இதைப் பார்த்தும் கேட்டும் நாம் சிரித்திருப்போம். 'பொட்டியே போயிடுச்சு; சாவியைப் பத்திரமா வெச்சிருக்கானாம் இவன்..! சரியான அறிவுக் கொழுந்துய்யா!’ என்று வசனமும் பேசியிருப்போம்.
ஆனால்... பெட்டியும் இருந்து, சாவியும் நம்மிடம் இருந்து, ஆனால் அதை மறந்தும் திறந்து பார்க்காத நம்மை நினைத்து வருங்காலத் தலைமுறையினர் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டார்களா? மேக்புக் (Mac Book) ஃபேஸ்புக், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்... எனப் பலப் பல வழிகளிலும் விஞ்ஞான வசதியோடு அல்லவா சிரிப்பார்கள்!
'பெட்டியையும் சாவியையும் வெச்சுக்கிட்டே, அதைத் திறந்து பார்க்காத சோம்பேறிங்கய்யா நம்ம ஃபோர்ஃபாதர்ஸ் (முன்னோர்). நமக்கு எதுக்கு இதெல்லாம்னு விட்டுட்டாங்கபோல! புத்திசாலிங்க!’ என்று கேலியும் செய்வார்களே!
அப்படியரு பழிச்சொல்லை ஓரளவுக்காவது நீக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள பகுதியே இந்த 'ஞானப் பொக்கிஷம்’!
ஆமாம்... நம் முன்னோர் நமக்காக விட்டுச்சென்ற ஞானப் பொக்கிஷத்தை - அறிவுக் களஞ்சியமுமாகத் திகழும் ஞான நூல்களை - ஒவ்வொன்றாகத் திறந்து கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்கலாம், ரசிக்கலாம்... வாருங்கள்!
முதல் பொக்கிஷம்
அறப்பளீசுர சதகம்!
உறவு முறைகளைப் பற்றிய ஓர் அற்புதமான பாடல்!இதில் உள்ள உறவு முறைகள், நமக்கெல்லாம் ஏற்கெனவே தெரிந்தவையே! ஆனாலும், அவற்றை இந்தப் பாடல் விவரிக்கும் விதம், நம்மை நெகிழ வைக்கிறது.
அண்ணன், தாய் - தந்தை, இஷ்ட தெய்வம், குரு, உறவு, பிள்ளை - முதலான உறவுகளை (அதன் வழிமுறைகளை) மறுத்து, வேறோர் அற்புதமான விளக்கத்தைத் தருகிறது இந்தப் பாடல்.
அண்ணன்- ஒரே தாயின் வயிற்றிலிருந்து (நமக்கு) முன்னதாகப் பிறந்திருந்தாலும், அண்ணன் ஆகிவிட மாட்டான். பிறகு..? நாம் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அதை முடிக்கவே முடியாமல் தத்தளிக்கும்போது, தானாக வந்து அந்தக் காரியத்தை முடித்து உதவுபவன்தான் அண்ணன்; அவன் யாராக இருந்தாலும் சரி! கூடப் பிறக்காதவராக இருந்தாலும் அவரே அண்ணன்!
பெற்றோர்- நம்மைப் பெற்றவர்கள் மட்டுமே பெற்றோர் அல்ல. தலை போகக்கூடிய அளவுக்கு, அதாவது உயிர் போகும் அளவுக்கு ஆபத்து வரும்போது, அந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர் யாரோ, அவர்களே தாய்- தந்தையர்!
இப்படிச் சொல்லும் பாடல், அடுத்து இஷ்ட தெய்வத்தைப் பற்றியும் சொல்கிறது. ஆனால், நமது இஷ்ட தெய்வங்களில் ஏதாவது ஒன்றின் பெயராவது இதில் இடம்பெற்றிருக்கிறதா என்றால்... ஊஹும்! எந்தச் சாமியின் பெயரும் இடம் பெறவில்லை.
பிறகு, இஷ்ட தெய்வம் யார்?
பகைவர்கள் செய்யும் கொடுமை களால் நாம் நொந்து - நைந்து - மெலிந்து போகும்போது, நமக்கு உதவி செய்பவர் எவரோ, அவரே இஷ்ட தெய்வமாம்!
தெய்வத்தைச் சொன்ன பாடல், அந்தத் தெய்வத்தை நமக்கு உணர்த் தும் குருவை, அடுத்ததாக அறிமுகம் செய்கிறது. அதிலும் ஒரு புதுமை; தெளிவு!
வெறும் மந்திர உபதேசம் செய்பவர் மட்டும் குரு அல்ல; நல்ல யோசனை களைச் சொல்லிக் கொடுத்து, 'அப்பனே... உன் வாழ்வில் இது இது, இப்படி இப்படி நடக்கப் போகிறது. அதனால்தான் உனக்கு யோசனைகள் சொன்னேன்’ என்று எதிர்காலத்துக்கும் சேர்த்து நல்வழி காட்டுபவரே குரு.
அடுத்தது... உறவுகள்! எல்லா உறவுகளும் உறவுகள் அல்ல. நன்மை வந்தால் கூடுவதும் தீமை வந்தால் விலகுவதும் உறவு அல்ல. நமக்கு நன்மை- தீமைகள் விளையும்போது, அவற்றைத் தன்னுடையதாக நினைத்துப் பங்கேற்பவர்கள் யாரோ, அவரே உறவினர்.
அதே போன்று, பெற்றதெல்லாம் பிள்ளை ஆகாது. நம் உள்ளம் அறிந்து, சொற்படி கேட்டு நடப்பவன் யாராக இருந்தாலும் சரி, அவனே பிள்ளை என்கிறது இந்தப் பாடல்.
அண்ணனில் ஆரம்பித்து தாய் - தந்தை, இஷ்ட தெய்வம், குரு, உறவு என்றெல்லாம் சொல்லிப் பிள்ளையிடம் வந்து பாடல் நிறைவு பெறுகிறது. வாய் வார்த்தைகளாக இல்லாமல் செயலாற்றுபவர் யாரோ, அவர்களை உறவு என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறது. நமக்கெல்லாம் தெரிந்த உறவுகளைச் சொல்லி, இந்த உறவுகள் வீட்டுக்குள் மட்டுமல்ல, வெளி உலகத்திலும் இருக்கின்றன; அவற்றை உணர்ந்து கொள்!'' என்று சொல்லும் அற்புதமான இந்தப் பாடல் 'அறப்பளீசுர சதகம்’ எனும் பழந்தமிழ் நூலில் உள்ளது.
அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் 230 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டது. மனித உறவுகள் நலிந்து போய், முதியோர் இல்லங்கள் பெருகி இருப்பதுடன், மனித உணர்வுகளே அடிபட்டுப் போகும் இக்காலத்தில் மிகவும் அவசியமான தேவை இந்தப் பாடல்.
இதனால் இன்ன முறையனாம் எனல்:
தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம் வந்து
தான்முடிப் போன்தமையனாம்
தன்றலைக் கிடர்வந்த போதுமீட் டுதவுவோன்
தாய் தந்தை யென்ன லாகும்
ஒன்னார் செயுங்கொடுமை யால்மெலிவு வந்தபோ
துதவுவோன் இட்டதெய்வம்
யுத்திபுத் திகள்சொல்லி மேல்வருங் காரியம்
உரைப்பவன் குருவென்ன லாம்
எந்நாளும் வருநன்மை தீமைதன தென்னவே
யெண்னிவரு வோன் பந்துவாம்
இருதய மறிந்துதன் சொற்படி நடக்குமவன்
எவனெனினு மவனேசுதன்
அந்நார மும்பணியு மெந்நாளு மேபுனையும்
அண்ணலே அருமை மதவேள்
தான்முடிப் போன்தமையனாம்
தன்றலைக் கிடர்வந்த போதுமீட் டுதவுவோன்
தாய் தந்தை யென்ன லாகும்
ஒன்னார் செயுங்கொடுமை யால்மெலிவு வந்தபோ
துதவுவோன் இட்டதெய்வம்
யுத்திபுத் திகள்சொல்லி மேல்வருங் காரியம்
உரைப்பவன் குருவென்ன லாம்
எந்நாளும் வருநன்மை தீமைதன தென்னவே
யெண்னிவரு வோன் பந்துவாம்
இருதய மறிந்துதன் சொற்படி நடக்குமவன்
எவனெனினு மவனேசுதன்
அந்நார மும்பணியு மெந்நாளு மேபுனையும்
அண்ணலே அருமை மதவேள்
Comments
Post a Comment