பேலூர் மடம்

ங்கையின் மேற்குக்கரை காசிக்கு நிகர் என்று போற்றப்படுகிறது. கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம், இவ்வாறு, இயல்பாகவே ஒரு தீர்த்தத்தலமாக அமைந்துள்ளது. இந்த இடம் அன்னை ஸ்ரீசாரதா தேவி, சுவாமிஜி, ஸ்ரீராம கிருஷ்ணரின் மற்ற சீடர்கள், மற்றும் வாழையடி வாழையாக இங்கே வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற மகான்கள் இவர் களின் திருப்பாதத் துகள்களால் புனிதமாக்கப்பட்டது. அத்துடன், சுவாமிஜி எழுந்தருளச் செய்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னியத்தியமும் சேர்ந்து பேலூர் மடம் ஒரு தலைசிறந்த தீர்த்தத்தலமாகத் திகழ்கிறது.
பேலூர் மடத்தைப்பற்றி ஒருமுறை அன்னை கூறினார்: `பேலூர் மடத்தில் எத்தகைய தோர் அமைதி நிலவுகிறது! அங்கே என் மனம் என்னவோர் உயர்ந்த நிலையில் திளைத்தது! தியானம் அங்கே இயல்பாகவே கைகூடுகிறது. அதனால்தான் நரேன் (சுவாமிஜி) அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.'
பேலூர் மடம் அமைந்துள்ள இந்த இடம் இறை வனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. அதற்கான அறிகுறிகளைப் பலரும் தெய்வீகக் காட்சிகளில் கண்டுள்ளனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலிலிருந்து நமது தீர்த்தயாத்திரை தொடங்குகிறது. கோயிலின் கம்பீரத் தோற்றமே நம்மில் ஒருவித பரவச பக்தியை எழுப்புகிறது. முன்வாசல் படியேறி முகப்பை அடையும்போது ஸ்ரீராம கிருஷ்ணரின் அற்புதத் திருவுருவம் கண்களில் படுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரது புனிதத்தைப் பிரதிபலிப்பது போல் அவரது திருவுருவச்சிலை, அவர் அமர்ந்துள்ள வெண் தாமரை மலர், பீடம் ஆகி யவை வெண்பளிங்கினால் அமைந்துள்ளன. பீடம், இடையில் சிறுத்து உடுக்கின் வடிவில் அமைந்துள்ளது. பீடத்தின் மூன்று பக்கங்களிலும் அன்னப்பறவையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இடது பக்கச் சுவர் மாடத்தில் அன்னையின் திருப்பாதத்துகள்கள் அடங்கியபேழை உள்ளது; தினமும் பூஜிக்கப்படுகிறது. வலது பக்கச் சுவர் மாடத்தில், பாணேசுவர சிவன் எனப்படுகின்ற சிறிய சிவலிங்கம் உள்ளது; தினசரி பூஜையின்போது, ஸ்ரீராமகிருஷ்ணர் இதிலேயே வழிபடப் படுகிறார்.
மேற்கு வாசலுக்கு மேலே ஆஞ்சநேயரும், கிழக்கு வாசலுக்கு மேலே விநாயகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
சுவாமிஜியின் மாமரம்
முற்றத்தின் கிழக்கு ஓரத் தில் நிற்கிறது `சுவாமிஜியின் மாமரம்'. மடத்து நிலம் வாங்கியபோதே நிற்கின்ற மரங்களுள் ஒன்றான இந்த மரம் சுவாமிஜியின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. காலை வேளைகளில் இதன்கீழ் நாடாக் கட்டிலில் அமர்ந்து கொண்டு படிக்கவோ, எழுதவோ, தம்மைக் காண வருபவர் களுடன் பேசவோ செய்வார் அவர். அவர் விரும்பி தியானம் செய்கின்ற இடங்களுள் ஒன்று இது.
பழைய கோயில்
மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன.
இடது பக்கம் இருக்கின்ற அறைதான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது), ஒரு காலத்தில் இங்கே பூஜிக்கப் பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை, சுவாமிஜி, மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களுள் பெரும்பாலோர் இங்கே வழிபட்டுள்ளனர். தற்போது இங்கே நாம் காண்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரிய படம், அன்னை, சுவாமிஜி மற்றும் பிரம்மானந்தரின் படங்கள் மிகவும் பின்னாளில் வைக்கப்பட்டவையாகும்.
பிரம்மானந்தர் கோயில்
நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர், ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர்; `ராஜமஹராஜ்', `ராக்கால் மஹராஜ்', `மஹராஜ்' என்றெல்லாம் அழைக்கப்படு பவர். 1922 ஏப்ரல் 10-ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
சாரதா தேவி கோயில்
அடுத்ததாக நாம் காண்பது சாரதா தேவி கோயில். அருள்மிகு அன்னை, அழகிய மரப்பீடம் ஒன்றில், என்றென்றும் தாம் போற்றுகின்ற கங்கையைப் பார்த்த வண்ணம் எழுந்தருளி யுள்ளார்.
அன்னைக்கு வலது புறம் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையும் ஆன்மிகத்தில் மகோன்னத நிலைகளை அடைந் தவருமான கோபாலேர்-மா அன்னைக்கு அளித்தது இந்தப் படம். அன்னைக்கு இடது புறம் பாணேசுவர சிவலிங்கம் உள்ளது. இதுவும் தினசரி பூஜிக்கப்படுகிறது.
அன்னை மறைந்த பிறகு, சிதை மூட்டுவதற்காகப் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில், மஹாபுருஷ்ஜி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூறினார்: `அன்னை இந்த இடத்தில் கங்கையை நோக்கி அமர்ந்து, என்றென்றும் மனித குலத்தின்மீது நிலைத்த சாந்தியைப் பொழிவார்'. கோயில் கங்கையை நோக்கி யிருந்தால் அது கம்பீரம் பொலிந்து தோன்றும் என்று துரீயானந்தரும் கருத்து தெரிவித்தார். கோயில்களுள், அன்னையின் கோயில் மட்டுமே கங்கையை நோக்கி அமைந்துள்ளது.
விவேகானந்தர் கோயில்
விவேகானந்தர் கோயிலுக்குச் செல்வோம். விவேகானந்தர் கோயில் இரண்டு அடுக்குகள் உடையது. மாடியில் பிரணவக் கோயில், கீழே விவேகானந்தர் கோயில். கோயில் கட்டும் காலத்தில் இந்த இடம் பள்ளமாக இருந்ததால் கீழ்க்கோயில் நிலமட்டத்திற்குக் கீழே உள்ளது.
சுவாமிஜியின் திருமேனியை எரித்த இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுவாமிஜியே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 1902 ஜூலை 1;சுவாமிஜி மறை வதற்கு மூன்று நாட்கள் முன்பு. மாலைவேளையில் அவர் பிரேமானந்தருடன் கங்கைக்கரையில் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று பிரேமானந்தரை அழைத்து இந்த இடத்தைச் சுட்டிக் காட்டி, `நான் உடம்பை விட்ட பிறகு அதனை இந்த இடத்தில் எரியுங்கள்' என்று கூறினார். அதே இடத்தில்தான் விவேகானந்தர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ண இயக்க குருவின் உறைவிடம்
வில்வ மரத்திற்குத் தென் மேற்கில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள கட்டடம் ராமகிருஷ்ண இயக்கத்தின் குரு வசிக்கும் இடமாகும். அவர் மடத்தில் இருக்கின்ற நாட்களில், காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரங்களில் அவரது தரிசனம் பெறலாம்.
சமாதி பீடம்
அனைத்தும் முடிகின்ற மயானமாகிய சமாதி பீடத்தில் நமது பேலூர் மடதீர்த்த யாத்திரை நிறைவடைகிறது. அங்கே பீடம் எழுப்பப்பட்டுள்ள இடத்தில்தான் ஸ்ரீராம கிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் எழுவரின் இகவுலக வாழ்வு நிறைவுற்றது. அவர்களின் பெயர்கள் அந்தப் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கிழக்கில் ஓர் இரும்பு வேலிக்குள், இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஒரு சிறிய நிலப் பதியைக் காணலாம். வடபகுதி ராமகிருஷ்ண இயக்கத்தின் குருமார்கள் மற்றும் தென்பகுதி மற்ற துறவியரின் இறுதிக் கிரியைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும்.
`ஓம். இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பி லிருந்து வெளியேறுகின்ற பிராணன், எங்கும் நிறைந்ததும் அழிவற்றதுமான பிராண னுடன் கலந்துவிடும். மனமே! இந்த வாழ்க்கையில் செய்த செயல்களை நினைத்துப்பார்! மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்!' என்கிறது உபநிஷதம். நாமும் அங்கே சிறிது நேரம் நின்று அந்த மாமுனிவர்களின் பெருவாழ்வைச் சிந்திக்கிறோம், மௌனமாக அவர்களின் அரு ளாசிகளை நாடுகிறோம்.
ராமகிருஷ்ணர் கண்காட்சி
ராமகிருஷ்ண இயக்கத்தில் வாழ்ந்த, அதனை வாழ்வித்த மகான்கள்மறைந்து விட்டாலும் அவர்களின் நினைவுச் சின்னங்கள் ராமகிருஷ்ணர் கண்காட்சியில் பாது காக்கப்படுகின்றன. பேலூர் மடத்தின் முக்கிய வாசலுக்கு அருகில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. ஸ்ரீராம கிருஷ்ணர், அன்னை, சுவாமிஜி, ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்கள், மற்றும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களைப் பற்றிய தகவல்கள், அவர்கள் பயன் படுத்திய பொருட்கள் ஆகியவை இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. கண் காட்சியைப் பார்த்துச் செல்லும்போதே ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாறு மற்றும் சமய வரலாற்றில் அதன் இடத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தில் கண்காட்சி அமைக் கப்பட்டுள்ளது. இறுதியில் ஓர் அரை மணி நேரம் வீடியோ காட்சியும் உண்டு. திங்கள் மற்றும் விழா நாட்கள் கண்காட்சி விடுமுறை நாட்கள் ஆகும்.
(ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை-4)
பேலூர் மடம் எங்கேயுள்ளது?
மேற்கு வங்க மாநிலத் தில் அமைந்துள்ள பேலூர் மடத்தை, கொல்கத்தாவி லிருந்து சுமார் 1 மணி நேரப் பயணத்தில் சென்றடையலாம்.

Comments