அனைவருக்கும் ஆச்சரியம். குழப்பம். இதனால் ஒருவித அயர்ச்சியுடனும் சோர்வுடனும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 'இந்த வேலையை பத்து இடத்துல செஞ்சிருந்தா, பத்து இடத்துலயும் இந்நேரம் தண்ணி வந்திருக்கும்ப்பா!’ என்று பரஸ்பரம் அங்கலாய்த்தபடி, வேலை செய்தனர்.
அப்போது, ஓரிடத்தில் மண்வெட்டி பூமியில் படும்போது, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே, எல்லோரும் வியப்புற்றார்கள். சுற்றிலும் வேலை செய்தவர்கள் அனைவரும் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடி வந்தார்கள். பத்துப் பதினைந்து பேராகச் சேர்ந்து, சத்தம் வந்த இடத்தை இன்னும் விரைவாகத் தோண்டினார்கள்.
முழுவதும் மண்ணால் மூடப் பட்டிருந்த அதன்மீது தண்ணீர் விட்டுத் தேய்த்துக் கழுவிப் பார்க்க... பளிச்சென்று தென்பட்டது ஓர் அழகான விக்கிரகம். ஸ்ரீதேவி- பூதேவி தாயார் சகிதம், அழகுத் திருக் கோலத்தில் காட்சி தந்தருளினார் ஸ்ரீநிவாசப் பெருமாள்.
திருப்பதியில் இருப்பது போலவே இந்த ஸ்ரீநிவாச பெருமாளின் திருக்கோலமும் அமைந்திருப்பது சிறப்பு. சிறிய மூர்த்தம்தான் என்றாலும், கொள்ளை அழகு!
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீநிவாச பெருமாள். பின்னாளில் இங்கு வந்த கிருஷ்ணதேவராயர் இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகச் சொல்வர்.
திருவாரூர் - கும்பகோணம் சாலையில் உள்ளது குடவாசல். கும்பகோணத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்தத் தலத்துக்குப் பேருந்து வசதிகள் நிறையவே உண்டு.
தரிசனம் செய்து ஸ்ரீநிவாச பெருமாளை ஸேவித்தால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்!
'பெருமாளே... கண் திறந்து கருணை காட்டேம்ப்பா’ என்று உருகி உருகி வழிபடு வார்கள் அல்லவா, பக்தர்கள்... இங்கே வியாழக்கிழமைகளில் நேத்ர தரிசனம் சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து நேத்ர தரிசனம் செய்து வணங்கினால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வடகலை சம்பிரதாயத்துக்கு உட்பட்ட இந்தத் தலத்தில், தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை. சதாசர்வ காலமும் பெருமாளுடனேயே இருப்பதால், திருமண வரம் அருளும் திருத்தலம் இது. மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் இங்கு வந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, அவரின் திருவடியில் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்தால், திருமணப் பாக்கியம் கைகூடும்.
அதேபோல், பெருமாளுக்கு குங்குமப் பூ மற்றும் ஏலக்காய் அர்ச்சனை செய்து, அதையே பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு தினமும் சாப்பிட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்று போற்றுகின்றனர் பெண்கள்.
இங்கேயுள்ள ஸ்ரீயோக நரசிம்மர் ரொம்பவே விசேஷம்! புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஸ்ரீயோக நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கைகூடும் என்கின்றனர் அன்பர்கள்!
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... மூலவர் ஸ்ரீநிவாச பெருமாள் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். வடக்குத் திசைக்கு அதிபதி குபேரன். இங்கே, பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவதாகவும், அந்தக் குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக ஸ்ரீநிவாச பெருமாள் வடக்குப் பார்த்தபடி எழுந்தருள்வதாகவும் சொல்வர். எனவே, ஸ்ரீநிவாச பெருமாளை ஒன்பது திருமஞ்சனம் செய்து வணங்கித் தொழுதால்... சகல ஐஸ்வரியங்களும் குபேர சம்பத்துகளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
குடவாசல் தலத்துக்கு வந்து, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஒன்பது முறை திருமஞ்சனம் செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு!
Comments
Post a Comment