தியானம் வசப்படும் வழி!


''எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால், மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது!'' - இப்படிப் புலம்புபவர்கள் இன்று நிறையப் பேர்.
ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். 'சுவாமி... எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும், என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும்' என்றான்.
அவனுக்கு விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பார்க்கும்முன் ஒரு சின்னக் கதை...

காட்டுப் பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையில், மூன்று ஞானிகள் நெடுநாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந்தனர்.
ஒருநாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்தார். 'சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன்' என்றார் அவர். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை.
மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இரண்டாவது ஞானி, 'அது கறுப்பு நிறக் குதிரையாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அது வெள்ளைக் குதிரைதான்' என்றார். இவரின் எதிர் வாதத்துக்கும் யாரும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன.
'கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீர்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால், நான் வேறு எங்காவது போய் என் தியானத்தைத் தொடர்கிறேன்!'' என்று கோபப்பட்டார்  மூன்றாவது ஞானி.
இதில் புதைந்திருக்கும் உண்மை புரிகிறதா? கண்கள் மூடி தியானிப்பதற்குப் பதிலாக மனத்தை மூடி, அதாவது பரிபூரண மன அமைதியோடு செய்வதுதான் உண்மை யான தியானம். சரி, மன அமைதி பெற வழி என்ன?
'சுயநலமற்ற பொதுச்சேவையில் ஈடுபடுவதுதான்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
'உன் வீட்டைச் சுற்றி வசிப்பவர்களைப் பார். அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்று கவனி. அவர்களில் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால், அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய். கவனிப்பார் இன்றிக் கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்! பிறருக்குச் செய்யும் சேவையில்தான் உண்மையான மனத் திருப்தி இருக்கிறது.
மனத்தில் திருப்தி இருந்தால், அங்கே அமைதியும் குடிகொள்ளும். இதை நீ உணராவிட்டால், நிச்சயம் உன்னால் தியானம் பழக முடியாது. உன் மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டேதான் இருக்கும்' என்று அந்த இளைஞனுக்கு போதித்தார் விவேகானந்தர். அது நமக்கும்தானே?!

Comments