ஸ்ரீ கிருஷ்ணனுடன் போரிட்ட அர்ஜுனன்

ஸ்ரீகிருஷ்ணனும் அர்ஜுனனும் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்து, குருக்ஷேத்திரத்தில் நடத்திய யுத்தம், மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்த சம்பவம். ஆனால், அர்ஜுனனை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய யுத்தம், தெரிந்த புராணத்தில், பலருக்குத் தெரியாத சம்பவம்!
காரணமில்லாமல் கண்ணன் எந்தச் சம்பவத்தையும் நிகழ்த்தத் திருவுள்ளம் கொள்வது இல்லை. இந்தச் சம்பவத்துக்கும் அப்படியரு வலுவான காரணம் உண்டு.
மகாபாரதத்தின் முற்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் அது. கௌரவர்களும் பாண்டவர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டனர். செழிப்பான பூமியையும், மக்கள் வாழும் பகுதியையும் துரியோதனனுக் குக் கொடுத்துவிட்டு, காட்டுப் பகுதியான காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குப் பிரித்துத் தந்தான் திருதராஷ்டிரன்.
ஸ்ரீகிருஷ்ணனின் அனுக்கிரகத்தால், காண்டவ வனத்தை அழகிய இந்திரபிரஸ்தமாக மாற்றினார்கள் பாண்டவர்கள். மேலும், யாகங்களில் தலைசிறந்த ராஜசூய யாகத்தைச் செய்து முடித்து, பாண்டவர்களில் மூத்தவனான தர்மன் நீதி தவறாமல் ஆண்ட காலம் அது.
தம்பி பீமனின் தோள் வலிமையும், அர்ஜுனனின் வில் திறனும் அவனுக்கு அரணாக விளங்கியது. அர்ஜுனனையும், அவனது உற்ற நண்பனான ஸ்ரீகிருஷ்ணனையும், 'நர நாராயணர்’ என்றே அனைவரும் அழைத்தனர். அர்ஜுனனின் நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்த் திகழ்ந்தார் ஸ்ரீகிருஷ்ணன்.


அதே ஸ்ரீகிருஷ்ணன்தான் ஒருமுறை அர்ஜுனனையே எதிர்த்துப் போர் புரியும்படி நேர்ந்தது!

ஒருநாள் அதிகாலை நேரம்.
காலவ முனிவர் என்ற தவ சிரேஷ்டர், ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும், நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க, கையில் நீரை எடுத்தபோது, ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம், முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார்.
அப்போது, கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம்தான், முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என, ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர்.
ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ, தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும், அவன் அதைப் பொருட்படுத்தாமல், தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், வேகமாகச் சென்றுவிட்டான்.
கோபமடைந்த காலவ முனிவர் நேராக ஸ்ரீகிருஷ்ணனிடம் சென்று, தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும், அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார். முனிவரால் அவனைச் சபித்திருக்க முடியும். இருப்பினும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் முறையிடுவதுதான் சரி எனக் கருதி முறையிட்டார்.
தவறு நேர்வது இயற்கை. ஆனால், தவறு என்று தெரிந்தபின்னும் திருந்தாமல் இருப்பவரைத் தெய்வம் தண்டிக்காமல் விடுவதில்லை. கருணை வடிவானவன்தான் கண்ணன். என்றாலும், தவறுகளைத் திருத்தவேண்டியது தர்ம ஸ்தாபனம் செய்பவனின் கடமையாகி விடுகிறது அல்லவா?
'சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து, அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன்’ என்று சூளுரைத்தார் ஸ்ரீகிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு, போருக்கும் ஆயத்தமானார்.
தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன், கண்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். சிசுபாலனையே அழித்த ஸ்ரீகிருஷ்ணனின் முன் தான் எம்மாத்திரம்? என்ற பயம் ஒருபுறமும், கண்ணனுடன் போரிட்டு எப்படியாவது ஜெயித்துவிட்டால், அழியாப் புகழ் பெற்றுவிடலாமே என்கிற பேராசை மறுபுறமும் அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் வேரூன்றி நின்றது. அவனுக்கு நேரடியாகக் கண்ணனுடன் போரிடத் துணிவில்லை. 'செய்தது தவறு’ என்று ஒப்புக் கொண்டு, முனிவரின் கால்களிலும், கண்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால், அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும், ஆணவம் பிடித்த சித்திரசேனன் அதைச் செய்யவில்லை. மாறாக, அவனது சூன்யமான மனதில் சூழ்ச்சியே பிறந்தது.
சித்திரசேனன், சிசுபாலனின் நண்பன். அதனால், நண்பன் சிசுபாலனின் மரணத்துக்குக் காரணமான பாண்டவர்களையும் பழிவாங்க வேண்டும், கண்ணனையும் அவமானப்படுத்த வேண்டும், தானும் பிழைக்க வேண்டும் என்று புதிதாக ஒரு சதித் திட்டம் தீட்டினான். அதனை நிறைவேற்ற ஒரு நாடகம் ஆடினான். கண்ணனின் விரல்களாலேயே அவரது கண்ணைக் குத்துவதாக இருந்தது அந்தத் திட்டம். அதாவது, தன் ஆட்சியில் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்கிற நல்லெண்ணம் கொண்ட அர்ஜுனனை, தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான்.
இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு, அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். யாருக்குத் தீங்கிழைத்தானோ அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்காமல், மற்றொருவனையும் தீவினையில் ஆழ்த்த எண்ணி, இவ்வாறு செய்தான் சித்திரசேனன்.
''அர்ஜுனா... பல்குணா... பார்த்திபா... அபயம், அபயம்! உயிர்ப் பிச்சை அளியுங்கள்'' என்று கூறி, சரணடைந்தான்.
''எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். அபயம் அளித்தேன். அதுதான் க்ஷத்திரிய தர்மம். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன்'' என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.
''மன்னர் மன்னா, சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா?'' என்று கேட்டான் கந்தர்வனான சித்திரசேனன். ''நான் வணங்கும் கண்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும், என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன்'' என்றான் பார்த்திபன்.
''அர்ஜுன ராஜனே, என் பெயர் சித்திரசேனன். நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக, என் மீது போர் தொடுத்து, என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று, அவனோடு போரிட்டு, அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும்'' என்று கெஞ்சினான்.
''உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல்?'' என்றான் அர்ஜுனன். ''அவன் ஒரு சாதாரண குறுநில மன்னன்தான். தங்களுக்கும் உறவினன்தான். ஆனால், 'தன்னை யாராலும் வெல்ல முடியாது’ என்றும், 'அர்ஜுனன் கூடத் தன்னை எதிர்த்து நிற்க முடியாது’ என்றும் மார்தட்டுகிறான்'' என விஷமமாகவும் சூசகமாகவும் கூறினான் சித்திரசேனன்.
தன்னை எதிர்க்கத் துணிந்திருக்கிறான், தன் வீரத்துக்கு சவால் விட்டிருக்கிறான், தனக்கு பந்துவும்கூட என்று மனதுக்குள் எண்ணிய அர்ஜுனன், அது கௌரவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக ஊகித்தான். ஆகவே, விவேகத்துடன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு, ''அப்படியா? கவலைப்படாதே! அவனை வென்று, உன் உயிரைக் காப்பாற்றுகிறேன்'' என உறுதிமொழி கூறினான்.
சித்திரசேனன் சாதுர்யமாகப் பேச்சைத் தொடர்ந்தான். ''அர்ஜுன ராஜரே... தங்களை நான் பரிபூரணமாக நம்பலாமா? ஒருவேளை அவனை நீங்கள் சந்தித்ததும் மனம் மாறி...'' - கந்தர்வன் முடிக்கவில்லை; அர்ஜுனன் குமுறினான். ''என் வீரத்தை மட்டுமல்ல, என் சத்தியத்தையும் நீ சந்தேகிக்கிறாய். அடைக்கலம் என்று வந்தவரை ஆதரிக்காமல் போகமாட்டான் இந்த அர்ஜுனன். உன் எதிரி எவனானாலும் சரி, என் இறுதி மூச்சுவரை போராடி, உன்னை நான் காப்பேன். இப்போதாவது உனக்கு நம்பிக்கையும் தைரியமும் வந்ததா? எங்கிருக்கிறான் உன் பகைவன் என்று சொல்?'' எனக் கோபாவேசத்துடன் கேட்டான் அர்ஜுனன்.
''மன்னர் மன்னா! என் உயிரைக் கவர என் மீது போர் தொடுத்துப் புறப்பட்டு வருகிறவன் வேறு யாருமல்ல; தங்கள் ஆத்ம பந்து, உற்ற நண்பன் துவாரகா அதிபதி ஸ்ரீகிருஷ்ணன்தான்'' என்றான் சித்திரசேனன்.
அவ்வளவுதான்! அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்துவிட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை.
''அர்ஜுனரே... ஏன் அதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள்? உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான ஸ்ரீகிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா? அல்லது, கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா? கவலைப்படாதீர்கள்... தங்களால் முடியவில்லை என்றால், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். 'கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே’ என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன்'' என அங்கலாய்த்தான் சித்திரசேனன்.
''கவலை வேண்டாம். நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும், நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட, நண்பன் மீதே போர் தொடுத்து, உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன்'' என்று சூளுரைத்து, போர்க்கோலம் பூண்டு, யுத்த பூமியில் ஸ்ரீகிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன்.
குழலூதி ஆவினங்களை மேய்க்கும் கண்ணன் கவசம் அணிந்து, வாள்- வில் ஏந்தி நின்ற போர்க்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். உற்ற நண்பனை, ஆத்மபந்துவை, வழிகாட்டியாக விளங்கிய குருவை, தெய்வத்தை எப்படி எதிர்த்துப் போர் புரிவது? அர்ஜுனன் உள்ளத்தில் கலக்கம், குழப்பம், பயம், பீதி! ஆனால், கடமையைச் செய்யும் போதும், சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கண்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான்.
கிருஷ்ணார்ஜுன யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தைத் தொடங்கியது கண்ணன்தான். துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்ததுபோல் தவித்தான் அர்ஜுனன்.
விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும், ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.
தருமனும் பீமனும் மற்றவர்களும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி, யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான கந்தர்வன் சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து, களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து, சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது; அறிவு தெளிந்தது. பரந்தாமன் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் அவன்.
சரணாகதி அடைகின்றவர்களைக் காக்கின்றவன் அல்லவா கண்ணன்? அர்ஜுனனால் காப்பாற்றப்பட வேண்டியவன், கண்ணனால் காப்பாற்றப்பட்டான். கண்ணன் சூளுரைத்தது பொய்யாகவில்லை. அவன் சித்திரசேனனின் உடலை அழிக்கவில்லை, உயிரைப் போக்கவில்லை. ஆனால், அவனுள் இருந்த ஆணவத்தையும் அகந்தையையும் அறியாமையையும் அழித்தார். அவன் செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி, அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். முனிவருக்குக் கண்ணன் கொடுத்த வாக்கும் நிறைவேறியது.
அதே நேரம், தாயினும் மேலான தன் ஆத்ம நண்பன் கண்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கண்ணனின் கால்களில் விழுந்து, மன்னிப்புக் கோரினான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி, கண்ணனிடம் மன்னிப்புக் கோரினர். அப்போது...
''இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இப்படியும் ஒரு யுத்தமா, இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை நானே உருவாக்கி நடத்தினேன். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, பரந்த பாரத சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க எத்தனையோ தர்மயுத்தம் இன்னமும் நடக்கப் போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காக இந்த யுத்தம் ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது!'' எனப் புன்முறுவலோடு கூறினார் பரந்தாமன்.
'கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக்காட்டவே இந்த யுத்தம் நிகழ்ந்தது. குருக்ஷேத்திரப் போர் எனும் நாடகத்தின் ஒத்திகையை நடத்தி முடித்த பெருமை, கண்ணனுக்கு! பெறற்கரிய பெரும் பேற்றைப் பெற்ற பெருமை, அர்ஜுனனுக்கு!

Comments