வேள்விமங்கலம் திருக்கோயில்!

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்புவரை தெய்வீகப் பொலிவுடனும், சக்தியுடனும் திகழ்ந்தன நமது கிராமத் திருக்கோயில்கள்! ஆனால், தற்போது அவற்றில் பல கேட்பாரற்ற  அவலநிலையில் உள்ளன. இதற்குக் காரணம், விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த கிராம மக்களுக்கு, அத்தொழில் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பெருமளவில் பயன்படாத  காரணத்தால், பிழைப்புத் தேடி நகரங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டதே ஆகும்.
ஆதரிப்பார் யாருமில்லாத காரணத்தால் வேத மந்திரங்கள் ஓதும் வேத விற்பன்னர்களும் குறைந்துகொண்டே வரும் நிலையும் உருவாகியுள்ளது இன்றைய தமிழகத்தில்!  நமது சிவாச்சாரியார்களும், வைணவ அர்ச்சகர்களும் வறுமையில் வாடி, வதங்கி வருகின்றனர்.

வேள்விமங்கலம் திருக்கோயில்!
இவ்விதம், கவனிப்பாரின்றிக் கிடக்கும் பழைமையும், பெருமையும், தெய்வீக சக்தியும் வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றுதான், வேள்விமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் தி ருக்கோயில்! இத்திருத்தலம், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில், துங்கபுரம் வழியில் அமைந்துள்ளது.

திருக்கோயில் பழைமை!
வேள்விமங்கலம் ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் சீர்குலைந்த நிலையிலும்கூட, அதன் ஈர்ப்பு சக்தி இன்றும் குறையாமல் உள்ளது. சோழ  மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் இத்திருத்தலத்தில் காணப்படுகின்றன. பின்னர் இப்பகுதி, சோழப் பேரரசின்கீழ் குறுநில மன்னர்களாக இருந்த  அரியலூர் மழவராயர்களின் ஆட்சியின்கீழ் இருந்து வந்தது. மூலவர் ஸ்ரீகைலாசநாதரின் திருச்சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ காமாட்சி. திருக்கோயில் வெளிச்சுற்றில் தெற்கே கோஷ்டத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுந்தருளி, அருள்பாலிக்கிறார். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகருக்குத் தனித்தனி சந் நிதிகள் அமைந்துள்ளன.

திருக்கோயில் திருப்பணிகள்!
நாம் வேண்டும் வரங்களைத் தந்து, நமது துன்பங்களைப் போக்கியருளும் பெருமான் இத்தல ஸ்ரீ கைலாசநாதப் பெருமான். தற்போது இத்திருக்கோயில் மிகவும்  சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனைக் கண்ணுற்ற நல்மனம் படைத்த பெருமக்களும், இவ்வூர் ஏழை விவசாயப் பெருமக்களும் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி,  திருப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களுக்குக் கிடைத்த பொருளுதவியைக் கொண்டு ஓரளவு திருப்பணிகள் செய்துள்ளனர், இதுவரை.

தற்போது மூலவர் சந்நிதி முன்மண்டபம், கோயிலின் பொருட்கள் வைப்பதற்கு அறை, அருள்மிகு சண்டிகேஸ்வரர் சந்நிதி கோபுரம், மற்ற சந்நிதிகளின் கோபுரங்களின்  மீதிப் பணிகளையும் முடிப்பதற்கு குறைந்தபட்சம் 15 லட்ச ரூபாய் தேவைப்படுவதாகத் திருக்கோயில் அறக்கட்டளைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆன்மிக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து, பெறற்கரிய இறைவனின் திருவருளைப்  பெற்று மகிழ்வான வாழ்வு பெற்றுத் திகழுமாறு வேண்டுகிறோம். ‘அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேவா டிரஸ்ட், வேள்விமங்கலம்’ என்ற பெயரில் வரை வோலையாகவோ அல்லது காசோலையாகவோ எடுத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பும்படி வேண்டுகிறோம்.

திரு. ஏ. முல்லைநாதன், பொருளாளர்,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேவா டிரஸ்ட்,
16, அன்னை நகர் முதல் தெரு,
புகளூர் SFPO,
கரூர் மாவட்டம் - 639 113.
தொலைபேசி எண் : 8428591265

Comments