பவிஷ்ய புராணம்











பதினெட்டுப் புராணங்கள், ராமாயணம், விஷ்ணு தர்மம், சிவதர்மம், வேதவியாசர் அருளிய ஐந்தாவது வேதமென்று அழைக்கப்படும் மகாபாரதம் என அனைத்தையும் தெரிந்து தெளித்து அறிந்தவரே மகாகுரு. அவர் எல்லோராலும் பூஜிக்கப்பட வேண்டியவர்.
அந்தணர்களுக்கு மூன்று பிறப்பு உள்ளதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. இரு பிறப்பாளர் என்றுதான் மற்ற புராணங்கள் கூறும். திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதப்பெருமான் தமது குருவான ஞானசம்பந்தரை இரு பிரப்பாளர் (த்வி-இருமுறை; ஜாயதே - பிறக்கிறவர்) என்றுதான் கூறுகிறார்.
காலடியில் பிறந்த சங்கரரை முதலை விழுங்க வந்தபொழுது இந்த சமாதானத்தைச் சொல்லித்தான் அன்னையிடம் சன்னியாசத்துக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டார் ஆதிசங்கரர்.
பவிஷ்ய புராணப்படி யாக தீட்சை பெற்றுக் கொண்டதும் மூன்றாம் முறையென பிறப்பெடுக்கிறான். கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்பொழுது மாதா பிதாவும்; யக்ஞோபவீதத்தின்போத காயத்ரி மாதாவாகவும்; தீட்சையின்போது ஆச்சாரியர் பிதாவாகவும் கூறப்படுகிறது.
வேதத்தினை முறைப்படி கற்றவர் எவராயினும் அவர், வேத மந்திரத்தை விடாமலிருக்க வேண்டும். வேத மந்திரத்தைத் தவறாக உச்சரிக்கக்கூடாது. தினமும் நீராடி தெய்வங்களுக்கான பூஜை-ரிஷிகள், பித்ருக்கள் ஆகியோருக்கான தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
பூக்கள், பழம், நீர், சமித்து, மிகுத்திகை (மண்) தர்ப்பை போன்றவற்றுடன் அநேக விதமான சிராய்கள் சேகரிக்க வேண்டும். பிராணிகளை இம்சை செய்தல், சரீரஉபாதை, பொய் பேசுதல், தூஷனை சொல்லுதல், வம்பு பேசுதல், காம, குரோத, லோபவங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பிரம்மசாரிகள் தனியே இருத்தல் நல்லது. குருவிடமோ, தங்கள் உறவினர்களிடமோ பிட்சை கேட்கக் கூடாது. வெளி இடங்களில் பிட்சை கிடைக்காவிட்டால் தன்னைச் சார்ந்தவர்களிடம் பிட்சை கேட்கலாம். ஒரே வீட்டிலேயே தொடர்ந்து பிட்சை கேட்கக் கூடாது.
குருவின் முன்னால் கை கட்டி நிற்க வேண்டும். அவருக்கு முன்னால் ஆசனத்தில் அமரக் கூடாது. அவர் சொன்ன பின்னரே உட்கார வேண்டும். அவர் தூங்கிய பின் தூங்க வேண்டும். அவர் எழுந்திருப்பதற்கு முன்னால் எழுந்திருக்க வேண்டும். குரு இல்லாத பொழுத அவர் பெயரை உச்சரிக்கக் கூடாது. குருவை கேலி பேசவோ, அவர் குரலைப் போல் பேசியோ காட்டக் கூடாது.
குரு வாகனத்தில் ஏறும் பொழுது வணங்கக்கூடாது. ஏறிய பிறகே வணங்க வேண்டும். குரு பத்தினியையும் குருவைப் போலவே மதிக்க வேண்டும். அம்மா, அக்கா, பெண் ஆகியோருடன் ஒரே ஆசனத்தில் அமரக்கூடாது.
எவ்வாறு மண் மாதாவைத் தோண்டத் தோண்ட ஊற்றுத் தண்ணீர் பெருக்கெடுக்கிறதோ அதுபோல் வித்தையை ஆசிரியர் மூலம் உழைத்து உழைத்துத் தேடி கற்க வேண்டும்.
சூரியன் உதயமாவதற்கு முன்னும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னும் சந்தியா வந்தனத்தை செய்துவிட வேண்டும். மாதா, பிதா, அண்ணா, ஆச்சாரியர் ஆகியோரை அனாதையாய் விடக்கூடாது. ஆச்சாரியார் பிரம்மாவுக்கு சமமானவர். பிதா பிரஜாபதி, மாதா பிரத்வி (மண்மாதா), அண்ணன் ஆத்ம மூர்த்தி. அதனால்தான் இவர்களை அனாதையாய் விடக் கூடாது.
மாதா, பிதா, குரு இவர்களை மகிழ்ச்சியாய் வைத்துக் கொண்டால் தவத்தின் பலன் கிடைக்கும். இவர்களுக்குப் பணிவிடை செய்தால் எல்லாப் பலன்களும் கிடைக்கும். இவர்கள் மூன்று பேரின் அனுமதியின் பின்னர்தான் எந்தத் தவமோ, விரதமோ, முக்கியக் காரியங்களோ மேற்கொள்ள வேண்டும்.
மாதா, பிதா, ஆச்சார்யர்கள்தான் மூன்று உலகங்கள். இவர்களேதான் மூன்று ஆஸ்ரமங்கள். மூன்று அக்னிகளும் இவர்களே. மாதா கர்ப்பத்தீ, பிதா தட்சிணாக்கினி, குரு ஆஹ்வனிய அக்னி. அதாவது அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே என்றாரே அந்த அடி வயிற்றுத் தீ. பிதா, பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே என்கிறாரே அந்த தட்சிணக்கினி, ஆச்சார்யர்தாம் கடவுள் அழைக்கும் பொழுது செய்கிறோமோ அந்த ஹோமத் தீ.
இவர்களை ஆராதிப்பவன், மூன்று உலகங்களையும் ஆள்வதோடு தேவலோக பதவியையும் பெறுகிறான். மாதாவை ஆராதிப்பவன், இந்த உலகத்தையும்; பிதாவை ஆராதிப்பவன் மத்ய லோகத்தையும்; ஆச்சார்யர்களை ஆராதிப்பவர்கள் இந்திர லோகத்தையும் ஆள்வார்கள். எவனொருவன் இந்த மூவருக்கும் முழு மனத்துடன் அவர்கள் மகிழும்படி செய்கிறானோ அவன் தனது செயல்கள், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைகிறான்.
சகல தர்மங்களும் அவனை வந்து அடைகின்றன. வேறு எந்த தர்மமும் செய்ய வேண்டியதில்லை. உத்தமமான பெண், ரத்னம், வித்யை, தர்மம், நல்ல இனிமையான பேச்சு, அனேகவிதமான சிற்பங்கள் ஆகியவற்றை முறையான நல்வழி, நல்ல முயற்சியினால் மட்டுமே பெறுதல் வேண்டும்.
படிக்கும் காலத்தில் குருவுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. படிப்பு முடிந்தவுடன் குருவின் ஆணைப்படி பூமி, பொன், வஸ்திரம், தானியம், காய்கறி, மாடு, குதிரை என்று குரு தட்சிணை கொடுக்க வேண்டும். இந்த குருதட்சணை கொடுத்து முடித்தால்தான் குருகுலவாசம் முடிந்ததாக அர்த்தம்.
குருவானவர் தன் ஞானத்தையும், அறிவையும் பகிர்ந்து அளிக்க வேண்டும். சீடன் தன் குரு தட்சணையைத் தன் முயற்சியினாலேயே பெற்றுத் தர வேண்டும். அது பெற்றோர்களிடமிருந்தோ, ÷வ்டப்பட்டவர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ பெற்றுத் தந்ததாக இருக்கக் கூடாது.
குருகுலவாசம் முடிந்து வீடு திரும்பியவுடன் விவாகத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சுநந்து முனிவர் சொல்லியிருக்கிறார்.
“பெண்களின் முக்கிய லட்சணங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டான், மன்னர் சுதானிகர்.
“மன்னா! மகரிஷிகள், ஞானிகள் முதலியோர் ஏற்கெனவே உத்தமப் பெண்களின் லட்சணங்களைப் பற்றிக் கூறியுள்ளனர். செந்தாமரைப் போன்ற பாதங்களை உடைய பெண்கள் பாக்யவதி. கடினமான, பூமியைத் தொடாத பாதங்கள் உடைய பெண்கள் மத்திமமான யோகத்தினை உடையவர்கள். விரல்கள் நெருக்கமாக உள்ள பெண்கள் ராஜகோயத்தை அனுபவிப்பர்.
விரல் நகங்கள் சிவப்பாகவும், ஒளியுடைனும் இருந்தால் எல்லா சுகங்களையும் அனுபவிப்பர்.
சிங்கத்தினுடையது போன்ற முழுங்கால் முட்டுகள் இருந்தால் அவர்கள் அதிஷ்டக்காரர்கள்.
மேலும் முதல் பிரசவத்தின்போது தாயின் தனங்கள் அமைவதைப் பொறுத்து, என்ன குழந்தை பிறக்கும் என்பதையும் அறிய முடியுமாம்.
கைகளில் நான்கு நரம்புகள் தெரிகின்ற பெண் கணவரிடம் அதிக அன்பைப் பெறுவாள். கைவிரல்களில் சக்கரங்கள் இருந்தால் மேன்மை அவர்களைத் தேடி வரும்.
பெண்ணுக்குக் கழுத்து நான்கு அங்குலம் சுற்றளவுக்கு மூன்று ரேகை மடிப்புகள் தென்பட்டால் ரத்ன ஆபரணங்கள் அடையும் வாய்ப்பு அடைவார்கள். மடிப்பு இல்லாத கழுத்து, நீளமான கழுத்து, ஏற்ற இறக்கமான கழுத்து உள்ளவர்கள் பிரசவத்தின்போது கவனமாக இருப்பது நல்லது.
மூக்கு ஒடிசலாகவும் அதிக நீளமாக அல்லது உயரத் தூக்கியோ இல்லாமல் இருப்பது அழகு. வில்போன்ற புருவத்தை உடையவர்கள் சௌபாக்யவதிகளாக இருப்பர். கூந்தல் கருப்பாக, மென்மையாக, வழுவழுப்பாக இருப்பது உத்தமம். அன்னம், குயில், வீணை, வண்டு, மயில் போன்ற குரலமைப்பு உள்ளவர்கள் வெகு சுகத்தை அடைவதோடு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளையும் வீட்டில் அமர்த்திக் கொண்டிருப்பார்கள்.
பெண்களின் நடை ஹம்சம் (அன்னம்), பசு, காளை, மதயானை சக்ரவாகம் போன்றவற்றின் நடையை நிகர்த்ததாக இருப்பது சிறப்பு. குலத்திற்கே பெருமை தருவார்கள்.
நட்சத்திரம், மரம், நதி, பர்வதம், பட்சி, பாம்பு போன்றவற்றின் பெயர்களை பெண்களுக்கு சூட்டாமல் இருப்பது நல்லது.’
சதானிக மன்னர் முனிவரிடம் “இல்லறத்தில் பெண்களின் நல்லொழுக்ம் பற்றி அறிய விரும்புகிறேன். அதைப் பற்றிச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டார்.
“குருகுல வாசத்தை முடித்த இல்லறத்தில் புகுவதற்கு முன்பு ஒருவன் தனத்தைச் சேகரிக்க வேண்டும். அதன் பின்பு சுதந்தரமான குணவதியான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தனம் இல்லாவிட்டால், இல்லறம் கேள்விக் குறையாகி விடும். அதனால்தான் தனத்தை சேகரித்த பின்பு இல்லத்தில் இறங்க வேண்டும். தனமில்லாத இல்லறம் வறுமையில் வாடும். இதனால் ஆண்-பெண்கள் படும் துயரம் நரகத்தை விடக் கொடுமையானது.
பணம் இல்லாமல் இல்லறத்தை சிறப்பாக நடத்தவும் முடியாது. முப்பேறுகளான தனம், தர்மம், காமம் இவற்றை சரிவர நடத்த, மனைவியும் தர்மமும் இருந்தால்தான் அதன் அர்த்தமே முழுமையாகும்.
தர்மம் இரண்டு வகைப்படும். ஒன்று இஷ்ட தர்மம். அதாவது யாகங்கள் செய்வது. இரண்டாவது பூர்த்தி தர்மம். குளம், கிணறு, நீர்நிலைகள், ஏரி வெட்டுவது. இரண்டுக்குமே தனமும், மனைவியும் தேவை.
அறிஞனிடம் வித்தை வேண்டுமானால் வரலாம். மற்றவை வராது. கிடைக்காது. பூர்வ ஜன்ம புண்ணியத்தினால்தான் தனம் கிடைக்கிறது. இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்யவும் முடிகிறது. இதனால் தர்மமும் புண்ணியமும் இரண்டறக் கலந்து நிற்கின்றன.
செல்வத்தை நியாயமான மார்க்கத்தில் அடைய வேண்டும். அதன் பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். தேர் ஓட இரு சக்கரங்கள் தேவை என்பது போல - பறவை பறக்க இரு சிறகுகள் தேவை என்பது போல - மனைவி இல்லாமல் ஒருவன் செய்யும் தர்ம காரியங்கள் பலன் தராது.
விவாகம் செய்து கொள்ள நினைக்கும் பொழுது மூன்று நிலைகளை கவனிக்க வேண்டும்.
குலம், சீலம், வித்தை இவைகளில் சமான நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நட்பும், அன்பும் மாறாது.
எப்படி ஆண் குலகுரு வாசம் முடிந்து தனத்தைச் சேகரித்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமோ அதே போல் எப்பொழுது, எப்படி பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுகிறது.’

Comments