அனைத்து திருமண தடைகளையும் போக்கியருளும் அன்னை திரிபுரசுந்தரி

ருத்ரம் என்பது துக்கத்திற்குக் காரணமான செயல்களை அழிக்கும் பரமனின் திருப்பெயராகும். ‘ருத்ரம்’ என்னும் அருமந்திரம் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களில் இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை ஏழு காண்டங்களுள் நான்காவது காண்டத்தின் இதயமாக விளங்குகிறது.

ருத்ர ஜெபம் சகல பாவங்களையும் போக்கி, அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சகல சௌபாக்கியங்களையும் அளித்தருள்கிறது. நடுநாடு என்று போற்றப்படுவதும் விழுப்புரம் நகரத்தின் தென்மேற்கே 27கி.மீ. தொலைவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்னும் சிறப்பினைப் பெற்றதும், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இவர்களின் ராஜகுருவாக விளங்கிய சிவாகம சர்வ சிவபண்டிதரால் பூஜிக்கப்பட்டதும்,அம்மகான் முக்தி அடைந்த திருத்தலமாகவும்,நவக்கிரகங்களின் அருள் வழங்கும் திருவீராமேஸ்வரம் எனும் பெயரினைப் பெற்றதுமான,முழுவதும் கற்கோயிலான எசாலம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை இராமநாதீஸ்வரர் ஆலயமாகும். மிகப் பழைமையும், சக்தியும் வாய்ந்த இந்த ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் 1012-ல் தொடங்கி 1027-ம் ஆண்டு கட்டி முடிவடைந்தது என்ற இங்கு கிடைக்க பெற்ற செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயில் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ நிர்மாணிப்பதற்கு முன்பாகக் கட்டப்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாலய கோட்டங்களில் ஸ்ரீ கணபதி, தென்முகக்கடவுள், திருமால், பிரம்மா,துர்க்கை சிற்பங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. கருவறையின் நடுவே சிவலிங்கம் பிரம்மசூத்திர கோட்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அர்த்தமண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் சிற்பக்கலை நுணுக்கங்களுடன் மிக அழகாக அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தின் வாயிலில் காவலர் (துவாரபாலகர்) சிலைகள் காண்போரைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாகக் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் வடக்கில், நின்ற திருக்கோலத்தில் திருமாலைத் தரிசிக்கலாம். இப்பெருமானின் வலது திருக்கரத்தில் பிரயோக சக்கரம் காணப்படுகிறது. இதற்கடுத்த நிலையில், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்,அன்னை ஸ்ரீ திரிபுரசுந்தரி மேற்திருக்கரங்கள் இரண்டிலும் தாமரையும், கீழ் திருக்கரங்களில் அபயவரதமும், காதில் மகர குழையும் மற்றும் நான்கு திருமாங்கல்ய கைவளையல்களுடனும் மேகலை என அலங்கரிக்கப்பட்டு,பத்ம பீடத்தில் (தாமரை) எழுந்தருளியுள்ளார்.

இவ்வாறு அதிஅழகுமிக்க இவ்வாலயத்தின் வாயிலில் நந்தியெம்-பெருமானுக்கு அருகில் கல்கன்னலும், அவற்றில் ஒன்பது துவாரங்களும் அமைந்துள்ளன.ஆலயத்தின் தெற்கு கோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சிலை வடநாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு கோட்டங்களில் காணப்படும் திருமால், துர்க்கை ஆகியோரது கரங்களில் பிரயோக சக்கரம் காணப்படுவது அதிசயமாகும். அத்துடன், துர்க்கையின் இடது திருக்கரத்தில் அழகிய கிளி ஒன்றும் காணப்படுவது அற்புதமாக உள்ளது.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நன்னீராட்டு விழாவும் 16.7.95 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்தகு சிறப்புவாய்ந்த இத்திருக்கோயில் அன்னை ஸ்ரீ திரிபுரசுந்தரி அனைத்துத் திருமணத் தடைகளையும், தோஷங்களையும் போக்கி சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வது அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும்.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார தலமான விழுப்புரத்திற்கு வடமேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எசாலம் எனும் இப்புண்ணிய தலம்.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

அருள்மிகு இராமநாதீஸ்வரர் ஆலயம்,
எசாலம், விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 9894739834.

Comments