ஸ்ரீமுத்துவேலாயுத ஸ்வாமி கோயில்

ரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையம் அருகில் உள்ள ஊர் மலையப்பப்பாளையம். இங்குள்ள அழகிய மலையின் மீது, அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீமுத்துவேலாயுத ஸ்வாமி. இந்த மலையை உதயகிரி என்று சொல்வார்கள். எனவே, உதயகிரி என அழைக்கிறார்கள், பக்தர்கள்!
சுமார் 600 வருடங்களுக்கு முன்பு, எம்மாம்பூண்டி கிராமத்தில் உள்ள முத்துக்குமார செட்டியார் என்பவர் கட்டிய கோயிலாம் இது! பிறகு, அந்த ஊர்க்காரர்கள் அடிக்கடி இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்து வந்தனர் என்கிறது ஸ்தல வரலாறு.
ஸ்ரீகாசிவிசாலாட்சி அம்பாள், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.
கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்!
பங்குனி உத்திர விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படுமாம் ஆலயம். இந்த நாளில், தீராத நோயால் அவதிப் படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள்


அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் திருமணத் தடைகள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன் வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சித்திரை மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிக்கலாம். இந்த நாளில் முருகப் பெருமானைத் தரிசிப்பது விசேஷம்! எனவே இந்த நாட்களில், ஈரோடு மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர் (இதனால்தான் இந்த மலைக்கு, உதயகிரி எனப் பெயர் அமைந்த தாகவும் சொல்வர்).
வைகாசி விசாகம், சித்திரைப் பிறப்பு, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி திருவாதிரை, தை பிரம்மோத்ஸவம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கே சிறப்புறக் கொண்டாடப் படுகின்றன.
முருகக் கடவுளுக்கு சந்தனக் காப்பு செய்வதும், விபூதி அபிஷேகம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும் என்கின்றனர் பக்தர்கள். 
இங்கேயுள்ள ஸ்ரீகாசி விசாலாட்சிக்கு, ஆடி மாத வெள்ளிக்கிழமையின்போது, மஞ்சள்காப்பு அலங்கார வழிபாடு வெகு விசேஷமாக நடைபெறுகிறது.  மஞ்சள்காப்பு செய்தாலோ அல்லது இந்த மஞ்சள்காப்பு அலங்காரத்தைத் தரிசித்தாலோ... கல்யாண வரம் கிடைக்கும்; சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
நாமும் ஒருமுறை இந்த ஊருக்குச் சென்று, உதயகிரி ஆண்டவனை வழிபடுவோம்; வளம் பெறுவோம்!

Comments