தம்பதியரின் மனக் கவலை போக்கும் கொடும்பு ஸ்ரீசுப்ரமணியர்!


ரள மாநிலம், பாலக்காட்டுக்கு தென்கிழக்கில் ஐந்து கி.மீ. தூரத்தில் கொடும்பு எனும் இடத்தில் உள்ளது... ஸ்ரீசுப்ரமணியர் ஆலயம். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இந்த சுப்ரமணியரைப் பாடியிருக்கிறார். வள்ளி, தேவசேனா சமேதராக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த சுப்ரமணியரின் ஆலயக் கோபுரம், கோயிலுக்கு முன் உள்ள தேர்கள், தேர் மண்டபம் அனைத்தும் தமிழ்நாட்டு ஆலய அமைப்புகளைப் போலவே இருப்பதால், நாம் கேரளாவில் இருப்பதாகத் தோன்றவில்லை.
தமிழகத்தில் இருந்து இடம் பெயர்ந்து, இங்கு வந்து வசித்த 32 செங்குந்த முதலியார் வகுப்பினர் நெசவு செய்து ஜீவனம் நடத்தி வந்தார்கள். தாங்கள் நெய்த துணிகளைத் தமிழ்நாட்டு அவினாசிப் பக்கம் போய் விற்று, அங்கிருந்து நூல் வாங்கி வருவது இவர்களது வழக்கம்! ஒருமுறை அப்படி மாட்டுவண்டி கட்டி அவர்கள் அவினாசிக்குப் பயணித்தபோது, வழியில் கோழி மாம்பட்டி எனும் ஊரின் அருகில் காட்டுப்பகுதியில், 'நானும் வர்றேன், நானும் வர்றேன்!’ என்று ஒரு அமானுஷ்யக் குரல் கேட்டதாம். வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தால் யாருமே இல்லை. அவர்களது பயணம் தொடர்ந்தது.
அவினாசியில் துணிகளை விற்று, அந்தப் பணத்தில் நூல் கொள்முதல் செய்துவிட்டு ஊர் திரும்பி வரும்போது, மறுபடியும் அதே இடத்தில் 'நானும் வர்றேன்’ என்ற குரல் கேட்க, வண்டியை நிறுத்தி, தேடியிருக்கிறார்கள். ஒரு பொந்தின் உள்ளிருந்து அந்தக் குரல் வந்ததைக் கண்டுபிடித்தவர்கள், அந்த இடத்தை நெருங்கினார்கள். அப்போது, 'என்னை இங்கே வீசிட்டுப் போயிட்டாங்க. நானும் வர்றேன்!’ என்று குரல் கேட்டதாம். வந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்தப் பொந்தினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தேடிப் பார்த்தார்கள். அப்போது, அங்கு ஒரு முருகன் சிலை கிடைத்தது.
வண்டியில் அந்த முருகன் சிலையை ஏற்றிக் கொண்டு வந்தார்கள் (கொடும்புவில் அந்த வண்டி வந்து நின்ற இடத்தை ஆதி மூலஸ்தானமாகக் கருதி, ஆண்டுக்கு ஒருமுறை அங்கு சிலை வந்து சேர்ந்த நாளில் சிறப்பு பூஜை செய்கிறார்கள்). பிறகு, அங்குள்ள பழைமையான சிவன் கோயிலில், தனிச் சந்நிதி ஏற்படுத்தி, கோழி மாம்பட்டியில் இருந்து கொண்டு வந்த ஸ்ரீசுப்ரமணியரைப் பிரதிஷ்டை செய்தார்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசுப்ரமணியர் விக்கிரகத் திருமேனியை நிறுவுவதற்கு முன்பு, குரூர் மனை அச்சுதன் நம்பூதிரி என்பவர் சிவபெருமானுக்கு கேரள முறைப்படி பூஜைகளைச் செய்து வந்தார். ஸ்ரீசுப்ரமணியருக்கும் தாமே கேரள முறைப்படி பூஜைகள் மற்றும் திருவிழாக்களைச் செய்வதாக அவர் கூறினார். அதைக் கொடும்பு முதலியார் சமூகத்தினர் ஏற்கவில்லை; தமிழ்நாட்டிலிருந்து வந்த முருகக் கடவுளுக்குத் தமிழ்நாட்டுப் பாணியில்தான் பூஜைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அச்சுதன் நம்பூதிரி ஏற்கவில்லை. அதுபற்றி, பாலக்காட்டை ஆண்ட அரசரிடம் முறையீடு செய்தார்.
ராஜா தனது அமைச்சர்களுடன் கொடும்பு வந்து சேர்ந்தார். செங்குந்த முதலியார்கள் ஒருபுறம்... குரூர் மனை அச்சுதன் நம்பூதிரி மறுபுறம்... இவர்களுக்கு இடையில், பஞ்சாயத்து நடுவராக பாலக்காடு ராஜா. இறுதியில், கோயில் வடக்கு வாசலில் இரு தரப்பினரும் கும்பங்கள் வைக்க வேண்டும். அதை யார் எடுக்கிறார்களோ அவர்கள்தான் முருகனுக்கு பூஜை நடத்த வேண்டும் என்று மன்னன் கூற அனைவரும் அதை ஏற்றனர்.
செங்குந்த வகுப்பினர் சார்பாக மதுரையில் இருந்து மாணிக்கவாசகர் வரவழைக்கப்பட்டார். அவர் தமிழ் பாடி ஒரு கலசம் வைத்தார். அச்சுதன் நம்பூதிரி மந்திரம் ஜபித்து ஒரு கலசம் வைத்தார். மாணிக்கவாசகர் வைத்த கலசத்தை நம்பூதிரியால் எடுக்க முடியவில்லை; நம்பூதிரி வைத்த கலசத்தை மாணிக்கவாசகர் எடுத்துவிட்டார். இதையடுத்து, தமிழ் முறைப்படி முருகக் கடவுளுக்கு பூஜைகள் நடக்க வேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டார்.
தான் தோற்றுப்போனதால், அச்சுதன் நம்பூதிரி, கொடும்புவில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு உள்ள நிலங்களை ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்குத் தானமாக சாசனம் எழுதித் தந்தார். அவர் அளித்த தானத்துக்கு ஈடாக, அச்சுதன் நம்பூதிரியின் குரூர் மனையைச் சுற்றி ஸ்ரீசுப்ரமணியர் திருமஞ்சனக் கலசம் வருடத்துக்கு நான்கு முறை வீதியுலாவாக வரும் என்று செங்குந்த முதலியார் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். தைப்பூசம், சூரசம்ஹாரம், முருகன் பிரதிஷ்டை தினம் மற்றும் நவராத்திரி ஆகியவையே அந்த நான்கு திருவீதியுலாத் தருணங்கள்!
பழநி முருகனின் சக்தியில் பாதியைக் கலசத்தில் ஆவாகணம் செய்து, மதுரையில் இருந்து வந்த மாணிக்கவாசகர் முருகனுக்கு அபிஷேகம் செய்து, முதன்முதலில் பூஜையைத் துவக்கி வைத்தார். அதனால், கொடும்பு முருகனைத் தரிசனம் செய்தால், பழநியாண்டவரைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்!
கோயிலுக்கு அருகே ஓடும் நதிக்கு 'சோக நாசினி’ என்று பெயர். இதில் குளிப்பவர்களின் சோகங்கள் தொலைந்து போகுமாம்! இந்த நதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா சிறப்புற நடைபெறுகிறது. கும்பகோணத்தில் நடக்கும் அதே தினத்தில் இங்கும் மகாமகத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொடும்பு ஸ்ரீமுருகன் கோயில், ஆதியில் சிவன் கோயிலாக இருந்ததற்கு சாட்சியாக, கோயில் சுற்றுப்புற மதிலின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆதி மூலவரான சிவபெருமான், பார்வதி, கோழி மாம்பட்டியிலிருந்து வந்த வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுருகன் தவிர, நந்தி, ஸ்ரீகோசல கிருஷ்ணன், ஸ்ரீபரசுராமர், ஸ்ரீசிம்மோதரன், ஸ்ரீஐயப்பன், நாக தேவதை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, வீரபாகு, காலபைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களின் விக்கிரகங்களை இங்கு தரிசிக்கலாம்!
முருகன் ஆலயம் என்பதால் அவரது வாகனமான மயில் ஒன்றை ஆலயத்தில் வளர்க்கலாம் என்று ஆலய நிர்வாகிகள் எண்ணினர். அருகில் உள்ள ஊரான சித்தூரில் பிரபலமான ஒரு நாயர் வீட்டில் இரண்டு மயில்களை வளர்த்து வருவதாக அறிந்து, அவரிடம் சென்று, கொடும்பு முருகனுக்கு ஒரு மயிலைக் கொடுக்க முடியுமா என்று கேட்டனர்.  அதற்கு அவர்கள் தர முடியாது என்று மறுத்ததுடன், அந்தக் குடும்பத்தின் காரணவர் (தலைவர்) ஏளனமாகப் பேசித் திருப்பியனுப்பி விட்டாராம்.
மறுநாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மயில் தர மறுத்தவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் திடீரென்று குளிர் ஜுரம் வந்து உடல் நடுங்கினர். ஸ்ரீமுருகன் ஆலயத்துக்கு மயில் தர மறுத்ததுடன் ஏளனமாகவும் பேசியதுதான் தங்கள் திடீர் நோய்க்குக் காரணம் என்று நினைத்தவர்கள்,  உடனே தங்களிடம் இருக்கும் மயில்களில் ஒன்றை 'கொடும்பு’ ஆலயத்துக்கு வழங்கினார்கள். பிறகு, அவர்களது நோய் பாதிப்பு நீங்கிவிட்டது.
இதன் நினைவாக அந்தக் குடும்பத்தார் முருகன் ஆலயத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவின்போது தங்கள் செலவில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆலய டிரஸ்டிகளில் ஒருவரான சண்முகம்,  ''இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம். இங்கு 12 வருடத்துக்கு ஒருமுறை மகாமகம், தினம் 3 கால பூஜைகள், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கந்தசஷ்டி, திருவோணம், நவராத்திரி, தீபாவளி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத் திருவிழா 7வது நாளில் ரத உத்ஸவம். அந்த நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். சிறப்பு பூஜைகளில் முருகப்பெருமானுக்கு
பஞ்சாமிர்தம், பாயசம் தயாரித்து விசேஷமாகப் படைத்து மகிழ்கின்றனர்'' என்றார்.
ஆலய அர்ச்சகர்களில் ஒருவரான ராமசாமி (கீழ்சாந்தி), ''காலை 5.30 மணிக்கு திறந்து, மதியம் 12 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் திறந்து இரவு 8 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. இங்கு முருகர் சிலை முதன் முதலில் மாட்டு வண்டியில் வந்து நின்ற இடம், தேவன் தறவாட்டு (குடும்பம்) அருகில். எனவே, அந்தக் குடும்பத்தினர் இந்த ஆதி மூலஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை சிலை வந்து நின்ற நாளில் பூஜை நடத்தி சிறப்பிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் நிறையத் திருமணங்கள் நடக்கின்றன. வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீமுருகன் ஒரே கல்லில் இங்கு காட்சியளிக்கிறார். திருமணம் செய்து கொள்வோர் மட்டு மல்லாது, திருமணம் ஆன தம்பதியருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டாலும், இங்கு வந்து முருகனைப் பிரார்த்தித்தால், மனக்கசப்பு விலகி மகிழ்வான குடும்ப வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
ஏராளமான தம்பதிகள் இங்கு வந்து, மனைவியருடன் மகிழ்ச்சியாகக் காட்சி தரும் முருகக் கடவுளைத் தரிசித்து, பூஜித்து அவன் அருளை வாரிக்கொண்டு திரும்புகிறார்கள்!'' என்றார் ஆலய கீழ்சாந்தியான ராமசாமி.
நீங்களும் பாலக்காடு அருகில் உள்ள 'கொடும்பு ஸ்ரீசுப்ரமணியர் ஆலயம்’ சென்று முருகனைத் தரிசித்து மன மகிழ்ச்சி பெற முடிவு செய்து விட்டீர்களா?
கே

Comments