பக்திக் கதைகள்

இறைவன் இருப்பது எங்கே?
துறவி ஒருவர் தன் சீடர்களை அடிக்கடி காட்டுக்குள் அழைத்துப்போய் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து தியானிக்கச் சொல்வார்.
“கடவுள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதானே இருக்கிறார்... அவரை எங்கே இருந்து வழிபட்டால் என்ன? ஏன் ‘டத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்?’ ஒரு சீடன் கேட்டான்.
“இறைவன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஆனால் நாம் தான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் மனம் ஒன்றிடப் பழகும் வரை இடமாற்றம் அவசியமே!’ சொன்னார் குரு.

உன்னைப் போன்றதே உலகம்!
கர்வம் மிகுந்த அரசன் ஒருவன், தன்னைப் பார்க்க வந்த துறவி ஒருவரை, “வாருங்கள் ஞானியே... ஏன் இப்படி எருமை மாதிரி அசைந்தாடி வருகிறீர்கள்...?’ என அழைத்து கிண்டல் செய்தான்.
“மன்னா, என் கண்ணுக்கு நீங்கள் கடவுளாகவே தெரிகிறீர்கள்...!’ என்றார் துறவி.
“உமக்கு ரோஷமே இல்லையா...?’ என்று மேலும் எள்ளினான் அரசன்.
“வேந்தே, உலகம் தன்னை வைத்தே பிறரை எடைபோடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? நான், என்னைப் போல உங்களைப் பார்த்தேன். நீங்கள் உங்களுக்கு சமமாக என்னை நினைக்கிறீர்கள்... இதில் கோபப்பட என்ன இருக்கிறது?’ துறவி அமைதியாகச் சொல்ல, தலைக்கனத்தை அப்போதே துறந்தான் அரசன்.


காரணம் என்ன?
வீண் பெருமைக்காக தான தர்மம் செய்யும் செல்வந்தர் ஒருவர் இறந்தபின் சொர்க்கத்தை அடைந்தார்.
தேவலோக காவலர்கள் அவனை உள்ளே கூட்டிப்போயினர். வழியில் ஆடம்பரமான மாளிகைகள் நிறைய இருந்தன. அவற்றை எல்லாம் கடந்து சென்று, ஒரு குடிசை முன் செல்வந்தரை அழைத்துச் சென்றனர்.
“இதுதான் நீங்கள் தங்கவேண்டிய இடம்..!’ என்றனர்.
“எத்தனையோ அரண்மனைகள் இருக்க, ஏன் இப்படி ஒரு குடிசையில் இருக்கச் சொல்கிறீர்கள்?’ கேட்டார் பணக்காரர். “அவையெல்லாம் மனப்பூர்வமாக தானம் செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டவை.’
அவர்கள் சொல்ல, தலை குனிந்தார் பணக்காரர்.

இதுவா சுமை?
அரசன் ஒரவன் தன் அரண்மனைத் தோட்டத்தை விரிவு செய்ய எண்ணி, அதன் அருகே இருந்தவர்களை அநியாயமாக விரட்டினான்.
பாதிக்கப்பட்டவர்கள், அந்நூருக்கு வந்த துறவியை அணுகினர்.
மன்னனை சந்தித்தார், துறவி. “அரசே, உங்கள் நலனுக்காக நான் ஒரு வேள்வியை நடத்தப் போகிறேன். அதற்கு, சிறிது மண் வேண்டும். அதனை நீங்களே சுமந்து வந்து தரவேண்டும்!’ என வேண்டினான்.
சம்மதித்தான் மன்னன். மக்களிடமிருந்து அவன் பறித்த இடத்திலிருந்து ஒரு மூட்டை மண்ணை எடுத்து அவன் முதுகில் சுமத்தினார் துறவி. சுமக்கத் தடுமாறினான் அரசன்.
“மன்னா, கொஞ்சம் மண்ணை சுமக்கவே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே, இந்த இடத்தை மிரட்டிப் பறித்ததால் வரும் பாவத்தை எப்படி சுமப்பீர்கள்?’ துறவி கேட்க, பறித்த நிலத்தை திருப்பி மக்களுக்கே அளித்தான், திருந்திய மன்னன்.

Comments