காஞ்சி மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் எனும் பகுதியில், திருக்காயாரோகணேஸ்வரம் எனும் தலம் உள்ளது. இந்தத் தலத்தின் ஸ்வாமி - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர். புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தில், குரு பகவான் சிறப்புடன் போற்றப்படுகிறார்.
காயாரோகணேஸ்வரம் என அழைக்கப்படும் தலங்கள் சிறப்பு வாய்ந்தவை என்கின்றன ஞான நூல்கள். தமிழகத்தில், காஞ்சியில் காஞ்சிக் காரோகணம்; கும்பகோணத்தில் குடந்தை காரோகணம்; நாகப்பட்டினத்தில் நாகைக் காரோகணம் என மூன்று தலங்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தலங்களில், காஞ்சியம்பதியில் உள்ள இந்தக் கோயிலில் மட்டுமே குரு பகவான் தனிச்சந்நிதியில் இருந்தபடி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார்!
தவிர, திருமகள் மற்றும் எமதருமன் ஆகியோர் தவமிருந்து வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கே ஆலயத்தில் திருமகளுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. எமதருமன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியும் தனிச்சந்நிதியில் அமைந்துள்ளது.
வியாழக்கிழமை மற்றும் குருப்பெயர்ச்சி ஆகிய நாட்களில், இங்கே நடைபெறும் சிறப்பு அபிஷேக - ஆராதனையில், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
வியாழ பகவான், இந்தத் தலத்து ஈசனை நினைத்து தவமிருந்தார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன்னே தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். ''ஸ்வாமி, இந்தத் தலத்துக்கு வந்து உங்களை வணங்குவோர் அனைவருக்கும் நலமருளக்கூடிய காரியத்தை எனக்குத் தாருங்கள்'' என வேண்டினார். அதன்படியே வரம் தந்து அருளினார் சிவனார். ஆகவே இந்தத் தலத்துக்கு வரும் சிவனடியார்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள்கிறார் வியாழ பகவான்.
ராஜகேசரிவர்மன் மற்றும் விக்கிரம சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தகவல்களைத் தாங்கி நிற்கின்றன, கல்வெட்டுகள்! தற்போது கோயிலைப் புதுப்பித்துச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குருப்பெயர்ச்சி நாளில் இங்கு ஸ்ரீகாயாரோகணேஸ்வரர், திருமகள் மற்றும் வியாழ பகவான் ஆகியோரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். இனி உங்களுக்கு குரு யோகம் நிச்சயம்!
Comments
Post a Comment