தேற பிரார்த்தித்தாள். அன்று இரவு ஒரு கனவு கண்டாள். அவள் கணவரின் உடலை சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்கின்றனர். உறவினர்களுடன் அழுதபடி பின்தொடர்கிறாள் சுராஜ்பாய். எதிரில் பக்கீர் ஒருவர் வருகிறார். கப்னியும் தலையாடையும் அணிந்திருந்தார் அந்த பக்கீர். ஒளி நிறைந்த அவரின் திருமுகத்தைக் கண்டவள், தன் கணவர் இறந்துவிட்டதைக் கூறி அழுகிறாள். உடனே அவர், ''ஏன் அழுகிறாய்? உன் கணவன் உயிர் பெறுவான்!'' என்ற கூறி மறைந்தார். மறுகணமே இவளின் கணவர் உயிருடன் எழுகிறார்! அவ்வளவுதான்... திடுக்கிட்டு கண்விழித்தாள் சுராஜ்பாய்.
உடல் வேர்த்திருந்தது. 'இந்த நல்ல கனவுக்குக் காரணம் என்ன? பக்கீராக வந்தது யார்..?' பலவாறு யோசித்தும் ஒன்றும் தெரியாமல் குழம்பினாள் சுராஜ்பாய்.
மறுநாள், தோழியின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே... கனவில் வந்த பக்கீரின் திருவுருவப் படம். பரவசம் பொங்க அதையே பார்த்தாள். ஆச்சரியப்பட்டு கேட்ட தோழியிடம் கனவு பற்றி விவரித்த சுராஜ்பாய், ''ஆமாம்... இந்தப் படத்தில் இருப்பவர் யார்?'' என்று விசாரித்தாள்.
''இவர்தான் ஷீர்டி மகான் ஸ்ரீசாயிபாபா. மாதம் ஒருமுறை, ஷீர்டிக்குச் சென்று அவரது சமாதிக் கோயிலை தரிசித்து வருவேன். உன் கனவில் பாபா வந்திருக்கிறார் என்றால், உனக்கு ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம்'' என்று பூரிப்புடன் பதில் சொன்னாள் தோழி.
அதில் ஆறுதலடைந்து வீட்டுக்கு வந்தவளுக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ''உதாபூரில் இருந்து சேதி வந்தது. ராகேஷ் உடல் தேறி நலமாக இருக்கிறானாம்!'' என்றார் சுராஜ்பாயின் மாமியார். சிலிர்த்துப் போனாள் சுராஜ்பாய், 'கணவர் குணமடைய ஸ்ரீசாயிபாபாவே காரணம்' என்று எண்ணியவள், பாபாவை மனதார நமஸ்கரித்தாள்.
பின், தோழியிடம் சென்று ஸ்ரீசாயிபாபாவின் படத்தைக் கேட்டு வாங்கி வந்து, பூஜிக்க ஆரம்பித்தாள். ஆனால், அவளின் மாமியாரும் உறவினர்களும், '' இஸ்லாமியர் போல் காட்சி தரும் பாபாவை வணங்கலாமா? இது, நம் மதத்துக்கு விரோதமான காரியம் இல்லையா?'' என்று கடுமையாக எதிர்த்தனர். இதை, சுராஜ்பாய் பொருட்படுத்தவில்லை.
ஒருமுறை, தோழியுடன் ஷீர்டி சென்று, துவாரகாமயீயை அடைந்தவள், 'கனவில் பக்கீர் நின்றிருந்த இடம் இதுதான்' என்று சிலிர்த்தாள். ஸ்ரீசாயியின் சமாதி மந்திரை தரிசித்து ஊர் திரும்பினாள்.
மறுமுறை அவள் ஷீர்டி சென்றபோது, ஒரு கனவு! ஜைனர்கள் சிலர், 'சாயிநாத் போலேஜா' என்றபடி ஸ்ரீபாபாவை சுற்றி வந்தனர். தன் மதத்தவரும் ஸ்ரீசாயிபாபாவை வணங்குவதை கனவில் கண்டு மகிழ்ந்து, 'சாயிநாத் போலேஜா' என்று பாடத்துவங்கினாள்.
நிம்மதியுடன் ஊருக்குத் திரும்பியவள் கனவில் மீண்டும் வந்தார் பாபா!
ஜைன மத குருமார்கள் நிறைந்திருந்த சபையில், நடுநாயகமாக அமர்ந்திருந்த சாயிபாபாவை நோக்கி சுராஜ்பாய் செல்கிறாள். அவரை நமஸ்கரித்து ஏதோ விளக்கம் கேட்க, 'ஜைன மத முனிவரான சந்த்நாத் பகவான் அங்கே அமர்ந்திருக்கிறார். அவரிடமே கேள்... நீ கடைப்பிடிக்க வேண்டிய மார்க்கத்தை அவரே கூறுவார்' என்று பாபா சொல்ல... சுராஜ்பாயின் கனவு கலைந்தது!
இந்தக் கனவின் மூலம், ஜைன மத நியமங்களின்படி வாழுமாறு பாபா அறிவுறுத்தியதாகக் கருதினாள் சுராஜ் பாய். கண்ணில் நீர் வழிய பாபாவின் படத்தின் முன் நின்றாள். ''பாபா... மதம், மொழி, நாடு முதலான எல்லைகளைக் கடந்தவர் நீங்கள்!'' என்றவள், உரத்த குரலில் பாட ஆரம்பித்தாள்
'சாயிநாத் போலேஜா...'
Comments
Post a Comment