ஆடி செவ்வாய் ஆலயம்

ஆடிமாதம் அம்மனுக்குத்தான் விசேஷம் என்பார்கள். ஆனால் ஆடி செவ்வாயில் வழிபடுவோருக்கு விரும்பிய பலன்களைத் தரும் சிவாலயம் ஒன்று சென்னையிலேயே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? “செவ்வாய்க் கோயில்’ என்றழைக்கப்படும் வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம்தான் அந்த சிவாலயம். செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும் இது சொல்லப்படுகிறது.

புராணக்காலத்தில் வில்வ மரங்கள் நிறைந்த காடாக விளங்கியதால் வில்வ வனம், வில்வாரண்யம் என்ற காரணப் பெயராலும் இத்தலம் அழைக்கப்பட்டது. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற பழமையான ஆலயம். மூலவர் அகத்தீஸ்வரர், அங்காரக தோஷம் என்னும் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்வதில் வல்லவர். அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்பட்டவர். தீர்த்தமோ முப்பத்து முக்கோடி தேவர்களால் உருவாக்கப்பட்ட அங்காரக தீர்த்தம். விருட்சமோ சிவனுக்குப் பிரியமான வில்வமரம்.
அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய அவருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

திருக்கயிலையில் நடைபெற்ற சிவபார்வதி திருமணத்தின்போது கூடிய கூட்டத்தால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் இறைவன்.

ஈசனின் கட்டளையை ஏற்று தென்னாடு வந்த அகத்தியரை அழிக்க வில்வலன், வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் திட்டம் தீட்டினர். வாதாபி மாங்கனியாக மாற, வில்வலன் சிவனடியாராக மாறி அகத்தியரை விருந்துண்ண அழைத்தான். அகத்தியர் விருந்தில் அவனளித்த மாங்கனியை உண்டார். உடனே சுயவுருவம் எடுத்த வில்வலன், “வாதாபி வெளியே வா’ என்று தன் தம்பியை அழைக்க, நடந்ததை தன் தவ வலிமையால் அறிந்த அகத்தியர், வாதாபியை தன் வயிற்றிலேயே ஜுரணம் செய்தார்.

அகத்திரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தம்பி உயிருடன் வெளியே வருவான்; அகத்தியர் இறப்பார்; அவரை உண்ணலாம் என்று நினைத்த அரக்கனின் திட்டம் தோல்வியடைந்ததோடு தம்பியையும் இழக்க நேரிட்டதால், வில்வலன் அவரோடு சண்டையிட, அவனையும் அழித்தார் அகத்தியர்.
அசுரர்களை அழித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக இத்தலம் வந்து சிவவழிபாடு செய்தார் அகத்தியர். அப்போது அரக்கர்கள் அவருக்கு இடையூறு செய்ய வீரபத்ரரும் பத்ரகாளியும் அங்கு வந்தனர்.
மகிழ்ச்சியடைந்த அகத்தியர், தன் சிவபூஜைக்கு பாதுகாப்பாக இருந்த வீரபத்ரரும் பத்ரகாளியும் எப்போது இந்தத் தலத்திலேயே வடக்கு திசை நோக்கியபடி இருந்து, வருகின்ற பக்தர்களைக் காக்க வேண்டும் என வேண்டினார்.
இப்போதும் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு முன்பாக பத்ரகாளி சமேத வீரபத்ரசுவாமிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. அகத்தீஸ்வரரின் காவல் தெய்வமாக விளங்கும் இவருக்கு வெற்றிலைமாலை சாத்தி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் நிச்சயம்! அருகே நாகாத்தம்மன் வீற்றிருக்கும் அரசு, வேப்பமர மேடை உள்ளது. இந்த மேடையைச் சுற்றி உள்ள நாகர்களை வழிபட்டு திருமணம் கைகூடியவர்களும் குழந்தைபேறு பெற்றவர்களும் ஏராளம் என்கின்றனர்.
அகத்தியர் நீராடிய அங்காரக தீர்த்தம் நீராழி மேடையுடன் உள்ளது. எக்காலத்திலும் வற்றாத இத்தீர்த்தக் குளத்தில் வருண பகவான் வருண யந்திரத்தை பிரதிஷ்டை செய்துவிட்டுச் சென்றதாக காஞ்சிப் புராண பெருமையில் சொல்லப்பட்டுள்ளது.

தெற்கு வாயில் வழியாக நுழைந்தால், எதிரே சிவலிங்கத்தை அகத்தியர் பூஜிக்கும் காட்சி கதைச் சிற்பமாக அமைந்துள்ளது. வாயிலருகே அரிச்சந்திரனின் சிலை ஒன்றும் உள்ளது.
வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சமான வில்வம், நாகர் சிலைகள், கோசாலை அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் கோபூஜை சிறப்பாக நடக்கிறது. கொடிமரம், பலிபீடம், நந்திகேஸ்வரரை தரிசித்துவிட்டு கிழக்கு வாயில் வழியாக நுழைந்தால் முதலில் மகா மண்டபம்.
அங்கு சந்திரன், சூரியன், பாலகணபதி, நவகிரகங்களைத் தரிசித்துவிட்டு அதிகார நந்தியின் அனுமதி பெற்று இறைவி சன்னதிக்கு வருகிறோம்.
இறைவி சொர்ணாம்பிகை அழகு மிளிரக் காட்சி தருகிறாள். அவளது சன்னதிக்கு வெளியே மகாலட்சுமியும் சரஸ்வதியும் அருள்கின்றனர். முப்பெரும் தேவியரின் தரிசனம் நமக்கு மனநிறைவு தருவது நிச்சயம். அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது தனி மேடையில் பைரவரையும் தரிசிக்கலாம்.
கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள கருவறையில் நான்கடி உயர லிங்கமாக அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். வெளியே கணபதியும் முருகனும் காட்சி தருகின்றனர்.
செவ்வாய்க் கிழமைகளில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷ பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். மேலும் திருமணம், குழந்தைப்பேறு, கல்வியில் ஏற்பட்ட தடைகளும் விலகுகிறதாம். குறிப்பாக ஆடி செவ்வாயில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை அருள்கின்றனர். தட்சிணாமூர்த்தி தலையில் கங்கையையும், காலடியில் நிதியையும் வைத்து அபூர்வ வடிவில் உள்ளார்.
பிராகாரத்தில் சோமாஸ்கந்தர், பாலதண்டாயுதபாணி, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமண்யர், அகத்தியர், அவர் வழிபட்ட லிங்கம், நால்வர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், அஷ்டலிங்கம், ஆதிசங்கரர், நடராஜர் ஆகியோரை தரிசிக்கலாம்.

சிவன், அம்பாளுக்குரிய அனைத்து விசேஷ தினங்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன்!

சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

Comments