நாகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரர். நாகப்பட்டினம் - திருவாரூர் இடையே உள்ளது கீவளூர். இந்த ஊரிலிருந்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருக்கோயில்.
தேவர்கள் இந்தத் தலத்தில் தங்கி, தவமிருந்து சிவனாரை வழிபட்ட திருத்தலம் ஆதலால், ஸ்வாமிக்கு ஸ்ரீதேவபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. கதலீவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் எனப் பல பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு. தற்போது தேவூர் எனப்படுகிறது.
அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமதுரபாஷினி. தூய தமிழில், ஸ்ரீதேன்மொழி அம்பாள். இங்கேயுள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், அழகிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
காவிரியின் தென்கரைத் திருத்தலங்களில், 85-வது தலம் இது! அறுபத்துமூவர், திருநந்தி தேவர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியனார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆத்மநாதர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இந்தத் தலத்தில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நடுவே ஸ்ரீசுப்ரமணியரின் திருச்சந்நிதி அமைந்து இருப்பதால், இந்தத் தலம் சோமாஸ்கந்த வடிவ திருத்தலம் எனப் போற்றப்படுகிறது.
வியாழ பகவான் இந்தத் தலத்தில் சிவனாரை நினைத்து நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், தேவகுருவாகவும் பதவி உயர்வு தந்து ஆசீர்வதித்து அருளினார். தவிர, இந்தத் தலத்தில் சிவனாரே அனுக்கிரக தட்சிணாமூர்த்தியாகவும் அழகுத் திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்வதால், குரு பரிகார புண்ணியத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் மறைந்திருந் தால் அல்லது குரு பலம் இழந்திருந்தால் அல்லது குருவின் பார்வை படாமல் இருந்தால், இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு பரிகாரங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தித்து, ஸ்வாமி, அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரை 16 முறை வலம் வந்து வணங்கினால், குரு யோகம் கிடைக்கப் பெறலாம்; காரியத் தடைகள் விலகி, நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்!
இந்திரன், குபேரன், சூரிய பகவான், ஸ்ரீஅனுமன் மற்றும் ஸ்ரீகௌதமர் முதலானோர் தவமிருந்து வணங்கி வரம் பெற்ற திருத்தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப் பரவிய தலம்; சேக்கிழார், அருணகிரிநாதர் ஆகியோர் வணங்கிய திருத்தலம் எனப் பல பெருமைகள் கொண்டது தேவூர் தலம்.
ஸ்ரீதேவபுரீஸ்வரருக்கு செந்தாமரை மலர்கள் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து, ஸ்ரீதேன்மொழி அம்பிகைக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்கி வழிபடுங்கள். இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!
Comments
Post a Comment