அம்மனுக்குச் செய்யப்படும் அர்த்தநாரீஸ்வர அலங்காரம்!









இறைவனே பிறவிப் பிணிக்கு மருந்து என்பது அடியவர்தம் கருத்து. அந்தக் கடவுளே கலியுகத்தில் எல்லா நோய்க்கும் மாமருந்தாக இருக்கிறான்.
மருந்து என்ற பெயரிலேயே அழைக்கப்படும் இறைவன், மருங்கபள்ளம் என்ற ஊரில் காட்சியளிக்கிறார். இறைவன் திருப்பெயர், ஒளஷதபுரீஸ்வரர். அதாவது, மருந்தீஸ்வரர்.
பழமையான இந்தக் கோயிலில் ஈசன் வந்தமர்ந்தது எப்போது என்பதற்கான குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால் வரலாற்றுக் குறிப்பு ஒன்று. இத்தல இறைவனின் மகிமையை உணர்த்துவதாக உள்ளது.
இரண்டாம் சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலம் அது. மன்னர், இந்தக் கிராமத்தின் அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த “மனோரா’ பாணியிலான கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இங்கே வந்து தங்கியிருந்தார்.
அந்த சமயத்தில் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், மன்னர். பிணியால் அவர் பட்ட துன்பத்தைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர், இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் ஆற்றல் பற்றியும், ஆலயத்தைச் சற்றி ஏராளமான பச்சிலைகள் விளைந்து கிடப்பது பற்றியும் சொன்னார்.
இயல்பாகவே பக்தி நாட்டம் மிக்க மன்னர், இவ்வாலயம் வந்தார். இறைவனை வழிபட்டார். இங்கிருந்த நாட்களில் கோயில் திருக்குளத்திலேயே நீராடி இறைவனையும், இறைவியையும் வணங்கிய மன்னர், அரண்மனை வைத்தியரின் ஆலோசனைப்படி இங்கிருந்த பச்சிலைகளையும் மருந்தாக உட்கொண்டார்.
வெகு சீக்கிரமே முக்கண்ணன் அருளாசியாலும், மூலிகைகளின் பலனாலும் முற்றிலும் குணமடைந்தார் மன்னர். மனம் மகிழ்ந்த அரசர், அந்தப் பகுதிக்கு மருந்துப் பள்ளம் என்று பெயர்சூட்டி, அந்த கிராமத்தையே ஆலயத்திற்க தானமாக வழங்கினார். மருந்து பள்ளம் என்ற பெயரே மருவி தற்போது மருங்க பள்ளம் என அழைக்கப்படுகிறது.
மருந்துப் பள்ளமே மருந்துபுரி, வடமொழியில் ஒளஷதபுரி ஆக, இறைவன் மருந்துபுரீஸ்வரர் எனும் ஒளஷதபுரீஸ்வரர் ஆனார்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. வசந்த மண்டபம், மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இருக்கும் துவாரபாலகர்கள் அனுமதிபெற்று நுழைந்தால், வலதுபுறம் அனுக்ஞை வினாயகர் அருள்பாலிக்கிறார்.
தும்பிக்கையானை துதித்துவிட்டு கருவறையில் லிங்கத் திருமேனியராக காட்சிதரும் மருந்தீஸ்வரர் முன் கரம் குவித்து கண்மூடி நின்று பணிகிறோம். அப்போதே நம் மனப் பிணியும், உடல் நோயும் நீங்கிவிட்ட நிம்மதி நம் நெஞ்சில் நிறைகிறது.
வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகி சன்னதி. மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள் அம்பிகை. இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும்; ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கே செய்யப்படும் இந்த அலங்காரம் தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது. வசந்த மண்டபத்தின் வலதுபுறம், திறக்கபடாத சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.
இந்த ஆலயத்தைக் கட்ட உதவியவரான பிரமாதி ராயர் என்பவரின் திருமேனிச் சிலை, நந்தி மண்டபம் அருகில் உள்ளது. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
திருச்சுற்றில் முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர், லட்சுமி நாராயணர் அருள்பாலிக்கின்றனர்.
சனி பகவானுக்கு தனிச்சன்னதி உள்ளது. சனிக்கிர பாதிப்பு உள்ளவர்கள் இவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, எள் சாதம் பிரசாதமாக வழங்கி வருகின்றனர். ஆலயத் திருக்குளத்தில் நீராடி 108 முறை வெளிப்பிராகாரத்தை சுற்றி வர, தோஷ பாதிப்பின் வேகம் குறையும் என்கின்றனர், பக்தர்கள்.
சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசிமகம் அன்றும் சிவராத்திரி அன்றும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வருவர்.
திருவாதிரை அன்று பகலவன் அதிகாலை நேரத்தில் மூலவரை தன் பொற்கதிர்களால் ஆராதனை செய்வது கண் கொள்ளாக் காட்சி.
தலவிருட்சம் பாதிரி மரம், ஆலயத் திருக்குளத்தில் செந்தாமரையும் வெண் தாமரையும் கலந்து மலர்ந்து காணப்படுவது அபூர்வம்.
ஆலயம் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தன்னை வணங்கும் பக்தர்களின் நோய்களை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக்கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிரந்து எட்டு கி.மீ. தொலைவில் மருங்க பள்ளம் என்ற கிராமத்தில் உள்ளது மருந்தீஸ்வரர் ஆலயம்.

Comments