தமிழகத்தில் ஒரு ஹரித்வார்

ட நாட்டில் உள்ள ஹரித்வார் மிகவும் புகழ்பெற்ற தலம். அந்த ஹரித்வாருக்குச் சென்று வந்த பலனைத் தரும் ஒரு கோயில் நம் தமிழ்நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஹரித் வாரமங்கலம்தான் அந்த ஊர்.
அரதைப்பெரும்பாழி என அழைக்கப்பட்ட இத்தலத்தில், திருமால் பன்றியுருக் கொண்டு சிவபெருமானின் திருவடியைத் தேடியதாகவும் வராகரின் கொம்பினை ஈசன் தன் மார்பினில் அணிந்து கொண்டதாகவும், தல வரலாறு எடுத்துரைக்கின்றது! அரியாகிய மகா விஷ்ணு பூமியில் துவாரம் (துளை) ஏற்படுத்தி, சிவனாரை வணங்கியதால், இத்தலம் அரித்வார-மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

வன்னிக்காடாய் இருந்த இப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய ஈசனே தல மூர்த்தியாகத் திகழ்கின்றார்! கருவறையுள் சிவலிங்கத்திற்கு அருகே பாதாள அறை ஒன்று காணப்படுகிறது. இதுவே வராகமூர்த்தி ஏற்படுத்திய துவாரம் என்று கூறப்படுகிறது.

இறைவனுக்கு நடத்தப்படும் ஐந்து கால பூஜைகளில் உச்சிகால பூஜைக்கு உகந்த திருத்தலம் இது. இத்தலத்தில் உச்சிவேளையில்  சிவனைப் பூஜிக்க... குபேர சம்பத்து உண்டாகும் என்பது ஐதிகம்.

பிரம்மன் சிவபூஜை செய்து வழிபட்ட பதி இது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார்!

அகன்ற திருக்குளம். நாற்புறமும் படிகளுடன் கவினுறத் திகழ்கிறது. இத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதன் கரை மீது அழகே உருவாய் அமைந்து, அருள் பரப்புகின்றது அரனார் கோயில்!

வாயிலில் கணபதியும், கந்தனும் வரவேற்கின்றனர். மூன்று நிலைகளுடன் கிழக்குமுக ராஜகோபுரம் அற்புதமாக விளங்கிட,உள்ளே நந்தியம்-பெருமானுடன் பலிபீடம், கொடிமரம் ஆகியன முறையே அணி செய்கின்றன.

முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் சுவாமி சன்னதி அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் வலப்புறம் தெற்கு நோக்கியபடி சிவகாமி அம்மையோடு அருட்காட்சியளிக்கின்றார், தில்லையம்பலவாணர். பதஞ்சலியும், வியாக்ரபா தரும் கைகூப்பி அஞ்சலி செய்த வண்ணம் அருகே உள்ளனர்.

மூலஸ்தானம் உயரே காணப்படுகிறது. படிகள் ஏறியபின் சுவாமியை தரிசிக்கின்றோம். சுயம்பு மூர்த்தமாய்ப் பேரருள் பொழிகின்றார், பாதாளேஸ்வரர்! திருமால்வராக அவதாரங்கொண்டு சிவ பெருமானின் திருவடிகளைத் தேடும்போது பாதாளம் வரை சென்றதனால் பெருமானுக்கு இப்பெயர் வந்தது.

ஈசனை வணங்கி, மகா மண்டபத்தின் இடப்புறம் பிரியும் வழியில் இறங்கி, அம்பாள் சன்னதி விரைகிறோம்! கருவறையுள் அம்பிகை அலங்காரவல்லி அழகே உருவாய் அருட்கடாட்சியாய் காட்சியளிக்கின்றாள்.

அம்பாள் திருமணக் கோலமாக சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள். இங்கு அம்பிகையே துர்க்கையின் அம்சமாகவும் மாட்சிமை புரிவதால், இத்தலத்தில் துர்க்கை கிடையாது.

விநாயகர், முருகன், கஜலக்ஷ்மி ஆகியோர் தனித் தனியே சன்னதி கொண்டு அருள் செய்கின்றனர். விஸ்வநாதர் - விசாலாட்சி, மகாலிங்கம், சனீஸ்வரர், சப்த மாதாக்கள் ஆகியோரும் அணி வகுத்துள்ளனர்.

சூரியனும், சந்திரனும் சுவாமியைப் பார்த்திருக்க, அருகே நவகிரகங்கள் உள்ளன. பைரவரும் உடனுள்ளார். கோஷ்ட தெய்வங்களும் ஆலயத்தில் முறையே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அம்பாள் சன்னதியின் இடப்புறம் தல மரமான வன்னி அழகுறத் திகழ்கிறது! சகல தோஷங்களையும் போக்கும் வன்னி மரத்தடி விநாயகர் இங்கே மிகவும் பிரசித்தம்! ஆறு கணபதிகள் இங்கு ஆலயத்தை அலங்கரிக் கின்றனர்.

இந்து சமய அறநிலை யத்துறையைச் சேர்ந்த இவ்வாலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. காலை 6 மணி முதல் 12.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.

இறைவன் - இறைவிக்கு அபிஷேகம் நடத்தி, சுவாமிக்குச் சாற்றிய மாலையை வாங்கிச் செல்ல, திருமணப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஹரித்வார மங்கலம். கும்பகோணம் மற்றும் வலங்கைமானிலிருந்து நேரடிப் பேருந்துகள் உள்ளன.

Comments