வயங்கள் சூழ்ந்த இடத்தில் சேவை சாதிக்கும் வாயுபுத்திரனை தரிசித்தால் உங்கள் வாழ்வில் வளமைக்குப் பஞ்சமிருக்காது. வசந்தத்திற்குக் குறைவிருக்காது. அப்படிப்பட்ட ஓர் உன்னத ஆலயமாகத் திகழ்கிறது. கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்.
இங்கு அனுமனின் அருட்கடாட்சம் நிறைந்திருப்பதற்குக் காரணம் என்ன?
அதன் பின்னணியில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.
ஸ்ரீராமர் காரியமாக அனுமனும் வானர வீரர்களும் சீதையைத் தேடிக்கொண்டு தென்பகுதிக்கு வந்தனர். அப்போது பசி, தாகம் மிகுதியால் களைப்புற்றனர்.
அங்கே ரிஷிபிலம் என்ற குகையிலிருந்து அன்னங்கள், நாரைகள் உள்பட பலவித பட்சிகள் உள்பட உடல் நனைந்து வெளியே வந்தன. அங்கே தண்ணீர் இருக்குமெனக் கருதி அனைவரும் குகைக்குள் நுழைந்தனர். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டனர்.
நதி, குளம், சோலை, மாளிகை, கோபுரம் என ஒரு சிறிய நகரமே அங்கு இருந்தது. குகைக்குக் காவலாக அங்கே இருந்தாள், தவமுது என்ற முனிவரின் மகளான சுயம்பிரபை. அனுமன் அவளை வணங்கி, குகைக்குள் இருக்கும் காரணத்தையும்; அந்த நகரத்தைப் பற்றியும் கேட்டார்.
சுயம்பிரபை அந்த வரலாற்றøச் சொல்லத் தொடங்கினாள்.
பண்டைய நாளில் பேராற்றல் கொண்ட மயன் என்பவன் இருந்தான். மிகச் சிறந்த விஸ்வகர்மாவாக விளங்கிய அவனே இந்த அழகிய பொன் மாளிகையையும் பொன் சோலையையும் உண்டாக்கினான். அவன் ஹேமை என்னும் தெய்வப் பெண் மேல் ஆசை கொண்டு அவளுடன் அங்கே தங்கியிருந்தான்.
இந்த விஷயம் நாரதர் மூலம் இந்திரனுக்குத் தெரிய வர, அவன் மயன் மீது அம்பு எய்திவிட்டான். அதனால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான்.
தேவர்கள் அனைவரும் இது குறித்து பரமசிவனிடம் முறையிட, அவர் கங்கையை ஏவிவிட்டார்.
அகத்தியர் அனுக்ரஹத்தால் அகண்ட காவிரியும் குகைக்குள் ஓடிவர, அதில் இந்திரன் நீராடி, பாவம் நீங்கி, இந்திரலோகம் சென்றான்.
அன்று முதல் இந்தத் தீர்த்தத்திற்குக் காவலாக என்னை நியமித்து விட்டார்கள். “ஸ்ரீ ராமகாரியமாக அனுமன் வருவார். அவரிடம் இதை ஒப்படைத்துவிட்டு நீங்கள் தேவலோகம் வரலாம்’ என அன்று பிரம்மதேவர் சொன்ன வார்த்தை இன்று பலித்துவிட்டது. இனிமேல் இந்தத் தீர்த்தத்தை நீங்கள் பாதுகாத்து வரவும் என் அனுமனிடம் வேண்டினாள்.
ஆனால் அனுமனோ, “ராவணன் சீதையைக் கவர்ந்த சென்று விட்டான். சீதையைத் தேடிவர ஸ்ரீராமர் ஆணையிட்டிருக்கிறார். ஸ்ரீராமர் சீதையுடன் சேரும்வரை நாங்கள் இந்த இடத்தில் தங்கமாட்டோம். ராவணனை வதம் செய்துவிட்டு ஸ்ரீராமர், லட்சுமணர், சீதையுடன் இவ்வழியாகச் செல்வோம். அப்போது இத்தலத்தை ஆள்கிறோம்’ என்று சொல்லி புறப்பட்டார்.
ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் வரும்போது தீர்த்தங்கள் அவர்களைப் பின் தொடர, இது குறித்து ராமரிடம் சொன்னார் மாருதி.
நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டு அகமகிழ்ந்த ராமபிரான், “அயோத்தியில் பட்டாபிஷேகம் ஆன பின்பு இந்தத் தலத்திற்கு வரலாம்’ என்று கூறி அப்படியே செய்தார்.
இத்தலத்தில் அனுமனை யந்திரங்கள் எழுதச் செய்து பிரதிஷ்டை செய்தார். ஆனால் அனுமனோ, “ராம தரிசனம் இல்லாமல் ஒருநொடிகூட இருக்க மாட்டேன்’ என்று கூற, இத்தலத்தில் அனுமனுடன் ராமபிரானும் இணைந்து சேவை சாதிக்கிறார்.
இயற்கை எழில் சிந்தும் இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் இங்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலயத்திற்க எதிரே அழகான சுயம்பிரபை தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. தண்ணீர் நிரம்பிக் காணப்படும் அதற்குள் உள்ள குகையைத்தான் சுயம்பிரபை காவல் காத்து வந்தாளாம்.
தீர்த்தக்குளத்தையொட்டி மேற்குப்புற வழியாகச் சென்றால், முதலில் சொர்ண ஆகர்ஷன பைரவரின் தரிசனம் கிட்டுகிறது. அவரை தரிசித்துவிட்டு, திருக்குளத்தின் அழகை ரசித்தவாறு ஆனைமுகனின் சன்னதியை அடைகிறோம். அவரை வணங்கி, அவரது அனுமதி பெற்று அனுமனின் கருவறைக்குள் நுழைகிறோம்.
உள்ளே அபயஹஸ்தம் காட்டி கருணையே உருவாக தெற்கு நோக்கி காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். அவரத விரலில் கணையாழி உள்ளது. அவரது வால் மேல்நோக்கி காணப்படுகிறது.
பெரும் வரப்பிரசாதியான இவரை வணங்கினால் உடல்நலக் கோளாறுகள் விலகி, ஆரோக்யம் மேம்படுவது நிச்சயம் என்கிறார்கள். அவரை தரிசித்த மாத்திரத்திலேயே மனக்குறைகள் விலகி, மனதில் மகிழ்ச்சி நிறைகிறது.
மங்களங்கள் அனைத்தும் அருளும் மாருதியின் தரிசனம் முடித்து அருகேயுள்ள ஸ்ரீராமர் சன்னதி முன் நின்கிறோம்.
திருமணக் கோலத்தில் சீதாதேவியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமர். அருகே லட்சுமணரும், வடக்கே நோக்கி கும்பிட்ட நிலையில் அனுமனும் தரிசனம் தருகிறார்கள்.
தென்மேற்கு மூலையில் தியான மண்டபம் உள்ளது. அங்கே தியானக் கோலத்தில் வீற்றிருக்கும் அனுமனைக் காணலாம். இங்கு அமர்ந்த தியாணம் செய்தால், மனம் அமைதிபெறும்.
தினசரி அன்னதானம் நடைபெறும் இவ்வாலயத்தில் அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, நான்கு புரட்டாசி சனிக்கிழமைகள், தமிழ்ப்புத்தாண்டு ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை முதல் நாளில் பல்வேறு கனி வகைகளைக் கொண்டு அபய ஹஸ்த ஆஞ்சநேயரை அலங்கரிப்பர். அந்த அழகு தரிசனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும்; மாலை 4 மணி முதல் 7 மணி வரையும்; சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரையும்; சீதாதேவி சமேதராக காட்சி தரும் ஸ்ரீராமரையும் நீங்களும் ஒருமுறை வழிபட்டு வாருங்களேன்!
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில், கடையநல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு.
Comments
Post a Comment