ஸ்தல புராணங்கள் உண்மைதானா?

புராணங்களை நம்புகிறவர்கள் கூட ஸ்தல புராணங்கள் என்று ஊருக்கு ஊர் சின்னதாக இருக்கிறவற்றை நம்புவதற்கு யோசிக்கிறார்கள்.
படிப்பாளிகள், எல்லாப் புராணமுமே ஹம்பக் என்று சொல்லி, இந்த ஸ்தல புராணங்களை வெறும் குப்பை என்று சொல்லுமளவுக்குப் போய் விடுகிறார்கள்.
என்ன காரணம் என்றால் அநேக ஸ்தல புராணங்கள் ஒவ்வொன்றிலும் இங்கேதான் இந்திரனுக்கு சாபவிமோசனம் ஆயிற்று, இங்கேதான் அகத்தியர் பார்வதி-பரமேச்வரன் திருக்கல்யாணம் காட்சியைப் பார்த்தார் என்று இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? அவரவருக்கு தங்கள் ஊரை உயர்த்திச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே இட்டுகட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
இதைப்பற்றி விஷயம் தெரிந்த ஆஸ்திகர்களைக் கேட்டால், கல்பத்துக்குக் கல்பம் அதே கதைகள் திரும்பவும் நடக்கிறது. அதே கதை நடந்தாலும் ஒரே அச்சாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் பேதமும் இருக்கும். ஒரு கல்பத்தில் ஒரு ஸ்தலத்தில் நடந்த கதை, இன்னொரு கல்பத்தில் இனனொரு ஸ்தலத்தில் நடக்கிறது. அதனால்தான் அதே ஸ்தல்களில் ஒரே புராணக் கதை நடந்ததாகச் சொல்லப்படுகிறது என்கிறார்கள்.
இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்களும்கூட, ஒவ்வொரு ஊர்க்காரர்களுக்கும் புராணங்களில் வரும் புண்ணிய சம்பவங்கள் தங்கள் தங்கள் ஊரில் நடந்ததாகச் சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இபுருக்கிறதென்று நல்ல முறையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாமர மக்கள் தங்கள் ஊருக்கே ராமர் வந்தார்; கிருஷ்ணர் வந்தார்; மகரிஷிகள் வந்தார்கள்; அநேக மகா கொடூரமான பாவங்களுக்கு விமோசனம் கிடைத்தது என்ற நம்பிக்கையைப் பெற்றதால், அந்தக் கோயில்களுக்குப் போவதிலும், உற்சவங்கள் நடத்துவதிலும் உற்சாகம் அடைந்து, நல்ல பக்தி சரத்தைகளைப் பெற்றிருக்கிறார்களா, இல்லையா? இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
புத்திசாலிகளான நம்முடைய சந்தேகங்கள் இல்லாமல் அந்த எளிய ஜனங்கள் பெறும் நிறைவை ஏன் குலைக்க வேண்டும்? இந்த மாதிரி விஷயங்களில் உண்மை என்பதாக ஏதோ ஒரு யதார்த்தத்தைச் சொல்லி, அதனால் சாமான்ய ஜனங்கள் பெறும் திபருப்தியைக் கெடுத்து, அவர்களுக்கு புத்திக் கலக்கத்தை உண்டாக்கக் கூடாது. பகவானே கீதையில் சொல்கிறார்:
ந புத்திபேதம் ஜனயேத்
அக்ஞானம் கர்ம ஸங்கினாம்
இப்படிச் சொல்வதால் ஸ்தல புராணங்கள் யதார்த்தமான சத்தியத்தைச் சொல்லவில்லை என்கிற கோஷ்டியோடு நான் சேர்ந்து விட்டதாகவும் நினைத்துவிடக்கூடாது.
பெரும்பாலான ஸ்தல புராணங்கள் உண்மையான விருத்தாந்தங்களைத்தான் சொல்கின்றன. சிலது வேறு தினுசாக இருக்கலாம். அப்படியிருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் சொல்கிறேன். எல்லா ஸ்தல புராணமும் பொய்யென்று நான் சொல்ல வரவில்லை!
வேதத்தில் என்ன சொல்லியிருந்தாலும் அது சத்தியம் என்று நம்ப வேண்டும் என்பது போல, சைவ-வைணவங்களுக்குத் தமிழ் வேதமாக உள்ள தேவார-திவ்ய பிரபந்தங்களில் சொல்லியிருப்பதை நாம் உண்மையென்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
அநேக ÷க்ஷத்ரங்களில் பாடப்பெற்ற தேவாரங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அந்தந்த ஸ்தல புராண விஷயங்கள் வருகின்றன. 1500 வருஷத்துக்கு முந்தைய இந்தத் தேவார திவ்ய பிரபந்தங்களிலேயே ஸ்தல புராணக் குறிப்புகள் இருப்பது அந்தப் புராணங்களின் பழமைக்குச் சான்றாக இருக்கிறது.
உதாரணமாக, ஸ்ரீரங்கத்திலே பெருமாள் வேறு எந்த ஊரிலும் இல்லாத மாதிரி தெற்கே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அந்த ÷க்ஷத்திர புராணத்தில் காரணம் சொல்லியிருக்கிறது. ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு பட்டாபிஷேகம் ஆன பிறகு விபீஷணன் இலங்கைக்குத் திரும்பிப் போனபோது, ராமர், தாம் வழிபட்டு வந்த ரங்கநாத விக்ரஹத்தை அவனுக்குக் கொடுத்தார் என்றும்; அதுதான் அவன்போகிற வழியில் ஒரு காரணத்தால் உபய காவேரிக்கு நடுவே ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டையாகி விட்டதென்றும், தன்னோடு லங்காபுரிக்கு எடுத்துப் போக முடியவில்லையே என்று துக்கப்பட்ட விபீஷணனைத் திருப்திபடுத்தவே ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் என்றும் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தில் விரிவாகக் கதை சொல்லியிருக்கிறது. இந்த விஷயத்தை ஆழ்வார்கள் தங்கள் பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.
மகாவிஷ்ணு தெற்கே பார்த்திருப்பதற்குப் புராணம் சொல்கிற காரணம் ஆழ்வார் காலத்திலேயே நிச்சயமாக இருந்திருக்கிறது. அப்படியானால் அந்த ஸ்தல புராணம் அதற்கும் முந்தியதாகத்தானே இருக்க வேண்டும்?
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், அம்பாளே பிடித்து வைத்து பூஜை பண்ணிய பிருத்வி (மண்ணாலான) லிங்கம்; அவள் பூஜை பண்ணுகிறபோது, ஸ்வாமி பெரிய வெள்ளத்தைப் பிரவகிக்கச் செய்தும் அவள் விடாமல் லிங்கத்தைக் கட்டிக் கொண்டாள். அதிலிருந்து, ஸ்வாமியே அவிர்பவித்தார் என்று ஸ்தல புராணத்தில் இருப்பதை தேவாரமும் சொல்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏகாம்பரத்தில் பாடிய தேவாரத்தில் பாட்டுக்குப் பாட்டு அம்பாள் பூஜை பண்ணின மகிமையைச் சொல்கிறார்.
ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஜம்புகேசுவரத்தில் (திருவானைக்கா) ஜம்பு மகரிஷி என்பவர் ஜம்பு (நாவல்) விருட்சமாக, அதன் கீழேயே ஈஸ்வரன் வந்து கோயில் கொண்டார். அங்கே லிங்கத்துக்கு ஒரு சிலந்தி பந்தல் போட்டுப் பூஜித்தது. இந்தப் பந்தலை அறுத்துக் கொண்டு ஒரு யானை லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணிற்று, இதனால், சிலந்திக்கு ஆத்திரம் வந்து, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கொண்டு அதன் மண்டைக்குள் போய்க் குடைந்தது. அப்போது யானை மண்டையை மோதிக் கொண்டு, தானும் செத்து, சிலந்தியையும் சாகடித்துவிட்டது.
இந்தச் சிலந்திதான் பிற்பாடு கோச்செங்கட் சோழனாகப் பிறந்த, ஜம்புகேச்வர ஆலயத்தைக் கட்டிற்று. இந்தக் கதையை ஸ்தல புராணம் சொல்கிறது.
இத்தனைக்கும் தேவாரத்திலேயே சான்று இருக்கிறது. மூலஸ்தானத்தில் எப்போதும் காவேரி ஊற்று இருக்கும்படியான அற்புத ஸ்தலம் அது என்பதற்கு அப்பர் தேவாரம் ஒன்றில் பத்துப் பாடலிலும் குறிப்பு இருக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் தினமும் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கிற சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறதல்லவா? இது நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். இந்த ஊர்ப் பெயரே தேவார காலத்திலிருந்து கழுக்குன்றம் என்று இருக்கிறது. இதைவிடப் பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?
திருவிடைமருதூரில் தைப்பூச ஸ்நானம் விசேஷமானது என்று ÷க்ஷத்ர மஹாத்மியத்தில் சொல்லியிருக்கிறது என்றால், இந்த விசேஷத்தை சுமார் 1300 வருஷங்களுக்கு முன்பு அப்பரும் சம்பந்தருமே பாடியிருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கம், ஜம்புகேச்வரம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர் போன்ற மஹா ÷க்ஷத்ரங்கள் புராதனமாக பிரசித்தமானதால் அவற்றைப் பற்றிய புராண வழக்குகள் பழைய தமிழ் நூல்களில் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று தோன்றலாம். சின்னச்சின்ன ÷க்ஷத்திரங்களில் உள்ள சின்னப் புராண ஐதிகங்களுக்குக் கூடப் பழைய தமிழ் மறைகளில் குறிப்பு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
பிரசித்தி அடையாத சில ÷க்ஷத்திரங்களில் ரிஷிகளோ தேவர்களோ வண்டுகளாக இருந்து பூஜை பண்ணினதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. இப்போதும் அந்த ஊர்களில் சந்நதியிலேயே பெரிய தேனடைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
நன்னிலம் ஸ்தலத்தில் இப்படி இருக்கிறது. மதுவனம் என்றே அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. (மது - தேன்) திருத்துறைப் பூண்டிக்குப் பக்கத்தில் சித்தாம்பூர் என்று சொல்கிற ஊர் இருக்கிறது. இதற்கு தேவாரத்தில் திருச்சிற்றேமம் என்று பெயர். இங்கேயும் ஸ்வாமி சந்நதியில் தேன்கூடு இருக்கிறது. சித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிக்கிறார்கள் என்று ஐதிகம். இந்தத் தேனடைக்கும் தினந்தோறும் பூஜை நடக்கிறது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இவற்றைப் பற்றி அந்தந்த ஊர் தேவார, திவ்யபிரபந்தங்களில் ரெபரன்ஸ் இருக்கிறது.
ஒரு ஸ்தல புராணத்தில் இருக்கிற சம்பவத்தை சம்பந்தப்படுத்தி இன்னொன்றில் வருகிறது. இப்படிப் பல புராணங்களுக்கிடையே ஒரே கதையைத் தொடர்புபடுத்திச் சொல்லியிருக்கிறது. Inter-Conected ஆக சொல்லியிருக்கிறது. எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால்தான் முழுக் கதையும் தெரிகிறது. இம்மாதிரி ஒரு ஸ்தல புராணத்தில் விட்ட இடத்தில் இன்னொன்று தொடங்குவதாக அநேகம் இருப்பதே ஸ்தல புராணங்கள் பொய்யில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.
ஸ்தல புராணங்களுக்குள்ளே மட்டுமல்லாமல் 18 மகாபுராணங்கள், உபபுராணங்கள் இவற்றில் பல அம்சங்களைக் கூட ஸ்தல புராணங்கள்தான் பூர்த்தி செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது இவற்றின் நிஜத்தன்மை (authenticity) பற்றி மேலும் உறுதியாகிறது.

- காஞ்சி பெரியவர் உபன்யாசத்திலிருந்து

Comments