எழுச்சூர் - நதி, நந்தி, ஈசன்








உங்களிடம் பணம், காசு, நகை, வீடு, வாகனம் இப்படி எல்லாச் செல்வமும் இருக்கலாம். ஆனால் அனைத்தையும் நீங்கள் நிம்மதி, சந்தோஷம், உற்சாகமாக அனுபவிக்க வேண்டுமானால் அதற்க ஒரு விஷயம் அவசியம் தேவை. அது, நல்லிணக்கம் என்கிற ஒற்றுமை.

எல்லா வரமும் தரும் இறைவன் ஒற்றுமை வரத்தினை அளிப்பதற்காகவே நல்லிணக்கேஸ்வரன் என்ற திருப்பெயரோடு கோயில் கொண்டிருக்கிறார். ஒரு திருத்தலத்தில். அவர் அங்கே வந்ததற்குக் காரணம், பெண்கள். யார் அவர்கள் என்பதும் எப்படி அவர்கள் காரணமானார்கள் என்பதும் தலபுராணம்.

அழகான இளம் பெண்கள் ஓரிடத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அங்கே வேடிக்கை, விளையாட்டு, சிரிப்பு, சந்தோஷம் என்று எல்லாமே நிறைந்துதானே இருக்கும்!

அப்படித்தான் இருந்தது அந்த இடமும், இருவரல்ல, மூவரல்ல - ஒன்பது பெண்கள் அங்கே கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும்தான் அந்த நவ கன்னிகைகள். நதிதேவதைகள் என்பதால், கொஞ்சம் அதிகமாகவே சலசலத்தார்கள்.
நேரம்போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்த அவர்களின் மேல் யார் கண் பட்டதோ திடீர் என்று, தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று சண்டை போட ஆரம்பித்தார்கள், தங்களுக்குள் யார் உயர்ந்தோர் என்று.
போதாக்குறைக்கு, அங்கே வந்த நாரதர், புதிதாக ஒரு பிரச்னைக்கு தூபம் போட்டார்.

“எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் எல்லோருமே உங்களில் மூழ்கி எழுவோர் பாவங்களைப் போக்குபவர்கதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், உங்களில் நீராடுவோர் செய்கிற பாவங்கள் உங்களிடம் சேருகிறதே, அதை எப்படிப் போக்கிக் கொள்வீர்கள்?’ நச்சென்று கேட்டார் நாரதர்.
அவ்வளவுதான், சலசலத்துக் கொண்டிருந்த நதிப்பெண்கள் வெலவெலத்துப் போயினர்.
“எங்கே போகும் எங்களின் பாவம்?’ அச்சத்துடன் நாரதரையே கேட்டனர்.
“அதற்கு விடையை, விடை வாகனனால்தான் சொல்லமுடியும்!’ நாரதர் சொல்லிவிட்டு போக, நந்திவாகனனை வணங்கிடச் சென்றனர், நவகன்னியர்.
உரிய காலத்தில் அவர்களுக்குக் காட்சிதந்த உமைபாகன், “நதிக்கன்னியரே, நீங்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் உங்கள் பாவங்கள் தொலையும்...!
அதோடு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று ஒற்றுமை இல்லா மனப்பான்மையோடு இருக்கும் நீங்கள், முதலில் எம்மை பூஜித்து அந்தத் தீய குணங்கள் நீங்கியபின் நீராடினாலே முழுமையான பலன் கிட்டும்!’ எனச் சொல்லி மறைந்தார்.
உன்னதமான ஓரிடம் தேடிய நதிக் கன்னியர், வெளிமா நல்லூர் எனும் தலத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒற்றுமையாக சிவபூஜை செய்யத் தொடங்கினர்.
அவர்களின் குளுமையான பூஜைகளால் மனம் இரங்கிக் காட்சிதந்தார் மகேசன். நதிகளான அவர்களுக்குள் இருந்த பேதங்களைப் போக்கி நல்லிணக்கம் ஏற்படுத்தினார்.
“சுவாமி, தங்களின் தரிசனத்தோடு, மும்மூர்த்திகளில் மற்ற இருவரின் திருக்காட்சியும்கிட்ட அருளவேண்டும்!’ என வேண்டினர் நவ நதி தேவியர்.
அப்படியே இறைவன் ஆசிவழங்க, மாலும் அயனும் அங்கே எழுந்தருளினர்.
மகிழ்ந்தனர் நதிக் கன்னியர். தங்களுக்கு காட்சியளித்த வடிவிலேயே மும்மூர்த்தியரும் அங்கே கோயில்கொள்ள வேண்டும் என்றும், வழிபடுவோர் வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டினர். ஏற்றார்கள் மும்மூர்த்தியரும்.
இதோ இன்றும் அதே தலத்தில் நதிக் கன்னியருடன் மும்மூர்த்திளும் தம்பதி சமேதராக அவரவர் வாகனத்தில் எழுந்தருளிய கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். நதி நாயகியரிடையே நல்லிணம் ஏற்படுத்தக் காட்சியளித்த ஈசன், நல்லிணக்கேஸ்வரர் என்றே திருநாமம் கொண்டு தனிக் கோயில் கொண்டுள்ளார்.
சரி, இதோ இப்போது நாம் நல்லிணக்க நாதரை தரிசிக்க அன்றைய வெளிமா நல்லூரான இன்றைய எழுச்சூருக்கு வந்திருக்கிறோம்.
ஒரகடம் கூட்டு ரோட்டில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ. நடந்து செல்லப் போகிற நாம், கோயில் அடையும்முன், வெளிமா நல்லூர், எழுச்சியூரான வரலாற்று சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.
சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்து சம்பவம் அது. ராஜராஜ சோழப் பேரரசின் மூன்று தலைமுறைக்கு முற்பட்ட மன்னன், கோப்பரகேசரி முதலாம் பராந்தக சோழன். பலகாலம் போர் புரிந்தபின் இத்தலம் வந்தான். அப்போது, இனி போர் வேண்டாம் அமைதியாக ஆட்சி செய்÷õவம் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.
தன் மனதில் எழுச்சி ஏற்படக் காரணமான இவ்வூரின் பெயரை எழுச்சியூர் என்றே அறிவித்து, நல்லிணக்க நாதருக்கு ஒரு கற்றளி ஆலயமும் அமைத்தான். இந்த வரலாற்றினை இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில் காணமுடிகிறது. எழுச்சியூர், பேச்சு வழக்கில் எழுச்சூர் ஆகிவிட்டது.
இதோ, கோயிலுக்கு அருகே வந்துவிட்டோம். சாலையில் இடதுபுறமாக மிகப் பழமையான வேப்பமரம் ஒன்றின் கீழ் சிறிய பீடத்தில் ஒரே கற்பலகையில் வடிக்கப்பட்ட நவ நதிக் கன்னியர் இருக்கிறார்கள். முதலில் அவர்களைக் கும்பிடுவோம். இத்தலத்தில் இறைவன் எழுந்தருளக் காரணமான இவர்களை வழிபட்ட பிறகு இறைவனை தரிசித்தால்தான் பலன் முழுமையாகக் கிடைக்குமாம்.
ஒரு விஷயம், ஏழு கன்னியர் வடிவங்கள்தான் இருக்கிறது இங்கே. மற்ற இரு கன்னியர் எங்கே? கங்கா, யமுனா, சரஸ்வதி இணைந்து ஓர் உருவில் திரிவேணியாக இருக்க, மற்ற அறுவரோடு சேர்ந்து ஏழு வடிவங்கள். நதிக் கன்னியரோடு சிவ, விஷ்ணு, பிரம்மாவும் இருக்கிறார்கள் உற்றுப் பார்த்து தரிசிக்க மறந்துவிடாதீர்கள்.
அப்படியே கொஞ்சதூரம் சென்று கிழக்கு நோக்கிய கோயிலை அடைகிறோம். கொடிமரம் இல்லாததால், பலிபீடமே முன் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து அழகான நந்தி மண்டபம், அதில் வீற்றிருக்கும் நந்தி பகவான் இறைவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கு, நாமோ வியப்பால் விரிந்த விழிகளால் நந்திதேவரின் அழகை ரசித்துக் கொண்டு நிற்கிறோம். முழுவதும் எழிலான வேலைப்பாடுகள் நிறைந்த அபூர்வ அமைப்பிலான நந்தியம் பெருமானின் வடிவம், கோயிலின் பழமையைப் பறைசாற்றுகிறது.
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பிலான கோயில். கருவறையில் நல்லிணக்கேஸ்வரர் அன்பே சிவம் என்பதன் அடையாளமாகக் காட்சியளிக்கிறார். ஒற்றுமைக்கு அருளும் இறைவனை நம் இருகை விரல்களையும் ஒற்றுமையாக இணைத்து குவித்துக் கும்பிடுகிறோம்.
அடுத்து, தெற்கு நோக்கி தரிசனம் தரும் தெய்வ நாயகியின் சன்னதிக்குச் சென்றோம். அய்யன் நல்லிணக்கம் அருள்பவராக இருக்கு, அன்னையோ காலன் பயம் போக்கி, மங்கல நாண் சூடவும், மழலைக் குரல் கேட்கவும் அருள்பவளாகத் திகழ்கிறாள்.
கமல கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், பைரவர், சூரியனை வழிபட்டபின், ஆலய வலம் வருகிறோம். கோஷ்டங்களில் ஆனைமுகம், ஆலமர் கடவுள், மகாவிஷ்ணு, துர்க்கையைக் காண்கிறோம். கன்னிமூல கணபதி, கஜ லட்சுமி, சண்டேசர், நவகிரக சன்னதிகளும் இருக்கின்றன. வள்ளலாருக்கும் தனிச்சன்னதி உண்டு.
சூரிய தீர்த்தம், பெயருக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் ஜில் என நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. கல்லால மரம், அழுஞ்சில், வில்வம், பெண் பனை என்று நான்கு தலவிருட்சங்கள் இத்தலத்திற்கு.
வெளிப் பிராகாரத்தில் வலம் வரும்போது, இறையருளோடு குருவருளும் இத்தலத்தில் சேர்ந்து பெறுவதற்கான அரிய தரிசனம் கிடைக்கிறது. ஜகத் குருவான ஆதிசங்கரரின் வழியில் வந்த காஞ்சி சங்கர மடத்தின் 54வது பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்குதான் அமைந்திருக்கிறது.
பக்கத்தில் உள்ள பெண்பனையில் பல பெண்கள் மாங்கல்யச் சரடுகளைக் கட்டியிருப்பதைப் பார்க்கிறோம். அவை எல்லாம் இத்தலம் வருவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும், நல்லிணக்கம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இறுக்கமாகக் கட்டிவைத்திருப்பவை.
1948-ல் குடமுழுக்கு கண்ட பின் சிதைந்தும் சீரழிந்தும் முட்கள் மண்டியும் பாழடைந்துபோய் நின்றது கோயில். சில ஆண்டுகளுக்கு முன், சிவசிந்தனைமிக்க சிலரால் பாலாலயம் செய்யப்பட்டுள்ள கோயில், விரைவில் புதுப் பொலிவு பெற்று குடமுழுக்கு காண இறைவன் அருளையும் இனியோரிடம் பொருளையும் எதிர்பார்த்து நிற்கிறது.
இந்துசமய அறநிலையத் துறையின் ஆட்சிக்கு உட்பட்ட இத்தலம், சென்னை தாம்பரத்தில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் வழியில் ஒரகடம் கூட்டு ரோடு நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ.ல் எழுச்சூரில் இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து காலை 6.15, 9.15 மதியம் 1.15 மற்றும் மாலை 4.15 மணிக்கு எழுச்சூருக்கு 55பி எண் பேருந்து செல்கிறது.

Comments