குரு பார்வை பெறலாம்..!

மனிடம் இருந்து தப்புவதற்காக, திருக்கடையூர் திருத்தலத் தில், சிவலிங்கத் திருமேனியைக் கெட்டியாகத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயனைத் தெரியும்தானே! அப்போது, எமதருமன் பாசக்கயிற்றை வீச... அது லிங்கத் திருமேனியிலும் விழவே சிவனார் ஆவேசமானதையும் அறிவோம், இல்லையா? அதுமட்டுமா? எமதருமனின் பதவியைப் பறித்துச் சாபமிட்டார் சிவபெருமான்.
கௌசிகபுரி எனும் தலத்துக்கு வந்த எமதருமன், அங்கேயுள்ள நதியில் நீராடி, சிவபூஜை செய்து தவமிருக்க எண்ணினான். ஆனால், சிவபூஜை செய்வதற்கு விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதுமின்றி, என்ன செய்வது எனக் கலங்கினான். பிறகு, நதியின் மணலையே எடுத்து சிவலிங்கமாக்கி, தவம் செய்து வழிபட்டான்; வரம் பெற்று, இழந்த பதவியைப் பெற்றான்!
பிறகு, விஸ்வாமித்திரர் எமதருமன் செய்த லிங்கத் திருமேனியை வழிபட்டார். அடுத்து, அந்த இடத்திலேயே அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அழகிய கோயிலும் அமைக்கப் பட்டது என்கிறது ஸ்தல புராணம்.
கொங்குதேசமாம் கோவைக்கு அருகில், கோவில்பாளையம் எனும் தலத்தில் அமைந் துள்ளது அந்தக் கோயில். கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கோவில் பாளையம். இங்கே ஸ்வாமியின் திருநாமம் -ஸ்ரீகாலகாலேஸ்வரர். அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீகருணாகரவல்லி அம்பாள்.
சிவனாருக்கும் அம்பாளுக்கும் நடுவே முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருப்பதால், இதனை சோமாஸ்கந்த அமைப்பு கொண்ட ஆலயம் என்றும் திருமண வரம் அருளும் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்! ஆயுள் பலமும் பதவி உயர்வும் தந்தருளும் சிவனார் திருக்காட்சி தரும் இந்தக் கோயிலில், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார்.
ஆசியாவில் மிகப்பிரமாண்டமான தட்சிணா மூர்த்தி திருமேனி இதுவே என்றும் கொங்கு தேசத்தின் குரு பரிகாரத் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.
வழக்கமாக, சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கே மூலவருக்குத் தெற்கே தனிச்சந்நிதியில் திருக் காட்சி தந்தருள்கிறார். வியாழக்கிழமைகளில், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள், வந்து தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும்; குரு பார்வை கிடைக்கப்பெறுவோம்; குரு யோகம் கைகூடும் என்பது ஐதீகம்!
கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி, மணல் மற்றும் நுரையால் ஆனது என்பதால், அபிஷேகங்கள் செய்வது இல்லை. பச்சை நிற நந்திக்கு, பிரதோஷ காலத்தில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படுகின்றன. ஸ்ரீகருணாகரவல்லி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் தீராத நோயும் தீரும்; திருமணத் தடை அகலும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்!
எமதருமன் உண்டாக்கிய தண்டி தீர்த்தம் எனப்படும் காலப் பொய்கை ரொம்பவே விசேஷம். இந்தத் தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் செய்வது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் சந்ததியைக் குறைவின்றி வாழச் செய்யும் என்கின்றனர் பக்தர்கள்!

Comments