எத்தனை எத்தனையோ வடிவங்களில் ஆயிரம் ஆயிரம் திருநாமங்களுடன் அருள்பாலிப்பவள் அம்பிகை. அவள் மந்திர எழுத்துகளும், ஓவிய வடிவச் சின்னங்களும் பொறிக்கப்பட்ட பன்னிரண்டு கட்டங்களைக் கொண்ட கற்பலகை வடிவாகவே ஓர் ஆலயத்தில் மூலவராக வழிபடப்படுகிறாள் என்பது உங்களுக்கு தெரியுமா?
செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி என்னும் கிராமத்தில்தான் லலிதா செல்வாம்பிகை என்ற திருநாமத்துடன் அந்த அம்மன் அருளாட்சி செய்து வருகிறார்.
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் சக்திகளும் இணைந்த அந்த யந்திரக்கல், ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சங்க கால சிற்பியான மகன் காலத்திற்கு முன்னர் மூல அட்சரங்களையே அதாவது எழுத்துக்களையே தெய்வ சக்தியாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
கற்பலகையில் சுவாமியை அவாஹனம் செய்து பூஜை செய்யும் முறையை கொண்ட வந்தவர் ரிஷ்ய சிருங்கரே என்றும்; அவரால் முதன்முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் இந்த அம்மனே எனவும் கூறுகிறார்கள்.
கருவறையில் 6 அடி உயரம், 2 அடி அகலம், 4 அங்குலம் கனம் கொண்ட கற்பலகையில் 12 சதுரக் கட்டங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு சதுரக் கட்டத்திலும் ஒவ்வொரு மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. ரிஷ்ய சிருங்கர், உலக ரகசியங்கள் அனைத்தையும் அந்தக் கட்டங்களில் எழுதியுள்ளாராம். ஆனால் அவை எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை யாராலும் அறியமுடியவில்லை.
கட்டங்களுக்கு நடுவே மேலிருந்து கீழாக திரிசூலமும்; அதற்க வலப்பக்கம் சூரியனும்; இடப்பக்கம் சந்திரனும் வரையப்பட்டுள்ளன.
திரிசூலம் பரப்பிரம்ம சக்தியாக விளங்குகிறது. முதல் நான்கு கட்டங்கள் சிவ சக்தியான பார்வதியையும்; அடுத்த நான்கு கட்டங்கள் விஷ்ணு சக்தியான லட்சுமியையும்; கடைசி நான்கு கட்டங்கள் பிரம்ம சக்தியான சரஸ்வதியையும் குறிக்கின்றன.
ஆதிசங்கர மகான், மதுரையிலிருந்து காஞ்சிபுரம் சென்றபோது வழியில் உள்ள இத்தலத்தில் ஓர் இரவு தங்கி, அம்மனை வழிபட்டுச் சென்றிருக்கிறார் என்பது செவிவழிச் செய்தி.
ஆதிகாலத்திலிருந்து முத்து மாரியம்மன் என்ற பெயரில் கிராம தேவதையாகவே இந்த அம்மன் வழிபடப்பட்டு வந்திருக்கிறாள். இந்த அம்மன் லலிதா செல்வாம்பிகையாக திருநாமம் கொண்டதன் பின்னணியில் சிலிர்க்க வைக்கும் தெய்வீக சம்பவம் ஒன்று இருக்கிறது.
சிலவருடங்களுக்கு முன்புவரை கவனிப்பாரின்றி சிதைந்து கிடந்த இந்த ஆலயத்தை சீர்செய்து கும்பாபிஷேகம் நடத்திட எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஊர் மக்களும், ஆன்மிக அன்பர்களும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஏராளமான சோதனைகள் ஏற்பட்டன.
அதனால், கேரளா சென்று பிரசன்ன ஜோதிடர் ஒருவரை அணுகி, தேவ பிரசன்னம் பார்க்க ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று அவர், ஆலயத்திற்கு வந்து உரிய பூஜைகள் செய்து, முறைப்படி பிரசன்னம் பார்த்ததில், பல அபூர்வ தகவல்கள் கிடைத்தன.
பிரசன்னத்தில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றியுள்ள எல்லைத் தெய்வங்களின் அமைப்பைக் கூறியவர், மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் யந்திரக்கல்லில் உள்ள எழுத்துக்கள் பீஜாட்சர மந்திரம் என்றும்; பராசக்தி அருள் கொண்ட ரிஷ்ய சிருங்கரால் எழுதப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டது எனவும் கூறினார். அப்போதுதான், இவ்வளவு காலமாக யந்திரக் கல் வடிவில் கிராம தேவதையாக அருள்பாலித்தவள் லலிதா செல்வாம்பிகை அம்மன் என்பதும்; அவளது மகிமையும் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.
பிரசன்னத்தில் அம்மன் அருளிய வாக்குப்படி, லலிதா செல்வாம்பிகையோடு இந்தக் கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள விநாயகர், வேடியப்பன், வனதுர்க்கை, பிடாரியம்மன், சப்த கன்னியர், ஐயனார், சூலினி தேவி, அம்மச்சார் அம்மன் உள்ளிட்டோருக்கும் புதிய ஆலயம் எழுப்பப்பட்டு, ஒரே ஆண்டில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர்.
கிராமத்தைச் சுற்றியுள்ள எட்டு ஆலயங்களும் ஓம் என்ற வடிவத்தில் அமைந்திருக்க, நடுவே லலிதா செல்வாம்பிகை அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் கொண்டிருப்பது தனிச் சிறப்பு.
அதுவரை அருவமாகக் காட்சி தந்த அம்மனுக்கு கும்பாபிஷேகத்தின் போது பஞ்சலோகத்தில் ஓர் உருவச் சிலை அமைத்து யந்திரக் கலலிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இன்று, அருவமும், உருவமும் கொண்டு அம்மன் அருளாசிபுரிகிறாள்.
இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலத்தில் அழகே உருவாக பஞ்சலோக அம்மன் காட்சிதருகிறாள். கிரீடத்தில் சந்திரனையும், சிரசின் பின்புறம் சூரியனையும் தரித்துள்ள அவள், தனது எட்டுத் திருக்கரங்களில், முதல் இரு கரங்களில் பாசம், அங்குசத்துடன் பார்வதி தேவியாகவும், இரண்டாவது இரு கரங்களில், சங்கு, சக்கரத்துடன் லட்சுமியாகவும்; மூன்றாவது இரு கரங்களில் கமண்டலம், அட்சமாலையுடன் சரஸ்வதியாகவும்; நான்காவது இரு திருக்கரங்களில் வரத, அபய முத்திரை காட்டி திரிசூலத்துடனும் முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த வடிவாக அமைந்து பிரமிக்க வைக்கிறாள். அவளுக்கு பின்னால் ஐந்து தலை நாகம் குண்டலினி சக்தியாக விளங்குகிறது.
கருவறை முன் அமர்ந்து உண்மையான பக்தியோடு இவளை தியானித்தால் ஓம் என்ற பிரணவ மந்திரம் நம் காதுகளில் ஒலிக்குமாம்; அம்மனின் வளையல் சத்தம், கொலுசு சத்தம் கேட்குமாம். இதை பலபேர் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறார்களாம்.
எல்லா உயிர்களுக்கும் தாயாகத் திகழ்பவள் பரப்பிரம்ம சக்தி. இத்தலத்தில் பரப்பிரம்ம சக்தியாகவே எழுந்தருளியிருக்கும் லலிதா செலவாம்பிகையை உள்ளன்போது ஒரு நொடி கைகூப்பி வழிபாடு செய்தாலே போதும், இந்த உலகில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் கிட்டிடும் என்கிறார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்களும், 18 சித்தர்களும் இந்த அம்மனை வழிபட்டிருக்கிறார்களாம். அதன் காரணமாக ஒவ்வொரு பௌர்ணமியின் போது 18 விளக்குகளில் அவர்களை ஆவாஹனம் செய்து, அம்மனுக்கு முன் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
மகாமண்டபத்தில் பலிபீடம், சிம்ம வாகனம் அமைந்திருக்கிறது. ரிஷ்ய சிருங்கர், மாரியம்மன் வீற்றிருக்கிறார்கள்.
தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில் பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, ஆலய கும்பாபிஷேக தினம் உள்பட பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
லலிதா செல்வாம்பிகை உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே, உத்திராட நடசத்திர நாளில் அவளை வழிபடுவது புத்திரபாக்யம் தரும் என்றும்; திருமணம் கைகூட பௌர்ணமியில் வழிபடவேண்டும் எனவும் சொல்கிறார்கள். அமாவாசை நாட்களில் பிணிநீங்க வணங்குவோர் பலர். அந்த நாட்களில் இங்கே நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, பன்னிரு நெய் தீபங்கள் ஏற்றி அன்னையைப் பணிந்து, பன்னிரு முறை வலம் வருவதால் பேறுகள் யாவும் கிட்டும்; கல்வி, தொழில், வழக்குள் என எல்லாவித தடைகளும் நீங்கும் என்பதற்கு, இங்கு வரும் பக்தர் கூட்டமே சாட்சி!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில், சேத்பட் செல்லும் சாலையில் செல்லப்பிராட்டி கிராமம் அமைந்துள்ளது.
உண்மையில் அந்த காலத்தில் கிராமத்தின் எல்லையை குறிக்கும் கல் இது, இக்கிராமத்தில் ஏற்கனவே இருக்கும் கிராம தேவதைகளின் எல்லை கட்டுக்கு உட்பட்ட கிராம் எல்லை கல் இது. இது போன்ற எல்லை கற்கள் நிறைய வடதமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருகின்றன, இவகையான கற்களின் உண்மையான அர்த்தம் தெரியாமலும், மேல குறிபிட்டு இருபது போல கேரள தேவ ப்ரசென்னம் பார்த்தல் எப்படி ஒரு கிராம தெய்வங்களின் உண்மையான அர்த்தங்களை சொல்ல முடியும். எப்படியோ ஒரு கிராம தேவதை இன் கல் இன்று வேதா சாஸ்திர தெய்வமாக மாறிவிட்டது. (ஏரி, குளம், நீர் நிலைகள், கோவில் நிலங்கள், கிராம பொது நிலங்களில் இது போன்ற எல்லை கற்கள் அமைந்து இருக்கும்)
ReplyDelete