தங்க பனம் பழம்

ழமையும்,பெருமையும் வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, பிரகலநாயகி சமேத அரங்குளநாதர் திருக் கோயில்.
திருவரங்குளத்தில் அமைந்த இக்கோயில் வரலாறு குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அது என்ன?

இப்பகுதி காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர், வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு வேடுவச்சியை, அவளது கண வனிடம்  ஒப்படைத்தார்.

அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு வேடன், முனி வருக்கு தினசரி கிழங்கு களையும், பழங்களையும்  கொடுத்து வந்தான். அதற்கு நன்றிக்கடனாக முனிவர், அவன் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பனைமரத்தைத் தோற்றுவித்து, வேடனுக்கு தினசரி பொன்னால் ஆன பனம் பழம் ஒன்று கிடைக்கச் செய்தார்.

பொற்பனம்பழம் பற்றிய மதிப்பை அறிந்திராத வேடன்,  மேற்படி பழங்களை அவ் வூர் வியாபாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டு தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்று வந்தான். இப்படியாக, ஆயிரக்கணக்கான பொற்பனம் பழங்களைப் பெற்று அந்த வியாபாரி பெரும் பணக்காரராகிவிட்டார்.

ஒரு காலகட்டத்தில் பொற் பனம் பழத்தின் மதிப்பைத் தெரிந்து கொண்ட வேடன், அதன்பிறகு வியாபாரியிடம் அதிகமான பொருட்களைக் கேட்க, வியாபாரி மறுக்க, வேடன் மன்னனிடம் முறையிடுகிறான்.

விஷயம் அறிந்த மன்னன், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரையும், அவரால் உருவாக்கப்பட்ட பொற்பனையையும் கண்டு பிடிக்குமாறு உத்தரவிடுகிறான்.

சேவகர்கள் எவ்வளவு முயற்சித்தும் முனிவரையும் பொற்பனையையும் காட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு லிங்கம் ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

செய்தியறிந்த மன்னன், அவ்விடத்தை இறைவன் இருப்பிடமாகக் கருதி, அங்கு சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டத் தீர்மானித்தான். ஆனால் வேடுவனிடமிருந்து பொற் பனம்  பழங்களைப் பெற்ற வியாபாரி, தனது செயலுக்கு வருந்தி, தனது செலவிலேயே கோயிலைக் கட்டி முடித்தார். கோயில் கட்டச் செலவானது போக மீதமிருந்த பொற்பனம் பழங்களைக் கோயில் வளாகத்தில் அறை ஒன்றில் பூட்டியும் வைத்தார். இச் செய்தி திருவரங்குளம் தல வரலாற்றிலும் காணப்படுகின்றது.

கருவறைக்கு முன் உள்ள மண்டபங்களை ஒட்டி நூற்றுக் கால் மண்டபம் இருக்கின்றது. இம்மண்டபத்தின் தெற்குச் சுவரில் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் உள்ளன. மேலும் கணேசர், லட்சுமி, சுப்ரமணியர், பைரவர், சூரியன் ஆகியோர் சன்னதிகள் இருக்கின்றன.

நூற்றுக்கால் மண்டபத் தின் தெற்குப் பகுதியில் ஒரு கற் பலகையில் காணப்படும் குதிரை வீரன் உருவம் இப்பகுதியை ஆண்ட நாயக்க சிற்றரசன் ஒருவனின் உருவமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இத்திருக்கோயில் இறை வன் அரங்குளநாதர், சுயம் புலிங்கமாக அருள்கிறார். இங்குள்ள ஹர தீர்த்தம், சிவபெருமானால் உரு வாக் கப்பட்டதாம். இத் தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மன நோய்க்கு ஆளானோர் இத்தீர்த்தத்தில் நீராடி அரங்குளநாதரையும் அம்பிகையையும் அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் நலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பதால், வியாபாரிகள் அதிகமாக இக்கோயிலுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

குடும்பத்துடன் அனைவரும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது.

புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி செல்லும் பாதையில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரகலநாயகி சமேத அரங்குளநாதர் திருக் கோயில். புதுக்கோட்டை பஸ்நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

Comments