அருள் பெருக்கால் பக்தர்களை அரவணைக்கும் அம்பிகைக்கு ஆயிரமாயிரம் திருநாமங்கள். அந்தத் திருநாமங்களில் விசேஷமானது காமாட்சி. “காமாட்சி’ என்றாலே நம் ஆசைகளைத் தன்னுடைய கடாட்சத்தாலே நிறைவேற்றுபவள் என்று அர்த்தம்.
கரும்பும் வில்லும் மலரம்பும் தரித்து அநுகிரகம் செய்கிற ஜகதீஷ்வரிதான் காமாட்சி. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு. மன்மதன் என்கிற காமன்தான் அவன்! சிருஷ்டி லீலை நடக்க வேண்டும் என்பதற்காக மன்மதனுக்கு கரும்புவில்லையும் மலரம்புகளையும் தந்தே அம்பாள்தான். ஆனால் அதே அம்பாள், தான் கொடத்த கரும்பு வில்லையும் மலர் அம்பையும் அவளே எடுத்துக் கொள்ளும்படியாகி விட்டது.
தேவி மகாத்மியத்தில் இந்தக் கதை இருக்கிறது. ஒருமுறை பரமேசுவரன், தட்சிணாமூர்த்தியாக தவக் கோலத்தில் அமர்ந்து விட்டார். அவர் இப்படி ஞான ஸ்வரூபமாய் அமர்ந்ததும், தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்களுக்குக் கொண்டாட்டமாகி விட்டது. சாட்சாத் பரமேஸ்வர தேஜஸிலிருந்து உண்டாகும் குமாரன்தான் தங்களை வதம் செய்ய முடியும் என்று வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
எனவே, அசுரர்களால் இம்சிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. மன்மதனை ஏவிவிட்டார்கள்.
லோகம் முழுக்க சிருஷ்டியை உண்டாக்கும் ஆற்றலை மன்மதனுக்குத் தந்ததே பரமேஸ்வரன்தான். அந்தப் பணிவான பக்தியுடன் மன்மதன் போயிருந்தால் விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் இவன் போனதோ அகம்பாவத்தோடு! பெற்ற தாயிடமே கற்ற வித்தையைக் காட்டுவது போல, பரமேஸ்வரன் மேல் மலர் அம்புகளை விட்டான்.
சட்டென்று ஸ்வாமிக்கு ஒரு சலனம் ஏற்பட்டது. அக்கினிமயமான நெற்றிக் கண்ணை கொஞ்சூண்டு திறந்தார். அவ்வளவுதான். மன்மதன் அப்படியே எரிந்து சாம்பலாகிவிட்டான்.
பார்வதி தேவி மன்மதனைப் பார்த்து, “எல்லாம் வல்ல ஈஸ்வரனிடம் உன் சக்தியைக் காட்டிப் ப்ரயோஜனமில்லை; அவர் பக்திக்குத்தான் வசப்படுவார். அவரிடம் எப்படிக் காரியம் நடத்திக் கொள்வது என்று இப்போது பார்!’ என்று சொல்லி விட்டு, மன்மதனிடமிருந்த கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டாள். ஈசுவரனிடம் போய் நின்றாள். அன்பு மயமாகப் பார்த்தாள். காமம் என்றால் - அன்பு. அக்ஷி - என்றால் கண. அன்பு பொங்கும் கண்களை உடையவள் காமாக்ஷி. அப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது. அன்பு பொங்கும் கண்களை உடையவள் காமாக்ஷி.
பிறகு பார்வதி கல்யாணம் - அதன்பின் குமார சம்பவம். அதாவது முருகக் கடவுளின் அவதாரம். அப்புறம் சுப்ரமண்யரால் தாரகன், சூரபத்மன் ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.
ஒசூரில் அருள்பாலிக்கும் கல்யாண காமாட்சியிடம் வேண்டிக் கொண்டாலும், வரம் எல்லாம் தந்து வாழ்த்தி அருள்வாள்.
சற்றே விசாலமானத் திருக்கோயில், கோசாலையும், தியான மண்டபமும் உள்ளன. காமாட்சியானவள் தனிச் சந்நிதியில் எழிலே உருவாகத் தன்னை நாடி வருபவர்களுக்கு, அள்ளி அள்ளித் தரும் வரம் தரும் காமாட்சியாக விளங்குகிறாள். குறிப்பாக கல்யாணத் தடையை நீக்கி, மாங்கல்ய பலம் தந்து, மனசுக்குப் பிடித்த மணவாழ்க்கையைத் தருகிறாள் என்பதால் இங்கு எந்நேரமும் பக்தர்களின் கூட்டம்.
பால்குடம் எடுத்தல், அன்னதானம், வளையல் அலங்காரம், விளக்குப் பூஜை, சிறு குழந்தைகள் தளிர் கரங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தல், லட்சார்ச்சனை, நவராத்திரி கொலு, சிறப்பு அலங்காரம், கலை நிகழ்ச்சிகள், திருக் கல்யாண வைபவம் என இங்கு நாளும் வைபவம்தான்.
கோடி சூரியப் பிரகாசமாய் ஒசூரில் வீற்றிருக்கும் கல்யாணக் காமாட்சி, நம் ஒவ்வொருவரையும் ரட்சிப்பாளாக!
Comments
Post a Comment