காலம் அனைத்தும் கடந்த காலபைரவர் தலம்

ப்பூவுலகின் நிலையான செல்வம் இறையருளால் பெறக்கூடிய அமைதியும்,மனநிறைவும் அமைந்த வாழ்க்கை ஒன்றேயாகும். சோதனைகள் மிகுந்த இவ்வுலக வாழ்வில்,கண்ணை இமை காப்பது போல,இறையருள் நம்மை ஒவ்வொரு கணமும் பெற்ற தாயாகக் காப்பாற்றி வருகிறது.இறையருள் இல்லையேல் எதுவும் இல்லை அவனியில்!
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகப் பெருமான்,எல்லாம்வல்ல பரம்பொருளான சர்வேஸ்வரனது பெருமைகளைப் பாடும்போது, ‘நினைப்பற நினைந்தேன்’ என்று பாடி நெகிழ்ந்துள்ளார். இதனால், உலக நினைவுகள் சிறிதும் இல்லாமல்,அவரது சிந்தையில் சிவபெருமானே நீக்கமற நிலைத்திருந்ததை நம்மால் உணர முடிகின்றது.

இவ்வாறு நாமும் உலகப் பற்றுகளை அளவோடு கொண்டு,அளவற்ற பற்றை உமையொருபாகனிடம் வைத்து,வழிபட்டால் நம் வினைகள் யாவும் தீர்ந்து, பிறவிப் பிணி நீங்கிவிடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. காற்றடித்தால் வானவெளியில் மேகங்கள் கலைந்து விடுவதைப்போல, நம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கவலைகள் என்னும் மேகமும் சிவசிந்தனையால் வேகமாகக் கலைந்துவிடும்!



முற்பிறவிகளில் நாம் செய்திருக்கக்கூடிய செயல்களுக்கு ஏற்ப இறைவன் தருகின்ற பலன்களையே இப்பிறவியில் நாம் அடைகின்றோம். நம் பிறவிப் பிணி தீரவும்,மீண்டும் பிறவாத வரத்தைப் பெறவும், கிடைத்தற்கரிய இப்பிறவியை நாம் பயன்படுத்தி ஈசன் அருள் பாலிக்கும் மிகப் பழைமையான அரிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு அவன் தாளினைப் பற்றிக்கொள்ளவேண்டும். இவ்விதம் நமது உய்விற்காகவே, இறைவன் அரிய நம் திருக்கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளான்.

இத்தகைய, மிகப் பழைமையான திருத்தலங்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தின் திருக்கோயில் நகரமாம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அம்மாசத்திரம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலாகும்.

சப்தரிஷிகள் வழிபட்ட தலம்!
இத்திருத்தலத்தில் சிவபெருமானையும், உமா மகேஸ்வரியையும் சப்த ரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர் மற்றும் பரத்வாஜர் ஆகியோர், பல காலங்கள் தங்கி வழிபட்டு பூஜைகள் செய்து பேறு பெற்றதால், இத்தல எம்பெருமான் ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்பட்டு வருகிறான். இங்கு, சித்தர்கள் போற்றிய செல்வனான சிவபெருமான் கருவறையில் கருணையே வடிவமாக ருத்ராட்சப் பந்தலின்கீழ் அமர்ந்து அருள்பாலிக்கும் திவ்ய திருக்காட்சி தரிசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஈசனின் அருளைப் பெறுவதற்காக மகரிஷிகளும், தவச்சீலர்களும் நீண்டகாலம் வழிபாடு, தியானம், தவம் மேற்கொண்ட புராதனமான திருத்தலங்களில் ஈசனுடைய அருளாற்றல் மிகுந்திருப்பதை அனுபவத்தில் காணமுடிகிறது. இத்தலத்திற்குச் சென்று, நாம் வழிபடும்போதே, இறைவனின் அருளாற்றலால் ஏற்படும் அதிர்வுகளை (Vibrations) நம்மால் எளிதில் உணரமுடிகின்றது. இத்தகைய தெய்வீக அனுபவம்,அம்மாசத்திரம் ஈசனைத் தரிசிக்கும்போதே நமக்கு ஏற்படுகிறது.

ஈடிணையற்ற சக்திவாய்ந்த சிவபெருமானைப் பூஜித்த சப்தரிஷிகளுக்கும் இத்திருத்தலத்தில் சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பானதாகும்.

ஸ்ரீ ஞானாம்பிகை!
ஞானத்தின் வடிவமாக விளங்கும் ஸ்ரீ ஞானேஸ்வரனின் வாம பாகத்தைப் பெற்ற அம்பிகை,இத்திருத்தலத்தில் ஞானாம்பிகை என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கின்றாள். தன்னைச் சரணடைந்த பக்தர்-களுக்கு அபயம் அளித்து,வேண்டிய வரமெல்லாம் அருளும் வரப்பிரசாதியாக, ஞானஒளி பொங்கும் திருமுகத்தில் புன்னகை மலர, கண்களில் கருணை வெள்ளமெனப் பொங்கிவர, அருட்காட்சி கொடுக்கின்றாள் அம்பிகை ஸ்ரீஞானாம்பிகை.காணக்காணத் திகட்டாத தேனினும் இனிய திவ்ய தரிசனம் இது.



செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி, ஞானாம்பிகையை வழிபட,திருமணத் தடை நீங்கும் என்பதோடு, மனம்போல மணவாழ்க்கையும் அமையும் என்பது இங்கு வழிபட்ட பக்தர்களின் ஆனந்த அனுபவமாகும். மாணவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கவும்,நினைவாற்றல் அதிகரிக்கவும் ஞாயிற்றுக்-கிழமைகளில் ஞானாம்பிகையின் திருச்சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும். அம்பிகை திருச்சந்நிதியின் வெளிப்பிராகாரத்தில் உள்ள மாடங்களில் பஞ்ச கன்னிகைகளாகிய மகேஸ்வரி,பிராமிணி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

ஸ்ரீ ஞானாம்பிகை சந்நிதியில் உள்ள மண்டபத்தில், உட்புறவிதானத்தில் (மேற்கூரையில்) 12 ராசிகள் பொறிக்கப்பட்டு இருப்பதோடு, நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் எனும் அமைப்பில் 81 கட்டங்களுடன் ‘நவக்கிரக சக்கரம்’ கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களின் தமிழ் வடிவம் இலக்கமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. எந்த வரிசைக் கட்டத்திலும் எண்களைக் கூட்டினால் 45 என்ற எண்ணிக்கை வரும். இதன் கூட்டுத்தொகை  9 ஆகும். நவக்கிரகங்கள்(9) சுழற்சியைக் குறிக்கும் வகையில், விஞ்ஞான, வானியல் பூர்வமாக உணர்த்துகின்றது இந்த அரிய  வடிவமைப்பு!



இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு நவக்கிரகங்கள் அளவற்ற நன்மைகளை அளித்தருள்கின்றனர் என்பதை இத்தலத்தின் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஸ்ரீ காலபைரவர்!
அசுரர்களின் தலைவனான இரண்யாட்சன் மகன் அந்தகாசுரனை வென்று, தேவர்களைக் காத்தருளிய சிவபெருமானின் அம்சமே ஸ்ரீ காலபைரவமூர்த்தி என்று புராணங்கள் ஸ்ரீ காலபைரவரைப் போற்றுகின்றன. பைரவர், ‘சங்கர ருத்திரர்’ என்றும் வணங்கப்படுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆணவத்தை அழித்து, ஆன்மாவைக் கடைத்தேற்றும் மூர்த்தியே பைரவ மூர்த்தமாகும். சிவத்திலிருந்து தோன்றிய காரணத்தினால் பைரவர் சிவக்குமாரர் என்றும் வணங்கப்-படுகின்றார்.சிவபெருமானின் சக்தியின் வடிவமே பைரவர் என்றும், இவரது வாகனமாக வேதங்களே நாய் வடிவில் தரிசனம் அளிப்பதாகவும் சைவ சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டுவிதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. ‘‘காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை’’ என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.

காசியைப் போலவே கோயில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.அதிலும் காசியில் உள்ளவர்களுடைய பாவங்களையும் போக்கும் சக்தி அம்மாசத்திரம் ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு உள்ளது என்று ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணம் கூறுகின்றது. இப்புராணத்தில் இத்தலம் பைரவபுரம் என்றும் பூஜிக்கப்பட்டு வந்துள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காலபைரவருக்குத் தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ ஹோமங்களும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்வதால் அமைதியின்மை, மனோ வியாதிகள், செய்வினை தோஷங்கள், இனம்புரியாத பயம், பொறாமையினால் உறவினர் தொல்லைகள், நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் (Negative effects) ஆகிய கொடிய துன்பங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும் என்று மிகப் பழைமையான ஓலைச்சுவடிகளிலிருந்து அறியமுடிகின்றது. இதன் காரணமாக, மனநிலை பாதிக்கப்பட்டோரும், தீயசக்திகளால் பீடிக்கப்பட்டவர்களும் இச்சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் வந்து வழிபாடு செய்து தங்கள் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெறுகின்றார்கள்.

மேலும், ராகு, சனி ஆகிய கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், பித்ரு தோஷங்கள் தீரவும், தொழில்,வியாபாரம் அபிவிருத்தி அடையவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால நேரத்தில்  ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன.



இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் ‘காலபைரவர் ஜெயந்தி’ மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. காலம் தாழ்த்தாது கைகொடுத்து, அருள்பாலிக்கும் இந்தக் காலபைரவர் திருச்சந்நிதியில் வழிபட்டால்,நமது கஷ்டங்கள் யாவும் தீரும் என்பது உறுதி.

தட்சிண கங்கை என்று பூஜிக்கப்படும் காவிரி நதிக்கரையின் தென்புறத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தூரத்திலும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலுக்கு மேற்கே நான்கு கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளது அம்மாசத்திரம் திருத்தலம்.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்திருத்தலத்திற்கு தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜா அவர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இத்திருத்தலம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் இராஜா ஸ்ரீ சி.பாபாஜிராஜா போன்ஸ்லே பி.ஈ., அவர்களாலும், தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் உதவி ஆணையர் / செயல் அலுவலர் திரு. எஸ். சிவாஜி, பி.எஸ்ஸி., பி.எல்., எம்.பி.ஏ., எம்.ஃபில்., அவர்களாலும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ சப்த ரிஷீஸ்வரரையும் ஸ்ரீ காலபைரவரையும் வழிபட்டு, வாழ்வில் அனைத்து தோஷங்களும் நீங்கி எல்லா நலன்களையும் பெற்று மகிழவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அற்புத சக்திவாய்ந்த இத்திருக்கோயிலைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு 9344147857 மற்றும் 0435 - 2411060 என்ற தொலைபேசி எண்கள்மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Comments