மயன் தயங்கிய பணியை மானிடர்கள் செய்த விந்தை

னிதப் பிறவி எடுத்த நாம் ஒவ்வொரு நாளையும் கடக்கும்போது, நம்முடைய வாழ்நாளில் ஒரு நாளை இழந்துவிடுகிறோம்.காலம் வேகமாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.புனிதமான இந்த மனிதப் பிறவி என்பது நமக்கு மீண்டும் கிடைக்கலாம்; அல்லது கிடைக்காமலும் போகலாம். காலம் என்னும் தத்துவத்தைக் கடந்து நிற்கும் எம்பெருமான் நமக்கு அளித்த இப்பிறவியைப் பயனுடையதாக மாற்றி,நாம் வாழ்ந்து காட்டவேண்டியது நம் அனைவருடைய கடமையுமாகும்.
அரிதாகக் கிடைத்த இம்மானுடப் பிறவியை வீணாக்கிவிடாமல், பேரின்பம் அளிக்கக்கூடிய வழிகளில் நம் மனத்தைச் செலுத்த நமது ஆன்மாவை இறை பணிகளினால் பதப்படுத்த வேண்டும்.இதனால், மனிதப் பிறவி புனிதப் பிறவியாகிவிடுகிறது. இஷ்டம், பூர்த்தம் என்று இரண்டு நல்ல கடமைகளை நமது மகரிஷிகள் நமக்கு அருளியுள்ளனர். அக்னிஹோத்ரம், தவம், வேத அத்யயனம், வைச்வதேவம் ஆகிய கடமைகள் ‘இஷ்டம்’ ஆகும். ‘பூர்த்தம்’ என்பது மரங்கள் நடுதல், குளம் வெட்டுதல், மிகப் பழைமையான திருக்கோயில்களைப் புனரமைத்தல், அன்னதானம் செய்தல் ஆகிய பணிகளாகும்.இதில் இரண்டாவதாகக் கூறப்பட்ட செயல்கள் சாதாரண மனிதர்கள்கூட எளிதாக நிறைவேற்றக்கூடிய மகத்தான புண்ணிய காரியங்கள் ஆகும்.

இதனால்தான், புண்ணிய பூமியான பாரதத் திருநாட்டில் பிறக்கும் பேறு பெற்ற அனைவரும்,அளவற்ற புண்ணிய பலனை அளிக்கும் மிகப் பழைமையான திருக்கோயில்களின் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.புராதனமான திருக்கோயில்களின் புனர்நிர்மாணத்திற்கு ஒரு பிடி மணல் கொடுத்தாலும்,ஒரே ஒரு செங்கல்லைச் சமர்ப்பித்தாலும்,ஓர் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைப் பெற்று மகிழ்வார்கள் எனத் திருக்கோயில் ஆகம, சிற்ப சாஸ்திரங்களும், கருட புராணமும், ஸ்ரீ விஷ்ணு புராணமும் கூறுகின்றன.

மாமன்னர்கள் மட்டுமே செய்யக்கூடிய அஸ்வமேத யாகத்தின் பலனை, சாதாரண, எளிய மக்கள், திருக்கோயில் சீரமைப்பிற்கு, ஒரு பிடி மணல் கொடுப்பதனாலேயே பெற்று விடுகிறார்கள் என்றால்,திருப்பணியின் சக்தியை மேலும் விளக்கவேண்டிய அவசியமில்லை.

இவ்விதம், தமிழக மக்களின் அன்பும், பக்தியும் இணைந்த நன்கொடை-களினால் மீண்டும் புத்தொளி வீசிப் பிரகாசிக்கிறது,ஒரு காலத்தில் மிகவும் பிரபல க்ஷேத்திரமாகத் திகழ்ந்த மிகப் பழைமையான முன்னூர் ஸ்ரீஅருளாளப் பெருமாள் திருக்கோயிலாகும்.

அடியவர்க்கு மெய்யனான அருளாளப் பெருமான்!
பக்தி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்த அன்பர்கள், இறைவனது நாமங்களையும் அவன் புகழ்பாடும் நாமாவளிகளையும் உச்சரித்து உயர்வு பெற்று வருகின்றார்கள். இந்த உலகத்தில் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும் அவையெல்லாம் நிலையல்ல என்பதையும்,என்றுமே நீங்காமல் நம்முடன் நிலைத்து நிற்பது எம்பெருமான் மீது கொண்ட தூய பக்தியினால் பெறுகின்ற அவன் அருள் ஒன்றே என்பதையும் உணர்ந்த அன்பர்கள், அடியவர்க்கு மெய்யனும் அமரற்கரிய ஆதிபிரான் ஆகிய அருளாளப் பெருமான் திருக்கோயில் புனரமைப்பிற்கு மனமுவந்து ஏராளமான உதவிகளைச் செய்தார்கள்.

அறம் வளர்க்கும் அந்தணர்கள் ஒருகாலத்தில் திருக்கோயிலைச் சுற்றிக் குடியிருக்க,எப்போதும் யாக குண்டத்தில் வேத முழக்கங்களுடன் வேள்வித் தீ கொழுந்து விட்டெரிய மகரிஷிகள் பர்ணசாலை அமைத்து வழிபட்ட ‘தாருகாவனம்’ என்று பூஜிக்கப்பட்ட இத்தலத்தில்,உலகம் உண்ட அமுதன் அருளாளனின் திருக்கோயில் புதுப்பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு மனம் ஆனந்தத்தில் பரவசமடை கின்றது. தமிழகத்தில் மட்டு மல்லாது உலகின் பல பகுதிகளில் வசித்து வரும் நம் தாய்த்திருநாட்டைச் சார்ந்த அன்பர்கள் இத்திருக்கோயிலின் திருப்பணிக்கு உதவியதால்,புராதனப் பெருமையும், பழைமையும் கொண்ட இத்திருக்கோயில் முற்றிலும் சிதைந்த நிலையிலிருந்து, அதன் பண்டைய பொலிவு மாறாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

புதிய திருக்கோயில் ஒன்றை நிர்மாணிப்பதைவிடக் கடினமானது, சிற்பக்கலையில், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் திகழ்ந்து, காலத்தின் கொடுமையினால் சிதிலமடைந்த திருக்கோயிலை அதன் அசல் பொலிவு குன்றாமல் சீர் செய்வது. அதற்காக வீடுதோறும் சென்று கரம்  குவித்துக் கேட்டபோது உளம் குளிர்ந்து மனமகிழ்வுடன் உதவிய தமிழக மக்களுக்கு முன்னூர் பேரருளாளன் குறைவைக்க மாட்டான். எம்மால் என்ன கைம்மாறு செய்யமுடியும் இத்தகைய பேரன்பிற்கு?

துவஜஸ்தம்ப (கொடி மரம்) பிரதிஷ்டை!
அற்புத அழகுடன் கூடிய இத்திருக்கோயில் புனர்நிர்மாணப் பணியினரின் அடுத்த பிரச்சினை, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) சமர்ப்பித்தல்!

அதற்காகக் கொடிமரம் தேடி அலைந்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரம் என்று மாநிலம்,மாநிலமாகத் தேடித் தேடித் தகுந்த கொடிமரம் கிடைக்காமல், மனம் தளர்ந்த நிலையில், பெயர் வெளியிட விரும்பாத சில பக்தர்கள் இக்கைங்கர்யத்தை ஏற்றனர். எங்கெங்கெல்லாமா அலைந்து, அலைந்து எப்படியோ 36 அடி உயரமான கொடி மரத்தை விலைக்கு வாங்கிச் சமர்ப்பித்துவிட்டனர். கவலையும் நீங்கியது.

எம்பெருமானின் திருவுள்ளத்தால் சென்ற 23.12.10 அன்று திருக்கோயிலின் 36 அடி உயர துவஜஸ்தம்ப (கொடி மரம்) பிரதிஷ்டை வைபவம் இனிதே நடைபெற்றது. இவ்வைபவத்தின்போது பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் இத்திருத்தலத்தின் எளிய மக்களுக்கு ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.மதுராவில் மாலவன் பிறந்தபோது மகிழ்ச்சிக் கடலில்  மூழ்கிய ஆயர்பாடி மக்களைப் போல,மண்ணளந்த பெருமானின் திருக்கோயில் துவஜஸ்தம்பம் விண்ணளந்து நிற்பதைக் கண்டு அனைவரது விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பிரவகித்து ஓடியது.

புனிதமான இப்பிரதிஷ்டை வைபவம் நடந்து கொண்டிருக்கும்போது வானவெளியில் சூரியனைச் சுற்றி வானவில் வடிவத்தில் உண்டான அரைவட்டம் பக்தர்கள் கண்ட மற்றுமொரு சிலிர்ப்பான காட்சியாகும். தாருகாவனத்தில் வாசம் செய்த மகரிஷிகளுக்கு இத்தல எம்பெருமான் சூரிய மண்டலத்திலிருந்து சூர்யோதயத்தின்போது கோடி சூரியப் பிரகாசனாகக் காட்சி கொடுத்தார் என்பது தலபுராணமாகும். மகரிஷிகள் பெற்ற அந்த மாபெரும் பாக்கியம் இப்புனித நன்னாளில் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஆம்! பண்வாய் இடைச்சியர்க்கு தனது குமுதவாயால் குவலயம் காட்டியருளிய கண்ணன், வானவெளியில் சூரிய பிரபையில் காட்சி கொடுத்ததாகவே எண்ணி அனைவரும் மெய்சிலிர்த்தனர். துவாரகை மற்றும் முக்திநாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராம மூர்த்தங்களும் சக்திவாய்ந்த யந்திரங்களும் துவஜஸ்தம்பத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிறப்பான நிகழ்வாகும்.

திருப்பணியின்போது மண்ணிலிருந்து தோன்றிய ஸ்ரீ மாலோலன்!
புனரமைப்புப் பணிகளின்போது திருக்கோயில் வளாகத்தில் புதைந்து கிடந்த கற்களை தோண்டியபோது ஸ்ரீயோகநரசிம்மரின் அழகிய திருமேனி ஒன்றும் கிடைத்ததை முன்பே ‘குமுதம் ஜோதிட’த்தில் குறிப்பிட்டிருந்தது,வாசக அன்பர்களுக்கு நினைவிருக்கும்.ஸ்ரீ யோகநரசிம்மர் இவ்விதம் வெளிப்பட்டு தன் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த தினம்,வேளை அவரது திருஅவதார நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத் திருநாளின் பிரதோஷ வேளை 19.1.2009 தைத் திங்கள் 9-ம் நாளாக அமைந்திருந்ததை நினைக்கும்போது பிரகலாத வரதனின் திருவுள்ளத்தை நினைத்து பக்திப் பெருக்கால் ஆச்சரியம் மேலிட்டது. ஆம்!ஆராவமுதனான அருளாளப் பெருமானின் திருக்கோயிலில் தனக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு நித்ய பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அழகிய சிங்கம், தனது திருவுள்ளத்தில் முடிவு செய்துவிட்டான். கொண்டல் வண்ண மேனியனின் அழகில் சொர்க்கத்தையே கண்டு மகிழ்ந்த கோதை நாச்சியாரைப் போல அழகியசிங்கத்தின் அழகில் ஊர் மக்கள் மெய்சிலிர்த்து நின்றனர். அத்தனை அழகு அப்பெருமான்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி கைத்தலம் பற்றக் கனாக் கண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியாருக்கும் அழகிய தனிச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

அருளாளப் பெருமானின் அருள்பொங்கும் தரிசனம்!
முன்னூர் திருக்கோயிலில் ஸ்ரீ அருளாளப் பெருமான் பத்ம பீடத்தின் மேலுள்ள தாமரை பீடத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார்.பெருமானின் சிரஸில் அழகான மணிமகுடம் பொலிவு பெற்று மிளிர்கிறது.‘‘உன் திருமுகத்து ஒளிதான் மணிமகுடத்தில் வீசுகின்றதோ? உன் திருவடியின் ஒளிதான் தாமரையாய் மலர்கின்றதோ?’’ என்ற நம்மாழ்வாரின் நெஞ்சம் நெகிழ்ந்த கூற்றினைப் போல ஸ்ரீ அருளாளப் பெருமானின் அருள்பொங்கும் திருமுக தரிசனம் ஆனந்த அனுபவமாகும்.

இத்திருக்கோயிலில் மிகவும் பழைமையான எட்டு கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன. இவை சோழ, பல்லவ மற்றும் கிருஷ்ண தேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எம்பெருமான், புருஷோத்தம பெருமான், சித்திரமேழி விண்ணகர் எம்பெருமான் என்ற திருநாமங்களோடும் பூஜிக்கப்பட்டு வந்ததைக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது. வீரநாராயணபுரம், புருஷோத்தம நல்லூர், ராஜநாராயண சதுர்வேதி மங்கலம், திரிசதபுரம் என்னும் பல பெயர்களில் இத்தலம் குறிப்பிடப்பட்டு வந்துள்ளதையும் இக்கல்-வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது!

பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு புருஷோத்தமபுரி என்று ஒரு திருநாமம் உண்டு. ஒரிஸ்ஸாவை ஆண்ட கஜபதி வம்ச மன்னர்களுக்கு முன்னூர் திருத்தலம் அபிமான ஸ்தலமாக விளங்கியதைக் கல்வெட்டுகள் தெரிவிப்பதால் இத்தலத்திற்கு புருஷோத்தம நல்லூர் என்ற திருப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும்,சித்திரமேழி விண்ணகர் எம்பெருமான் என்ற திருநாமத்தோடு இத்தல எம்பெருமான் பூஜிக்கப்பட்டதால் பராந்தக சோழன் காலத்திற்கு முந்தைய பழைமையான திருத்தலம் இது என்றும் டாக்டர் உ.வே.அனந்த பத்மநாபாச்சாரியார் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

நின்ற கோலத்தில் மகாலட்சுமித் தாயார்!
பொதுவாக வைணவத் திருத்தலங்களில் மகாலட்சுமித் தாயார் வீறறிருந்த திருக்கோலத்தில்தான் தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.  இத்தலத்தில் மகாலட்சுமித்  தாயார் வைஷ்ணவி தேவியாக நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பான ஓர் அம்சமாகும். இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கை வரத ஹஸ்தத்துடன் இடதுகையை மிக அழகாக இடையில் வைத்து ஆறடி திருக்கோலத்தில் முகத்தில் பொங்கிப் பெருகும் கருணையுடனும் இதழோரம் குமிண் சிரிப்புடனும் சௌந்தர்யமாகக் காட்சி தருகின்றாள் அன்னை.

மஹா சம்ப்ரோக்ஷணம்!
வேத, இதிகாச, புராண காலத்திலிருந்து பல மகரிஷிகள் தவம் செய்த ‘தாருகாவனம்’ என்று நான்மறைகள் போற்றும் மிகப் புராதனமான முன்னூர் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அருளாளப் பெருமான், ஸ்ரீபெருந்தேவித் தாயார், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீவைஷ்ணவிதேவி, ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார் சந்நிதிகள் மண்டபம், பிராகாரங்கள் புதுப்பிக்கப்பட்டு நாளது விக்ருதி வருடம் தை மாதம் 10-ம் தேதி (24.1.2011) திங்கட்கிழமை உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணியிலிருந்து 10.30மணிக்குள் மீன லக்கினத்தில் ‘இஞ்சிமேடு யக்ஞவேதிகை’ ஸ்ரீ பாஞ்சராத்ர ஸர்வ ஸாதகர் ஸ்ரீ ஈ.என். வரதராஜன் (எ) பாலாஜி பட்டர் அவர்கள் யாகசாலை பிரதான ஆத்யக்ஷத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) சிறப்பாக நடைபெற உள்ளது.

அன்று மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவமும், இரவு 8.00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறவுள்ளன. திருமாலையும், திருமகளையும் சம்ப்ரோக்ஷண நன்னாளில் ஒருசேர தரிசிப்பவருக்கும், சம்ப்ரோக்ஷண வைபவத்தைக் காண்பவருக்கும் தீவினைகள் சேராது என்பதோடு, நல்வினைகள் அவர்களை நாடிவந்து சேரும் என்பதும் ஆன்றோர் வாக்காகும்.

கேட்கக் கேட்க திகட்டாத திவ்யநாமம்!
தினமும் ஒரு திவ்யநாமமாக நான்மறைகள் போற்றும் நாராயணனின் புகழ்பாடுபவரும்,அஞ்சன வண்ணன் ஆயர்பெருமான் கண்ணனின் அவதாரப் பெருமைகளை அன்பர்களுக்கு மனம் உருக எடுத்துக்கூறி தமிழக மக்களின் இதயக் கமலத்தில் நீங்காத இடம் பிடித்தவருமான டாக்டர் ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபாச்சாரியார் ஸ்வாமிகள் இச்சிறப்பான வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்.

என்று வரும் அந்த நாள் என்று மக்கள் ஏங்கித் தவித்திருந்த முன்னூர் பெருமானின் மஹா சம்ப்ரோக்ஷண வைபவம் அவன் அருளாலேயே வேத கோஷங்கள் முழங்க,சீரோடும் சிறப்போடும் நடைபெறவுள்ளது. அரிய இவ்வைபவத்தில் தமிழக மக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூமகள் காந்தனின் அனுக்ரஹத்தைப் பெற்று உயர்வடைய வேண்டும் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறோம்.

சம்ப்ரோக்ஷண வைபவம், யாகசாலை, அன்னதானம் மற்றும் திருப்பணி கைங்கர்யங்களுக்கு மக்களின் உதவி தேவைப்படுகிறது. பங்கு பெற விரும்பும் அன்பர்கள் தங்களது நன்கொடைகளை காசோலை, வரைவோலை (மற்றும் பணவிடை) மூலம் ‘Munnur sree arulala perumal seva trust’ என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்து எம்பெருமானின் திருவருளால் கிட்டும் இம்மாபெரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, தாங்களும், தங்கள் வருங்கால சந்ததியினரும் அளவற்ற புண்ணியப் பலன்களைப் பெறவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

Munnur Sree Arulala Perumal Seva Trust,
No.7, Kumaran Nagar,
Kilkattalai, Chennai117.
Bank A/c. No: 13700 143 784, Dhanalakshmi Bank,
T. Nagar Branch.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

9884554053, 9444024751, 9444125996, 9444103813, 044-22470545.
Website :
www.munnurtemples.in

திருத்தலம் செல்லும் வழி :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பம் என்ற ஊரிலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது முன்னூர் திருத்தலம்.

Comments