ஆவுடை மேல் அருள்பாலிக்கும் ஆறுமுகன், துணி துவைக்கும் கல்லில் உருவான தும்பிக்கையான், வெட்டவெளியில் இந்திரன் சிலை, கூடு விட்டு கூடு பாயும் சாமியார் வசித்த குகை, ஒட்டி வளர்ந்த இரட்டைத் திருவோடு, அபூர்வ மூலிகைகள் கொண்ட அழகிய மலை...
இவற்றையெல்லாம் தரிசிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் செஞ்சிக்கு அருகில் மேல் ஒலக்கூரில் அமைந்துள்ள பசுமலை சுப்ரமண்ய சுவாமி ஆலயத்திற்கு அவசியம் வாருங்கள்....
பசுமையான நினைவுகளோடு நீங்கள் திரும்பிச் செல்வது நிச்சயம்!
அது என்ன பசுமலை?
பசு உருவில் இந்திராதி தேவர்கள் வழிபட்ட மலை என்பதால் பசுமலை. அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. திருப்புகழில் கோகிரி என்று இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தூரத்தில் இருந்து பார்க்கும்போதே மலையின் அழகு நம்மை வசீகரிக்கிறது. நெருங்கிச் சென்றால் நெஞ்சம் நிறைகிறது. மலையைச் சுற்றிலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கக்கூடிய மூலிகைகள் இருக்கின்றனவாம்.
அடிவாரத்தில் இரு விநாயகர்கள் ஒரே சன்னதியில் ஒருவருக்குப் பின் ஒருவர் நேர்க்கோட்டில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. அதில் ஒருவரான சுயம்பு விநாயகர், இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் சலவைத் தொழிலாளி ஒருவர் இவ்வூர் ஏரியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாராம். அன்று ஏரியின் நீர்மட்டம் சற்றுக் குறைந்திருந்ததால், துணி துவைக்கப் பயன்படும் கல்லை நீருக்கருகில் கொண்டு செல்வதற்காக திருப்பிப் போட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டிருக்கிறார்.
கல்லில் விநாயகரின் உருவம் தெரிய ஆச்சரியமும், இவ்வளவு நாளாக விநாயகரின் முதுகிலேயே அழுக்குத் துணியைத் துவைத்திருக்கிறோமே என்று ஆழ்ந்த வேதனையும் அடைந்திருக்கிறார்.
இந்த விஷயம் ஊர் முழுக்குப் பரவ, அனைவரும்கூடி ஆனைமுகனை தரிசித்திருக்கிறார்கள். பிறகு இந்த சுயம்பு விநாயகர் பசுமலையின் அடிவாரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கிவிட்டார். சில காலத்திற்குப் பின் இவருக்கு முன் இன்னொரு விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டாராம். இந்த இரட்டை விநாயகர்களை வணங்கினால் பலனும் இரு மடங்காக கிடைக்கிறதாம்.
இவர்களுக்கு இடதுபுறமாக நவகிரக சன்னதி அமைந்துள்ளது. சன்னதியினுள் சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக நாகபிரதிஷ்டையும் செய்யப்பட்டிருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நவகிரகங்களையும் நாகரையும் ஒரு சேர வழிபட்டால் நற்பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
அடிவார தெய்வங்களை வணங்கிவிட்டு ஆறுமுகனை வழிபட 410 படிகள் ஏறவேண்டும். மலையேறும்போது, தாவித்தாவி அங்கும் இங்கும் ஓடும் குரங்குகளை ரசித்தவாறு சுமார் நூறு படிகளைக் கடந்துசென்றால், அனுமன் சன்னதி.
ஸ்ரீராமஜெயம் எழுதிய காகிதமாலைளில் கம்பீரமாகத் திகழ்கிறார், ராமதூதனான ஆஞ்சநேயர். பெரும் வரப்பிரசாதியான அவருக்கு, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களால் நன்றிக் கடனாக அணிவிக்கப்பட்ட மாலைகளால் அவை. அவர் சன்னதிக்கு அருகே பாறையில் நாமம் தீட்டப்பட்டுள்ளது.
அடுத்து ஒரு குகை. அங்குச் சென்றால் நமக்கு ஆச்சரியமான, அபூர்வமான செய்திகள் கிடைக்கின்றன.
அந்தக் குகையில் சடை சாமியார் என்ற சித்தர் வசித்து வந்தாராம். பெரும்பாலான நேரங்களில் தவத்திலேயே மூழ்கியிருக்கும் அவருக்கு ஒரு சீடன் உண்டு. தினமும் மாலையில் அவன் மட்டும் வீட்டிற்குச் சென்று விட்டு காலையில் குகைக்குத் திரும்பிவிடுவது வழக்கம்.
ஒருநாள் மாலை மயங்கி இருட்டத் தொடங்கியும், சீடன் வீட்டிற்கு கிளம்பியபாடில்லை. உடனே அவனை குகையிலிருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டாராம், சாமியார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சீடன், வீட்டிற்குக் கிளம்பாமல் ஒரு பாறை மறைவில் பதுங்கிக் கொண்டானாம். சில நிமிடங்கள் கழித்து மெதுவாக குகைக்குள் எட்டிப் பார்த்தபோது, அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாமியாரின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியே கிடந்தனவாம்.
அதைக் கண்டு அலறியபடி ஊருக்குள் ஓடிய சீடன், “சாமியாரை யாரோ வெட்டி விட்டார்கள்’ என்று அங்குள்ளவர்களிடம் கூறியிருக்கிறான். ஊர்மக்கள் ஒன்று திரண்டு குகைக்குச் சென்று பார்க்க, அங்கே சாமியார் வழக்கம் போல் தியானத்தில் ஆழ்ந்திருந்தாராம்.
அப்போதுதான் அந்தச் சாமியார் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்றவர் என்பதும்; கூடு விட்டு கூடு பாயும் ஆற்றலும் அவருக்கு உண்டு என்பதும் புரிந்திருக்கிறது.
சடைசாமியாருக்குப் பிறகு லலிதானந்த சுவாமிகள் என்பவர் அந்தக் குகையில் நீண்ட காலம் தவமியற்றி வந்தாராம். மிகப் பெரிய மகானான அவருக்கு பசுமலைக்கு எதிரே தனியாக ஆசிரமமும் இருந்ததாம். தற்போது தியான மண்டபமாக மாறியுள்ள அதில் அவரது திருவுருவச் சிலையும், அவர் பயன்படுத்திய பொருட்களும் இடம் பெற்றுள்ளன. அதையொட்டி அமைந்துள்ள அவர் சமாதியின் மேல் சிவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. நர்மதையிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணலிங்கம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சாமியார்கள் தவமிருந்த குøக்குச் சென்றுவிட்டு மீண்டும் படியேறி மலை உச்சியை அடைகிறோம். அங்குதான் அழகன் முருகனுக்கு அருமையான கோயில் அமைந்துள்ளது.
ஆதியில் வேல் மட்டும் வைத்து வழிபாடுகள் நடத்தியிருக்கிறார்கள். முந்நூறு வருடங்களுக்கு முன்னர் ஊர் ஜமீன்தாரால் முழுமையான கோயில் கட்டப்பட்டதாம்.
பலிபீடம், கொடிமரத்தை அடுத்துள்ள முருகனின் மயில்வாகனம் நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு நாகத்தை வாயில் கவ்விக் கொண்டும், இன்னொரு நாகத்தை காலால் மிதித்துக்கொண்டும் மயூரர் காட்சியளிக்கிறார்.
மகாமண்டபத்தில் விநாயகர், பராசக்தி; தனிச் சன்னதியில் ஆவுடையின் மேல் சிவசொரூபமாக அருள்பாலிக்கும் பாலதண்டபாணி ஆகியோரின் அற்புத தரிசனம் கிட்டுகிறது. சன்னதியின் மேற்கூரை கூம்பு வடிவில் அமைந்திருப்பதும், சன்னதிக்கு வெளியே மேலிருந்து கீழாக தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டி வளர்ந்து இரட்டை திருவோடும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அர்த்த மண்டப முகப்பில் கஜலட்சுமி அருள, அடுத்து கருவறை. அங்கே வள்ளி, தெய்வானை சமேதராக மூலவர் சுப்ரமண்யர் அருள்பாலிக்கிறார். ஆற்றல்மிக்கவரான இவரை வழிபட்டு, கோயிலுக்கு எதிரேயுள்ள வெப்பால மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால் மகப்பேறு விரைவில் கிட்டுகிறதாம். மேலும் திருமணத்தடை நீங்கவும், நோய் நொடிகள் விலகி ஆரோக்கியத்தில் அபார முன்னேற்றம் ஏற்படவும் அருள்புரிகிறாராம். கோயிலுக்குப் பின்புறம் சுனை ஒன்று உள்ளது. விசேஷ தினங்களில் அங்கிருந்து எடுக்கப்படும் நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
பசுமலை சுப்ரமண்ய சுவாதி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலருக்கும் குலதெய்வம். அதனால் பொங்கல் வைத்த காது குத்துதல், மொட்டை போடுதல் போன்ற வேண்டுதல்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன.
காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை தரிசனத்திற்குத் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம், ஆடிக் கிருத்திகை, ஆவணி கிருத்திகையில் திருப்படி விழா மற்றும் அருணகிரிநாதர் விழா, மாத கிருத்திகைகள் போன்ற முருகனுக்குரிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
தற்போது அடிவாரத்தில் முருகன் திருக்கல்யாண மண்டபத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பசுமலையை பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அப்போது இவ்வாலயத்தின் பரிவாரத் தெய்வங்களாக வெட்டவெளியில் காட்சிதரும் இந்திரன் மற்றும் சப்த கன்னியரை தரிசிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. இங்கு இந்திரன் சிலை அமைந்திருப்பது மிக அபூர்வம் என்கின்றனர்.
தைப்பூசத்தன்று அருகிலிருக்கும் வெடால் கிராமத்திலிருந்து சௌந்தரநாயகி சமேத நீலகண்டேஸ்வரர் இத்தலத்திற்கு எழுந்தருளி, அடிவாரத்திலிருக்கும் குளக்கரையில் மண்டகப்படி பெற்று பசுமலையை வலம் வருகின்றனர். தந்தையும் தாயும் மகனை வலம் வருவது ஆச்சரியம்தானே!
ஒரு பசுவிற்குள் அனைத்த தெய்வங்களும் அடக்கம். அதுபோல இங்கு பசுமலையை வலம் வந்தால் அனைத்துத் தெய்வங்களின் அருளும் கிட்டும் என்பது நிச்சயம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் மேல் ஒலக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது, பசுமலை சுப்ரமணியர் ஆலயம். செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு வெடால் கிராமத்திற்குச் செல்லும் 11ஏ பேருந்தில் சென்றால் தரிசன நேரத்தில் கோயிலை அடையலாம்.
Comments
Post a Comment