திருமணம் நடக்க திருக்கல்யாணம்

 

பஞ்சாட்சரப் பரமனுக்கும் ஐந்துக்கும் எத்தனை எத்தனையோ தொடர்பு உண்டு. அந்த வகையில் திருச்சிராப்பள்ளியில் ஐந்து இடங்களில் கோயில் கொண்டு “நாதர்’ எனும் திருப்பெயர் தாங்கி அருள்பாலிப்பது நிறைய பேருக்குத் தெரியாது.
திருச்சி நகரின் கிழக்கில் கைலாச நாதர்; வடக்கில் பூலோக நாதர்; மேற்கில் நாகநாதர்; காசி விசுவநாதர் ஆலயமும்; தெற்கில் வெளிகண்டநாதர் என ஐந்து ஆலயங்கள் நகரை அலங்கரிக்கின்றன. இவற்றுள் பாலக்கரை பகுதியில் உள்ள வெளிகண்ட நாதர் கோயிலுக்கு இப்போது செல்கிறோம்.
உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். உள்ளே நுழையும் போதே இதன் பழமை நம் மனதில் நம்மையும் அறியாமல் ஓர் அற்புத பக்தியையும் பரவசத்தையும் ஊற்றெடுக்க வைக்கிறது.
மகாமண்டபம், நந்தியெம் பெருமான், பலிபீடம், கொடிமரம் காண்கிறோம். மகா மண்டபத்தின் இடது புறம் கருடாழ்வார் திருமேனி இருப்பது வித்தியாசமானது. சமயக் குரவர்கள் நால்வரின் திருமேனிகளும் உள்ளன.
அன்னை சுந்தரவல்லி நான்கு கரங்களுடன் மேல் கரங்களில் தாமரை மலர்களையும் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடனும் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். சுந்தரவல்லி என்ற பெயருக்கு ஏற்ற அழகிய திருவடிவம் அன்னையுடையது. தரிசிக்கும் போது மனதில் நிறைவும் நெகிழ்வும் ஒருசேர ஏற்படுகிறது. இவளை வணங்குவோர் வாழ்வில் மங்களங்கள் யாவும் நிறையும் என்பது நம்பிக்கை.
அன்னையை அடுத்து ஸ்ரீனிவாசப் பெருமாள் தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி மண்டபத்தில் சேவை சாதிக்கிறார். அம்பிகையின் தமையன் பெருமாள் என்பதால், கல்யாண உற்சவ காலங்களில் இவருக்கு தனிச்சிறப்பு. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை தரிசனம் கிட்டுகிறது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி நல்ல கணவனைப் பெற கன்னியர் வேண்டுவதும் அவர்கள் பிரார்த்தனை பலிப்பதும் கண்கூடு என்கின்றனர் பக்தர்கள். திருச்சுற்றின் மேற்கில் முத்துக் கருப்பன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் உள்ளனர். சூரியன், சனீஸ்வரன், நாகர், லிங்கத் திருமேனியராக கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வெளி என்பதற்கு ஆகாயம், அண்டம் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இத்தலத்து ஈசனை வழிபடுவதால், மறைமுகமாக வரும் எதிர்ப்புகள், பிற பாதிப்புகள் யாவும் விலகும் என்பது நிச்சயம்!
பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.
தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருமணத் தடை நீங்கவும், தங்களது மகன் அல்லது மகளுக்கு விரைந்து திருமணம் நடந்தேறவும் இத்தலத்து இறைவன் இறைவிக்குத் திருக்கல்யாணம் நடத்திவைக்கின்றனர். அதனால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறி விரைவிலேயே மங்கள மேளச்சத்தம் அவர்கள் இல்லத்தில் நிறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தீவினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நினைப்பவர்கள் இங்கு வந்து இறைவன் இறைவியிடம் மனமுருக வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சில தினங்களிலேயே அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்கள் மீண்டும் ஆலயம் வந்து இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நன்றியை கண்கள் கலங்க, மனம் நெகிழ நிறைவேற்றிச் செல்லும் காட்சி இத்தலம் வருவோரை மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமாகும்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் பாலக்கரையில் உள்ளது, வெளிகண்ட நாதர் ஆலயம்.

Comments