மீனாட்சி தரும் பட்டுப்புடவை

 மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களுள் ஒன்று செல்லத்தம்மன் திருக்கோயில். இது கண்ணகி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்ட இந்திரன் பல புண்ணிய நதிகள், தலங்கள் சென்றும் தன் பாவத்தை தீர்க்க முடியாமல் அலைந்து வந்தான். அந்த சமளயத்தில் ஒரு நாள் கடம்ப வனமாக இருந்த மதுரைக்கு வந்தான்.
அங்கே ஒரு கடம்ப மரத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவலிங்கம் ஒன்றை கண்டு அதிசயித்தான். உடனே விஸ்வகர்மாவை அழைத்துஅதற்கு விமானங்கள் எழுப்பி கோயில் கட்டி வழிபாடுகள் செய்தான். வழிபாட்டுக்கு மலர்கள் இல்லாமல் இந்திரன் தவித்தபோது அங்கே இந்த தீர்த்தத்தில் சிவனருளால் பொன்னாலாகிய தாமரை மலர்கள் தோன்ற அந்த பொற்றாமரையால் வழிப்பட்டான்.
அக்காலத்தில் பாண்டிதய நாட்டை, மணவூரை தலைநகராய் கொண்டு மன்னன் குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்த வியாபாரி ஒரு நாள். தன் வியாபார நிமித்தம் கடம்ப வனத்தின் வழியாய் சென்றான். மிகவும் இருட்டாகிவிட்டதால் இரவு அங்கே தங்கினான். அன்று இரவில் பெரொளியோடு கூடிய சிலர் வந்து அங்கேயிரந்த சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவதை கண்டவன் விடிந்ததும் விஷயத்தை ம்மனிடம் சென்று சொன்னான். வியப்பும் பெருமிதமும் அடைந்த அரசன் ஈசன் சித்தம் என்னவோ என சிந்தனையில் ஆழ்ந்தான்.
அன்றிரவு குலசேகர மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார். சிவபெருமானின் ஆணைப்படி கடம்பவன காட்டை திருத்தி புதிய மதுரை நகரை அமைத்தான். அரசன். நகரை காத்திட காவல்தெய்வமான காளிதேவிக்கு வடக்கு திசையில் தனியாக ஒரு கோயில் அமைத்தான். அதற்கு காரணம் வடக்கிலிருந்து தான் எல்லாப் படையெடுப்புகளும் மதுரை நோக்கி வந்ததாம். எனவே வடக்கு வாசலிலே மிக முக்கியமான வாசலாக கருதப்பட்டது.
காவல்தெய்வமாக அவன் அமைத்த அந்த காளி தேவி பிற்காலத்தில் தன்னை வழிபடும் அடியவரின் துயரங்களை தீர்த்து இன்பம் நல்கியதோடு செயல்வ9 வளமும் அருளியதால் செல்வத்தம்மன் என்று அழைக்கபட்டாள். அந்த பெயரே பின்னர் மருவி செல்லத்தம்மன் என்று வழங்கப்படலாயிற்று.
சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது இந்தக் கோயில் என்கின்றனர். மதுரையில் வைகையின் தென் கரையில் அமைந்திருக்கிறது கோயில். அசுரனை வதம் செய்த கோலத்தில் செல்லத்தம்மன் காட்சி தருகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள், தேவி.
காவிரிப்பூம்பட்டனத்தில் வசித்த கண்ணகியும் கோவலனும் பிழைப்பு தேடி மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்தார் கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி. இந்தத் திருக்கோயில் அமைந்திருந்த பகுதியில் வசித்த ஆயர்குலத்தவரிடம் கண்ணகியை ஒப்படைத்தார். அதன் பின்னரே, மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் கோவலன் ஊருக்குள் சென்றான்.
அப்போதுதான் கோவலன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, அவன் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. அதனால் கோபம் கொண்ட கண்ணகி, மதுரையை அழித்தது எல்லாம் நடந்தன. மதுரையை அழித்த பின் கோபம் தணிந்த நிலையில், தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குல மக்களிடம், “என்னை வழிபடும் அடியவர்களின் இன்னல் தீரும்’ எனக் கூறிச் சென்றாளாம் கண்ணகி. அதனை நினைவு கூரும் விதமாக இக்கோயிலில் கண்ணகிக்கும் தனிச்சந்நதி இருக்கிறது. இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் கோயில் கொண்டுள்ளாள். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண்கள் இடைச்சி அம்மனும் வடக்கு நோக்கி கொண்டுள்ளாள்.
செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஐயனார், பைரவர், ஐயப்பன் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். விநாயகர், மீனாட்சி - சுந்தரேசுவரர், மயில் மீது அமர்ந்த முருகபெருமான் ஆகியோர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். முன் மண்டபத் தூண்களில் அஷ்ட காளி சிற்பங்கள் உள்ளன.
பேச்சியம்மன் தெற்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளாள். தடையில்லா பேச்சாற்றல்பெற இவளை வழிபடுகின்றனர். கருப்பசாமியும், துர்க்கையும் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். மீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலிலிருந்து சுவாமியோ அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இந்தக் கோயில் அம்மன் மட்டும் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்றிருப்பது சிறப்பு...
தல மரம் வில்வம், அரசு, தீர்த்தம் வைகை. கோப குணம் மறைய, கணவன் - மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி குடும்பப் பிரச்னைகள் அகலவும் இங்கே வேண்டுதல் நடக்கிறது.
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகிறார்கள்.
நாகதோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து குங்குமம் தடவிய பஞ்சுத்திரி மாலை அணிவிக்கிறார்கள்.
தை மாத பிரம்மோற்ஸவத்தின்போது, சிவன், அம்பாள், திருக்கல்யாண வைபவம் நடக்கும். திருக்கல்யாணத்தன்று அம்பை, மீனாட்சியம்மன் கோயில், சினவ் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவாள். சிவன் சன்னதியில் இருந்து பட்டுப்புடைவை எடுத்து வந்து அம்பாளுக்கு அணிப்பவர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். தை, ஆடி வெள்ளி, நவராத்திரி நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவிலுள்ளது. கண்ணகி கோயில் எனும் செல்லத்தம்மன் ஆலயம்.

Comments