ஸ்ரீவியாச பகவான்- இந்த பூவுலகுக்குக் கிடைத்த மாபெரும் வரம், பொக்கிஷம், உபகாரம், ஆசீர்வாதம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு மகிமைகள் உண்டு இந்த வேத முனிவருக்கு. தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமான வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர் அவர்.
வேத சாரங்களை இன்னும் எளிதாக நமக்குப் புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார்; மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார். அதுமட்டுமா? வேதாந்த சித்தாந்த கண்ணாடியாக திகழும் பிரம்ம சூத்திரத்தை தந்தவரும் ஸ்ரீவியாசர்தான். இதற்கு த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆச்சார்யர்கள் பாஷ்யம் (பொழிப்புரை) அருளியிருக்கிறார்கள்.
இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தக்காரரான ஸ்ரீவியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே ஸ்ரீவியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்யவேண்டும். ஆனாலும்... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக, அதாவது இரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகிவிட்டது.
மழைக்காலத்தில் யதிகள் பாத யாத்திரையாகப் போகும்போது, பல சிறு சிறு பூச்சி வகைகள் மிதிபட நேரிடும் என்று அஞ்சி, இதைத் தவிர்க்க குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் இருந்து சாதுர்மாஸ்யம் மேற்கொள்வார்கள். அந்த தருணத்தில் சிஷ்யர்களும் பக்தர்களும் குருமார்களுக்கு சிஷ§ரு¬க்ஷ செய்வார்கள். இந்த புண்ணிய காலத்தில்... வேதாந்த கிரந்தங்கள், சாஸ்திர வாக்யர்த்தங்கள் என யதிகள் (சாதுக்கள்) தாம் தங்கியிருக்கும் இடத்தையே புனிதமாக்குவார்கள்.
இது ஸ்ரீவேத வியாசருக்கு மிக உகந்ததும் விசேஷமானதும் ஆகும். ஆனி மாதம் பௌர்ணமி அன்று ஆரம்பமாகும் இந்த விரதம். ஆக, ஆனி பௌர்ணமியை வியாச பௌர்ணமி எனப் போற்றுவர். சந்நியாசி ஒருவரின் வயது அவர் செய்த வியாச பூஜையின் எண்ணிக்கையைக் கொண்டே கணக்கிடப்படும்.
விரத பூஜை துவங்கும் நாளன்று, புனிதமான கலச தீர்த்தத்தில் ஸ்ரீவேதவியாசர் ஆவாஹனம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுவார். அன்று அவருடன் சேர்த்து ஆறு வகையான மூல புருஷர்கள் கொண்ட பஞ்சகங்கள்... அதாவது ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீவியாச, ஸ்ரீசங்கர பகவத் பாத, ஸ்ரீசனக, திராவிட மற்றும் குரு பஞ்சகமும்... அத்துடன் ஸ்ரீசுகர், ஸ்ரீநாரதர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகணபதி, க்ஷேத்திர பாலகர்கள், ஸ்ரீசரஸ்வதி மற்றும் இந்திரன் முதலான தச திக்பாலகர்கள் எல்லாம் எலுமிச்சை பழத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பதுடன், கடைசியாக 10 சுத்த சைதன்யர்கள் பூஜை செய்து (சாளக்ராமத்தில்) நிறைவு செய்வார்கள். பின்னர் புனர்பூஜை செய்து அவர்களிடம் வியாச பூஜை அக்ஷதையைப் பெற்றுக்கொண்டால், நமது பாவங்கள் யாவும் விலகி, நல்வாழ்வு வாழ அனுக்கிரஹம் கிடைக்கும்.
இந்த வருடம் ஜூலை- 3 (ஆனி மாதம் 19-ஆம் நாள்), செவ்வாய்க்கிழமை வியாச பூஜை வருகிறது. புனிதமான அந்தத் திருநாளில் எல்லோரும் ஸ்ரீகுருவருளையும், லோக குரு ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளையும் ஸ்ரீவேத வியாசரின் ஆசியையும் பெற்று, எல்லா விதமான சுபிட்சத்தையும் பெற்றுச் சிறக்க பிரார்த்திக்கிறேன். அன்னை காமாட்சி அருள்புரிவாள்.
'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’
'வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே’
'வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே’
Comments
Post a Comment