மகா பெரியவரின் மனம் கவர்ந்த மகேந்திரமங்கலம்


பாரதம் புண்ணியபூமி! இதுவொரு தர்மபூமி! அதிலும் தமிழகம் மகத்தான தெய்வீக புண்ணியபூமி! செல்லும் இடங்களில் எல்லாம் அழகான திருக்கோயில்கள்; புனித தீர்த்தங்கள். அருளாளர்களின் திருவடி ஸ்பரிசம் பதிந்த பரமபவித்திரமான திருத்தலங்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தரிசித்து, பரமானந்தமடைந்து அற்புதமான பாசுரங்களினாலும்,  தேவாரப்  பாடல்-களினாலும் பாடி, ஆடி இறைவனுடன் தங்கள் சிந்தனையில் ஒன்றிவிட்ட ஏராளமான திவ்ய திருக்கோயில்கள் எனப் பக்திச் சுடர் விட்டு ஒளிவீசிப் பிரகாசிக்கும் ஆலயங்களை நினைத்தாலே மனிதப் பிறவியின் பயன் நிறைவேறிவிடும்.

இத்தகைய மிகப் புராதனமான,அற்புதமான திருத்தலங்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் தெய்வீக சுடரொளி வீசிப் பிரகாசிக்கும் மகேந்திரமங்கலம் என்னும் திருத்தலம். ‘கங்கையின் புனிதமாய காவிரி’ என மகான்களால் பூஜிக்கப்படும் காவிரி நதியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது மகேந்திரமங்கலம்.

அக்காலத்தில் காவிரியின் தென்கரையிலுள்ள லாலாபேட்டை என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அகண்டகாவிரியைப் பரிசலில் கடந்துதான் செல்ல வேண்டும். மிகவும் அமைதியான அந்தச் சிற்றூரில் விளங்குகிறது சக்தி வாய்ந்த ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்ட அழகான திருக்கோயில் அது. மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1708) அன்னதான கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, அதற்கான பூமிதானமும் செய்துள்ளார்.அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்,அலாவுதீன்கில்ஜி என்ற தில்லி சுல்தானின் தளபதியான மாலிக்காபூரின் இரண்டாவது தட்சிண படையெடுப்பின்போது  அழிக்கப்பட்டது. பல பெரியோர்கள் ஊரைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

இருப்பினும் மகேந்திரமங்கலம் அதன் புராதனப் பொலிவையும், தெய்வீகத்தையும் இழக்கவில்லை.இறைவனின் திருவுள்ளத்தை எவரால்தான் அறிந்துகொள்ள முடியும்? மகேந்திரமங்கலத்தில் எழுந்தருளியிருக்-கும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரப் பெருமானும் தனது திருவுள்ளம் உகந்தான் போலும்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமென உலகமனைத்தினராலும் பூஜிக்கப்படும் காஞ்சி மகா பெரியவர் 20.5.1894 ஞாயிற்றுக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம் கூடிய புண்ணிய தினத்தில் விழுப்புரத்தில் திருஅவதாரம் செய்தருளினார்.எப்பிறவியில் என்ன புண்ணியம் செய்தனரோ என்று உலகமே வியக்கும்படி விழுப்புரத்தில் அக்கிரஹாரத்தில் வசித்து வந்த ஆசார, அனுஷ்டானங்களினால் உயர்ந்த பிரும்மஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்ற அந்தணப் பெரியவருக்கும் அவரது தர்மபத்தினி ஸ்ரீமகாலட்சுமி அம்மையாருக்கும் தங்களது இரண்டாவது குமாரராக இத்தெய்வீக புண்ணிய புருஷரை உலகுக்களிக்கும் பேறு பெற்றனர்.

உத்தம தம்பதியருக்குத் தவப்புதல்வராக அவதரித்த இக்குழந்தையின் 13-வது வயதில் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக ஆஸ்ரம ஸ்வீகாரம் மூலம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி என தாஸ்ய நாமத்தை ஏற்றார். அந்த இளம் வயதில் எவ்வித தயக்கமும் இல்லாமல் துறவற வாழ்க்கையை ஏற்ற ஸ்வாமிகள், தண்டம், கமண்டலம், காஷாயம் ஆகியவற்றுடன் சாட்சாத் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரே நேரில் எழுந்தருளிவிட்டதைப் போன்று அவரது சன்னியாச திருக்கோலத்தில் தேஜோமயமாய் காட்சியளித்தார்.

மகேந்திரமங்கலத்திற்கு விஜயம்!
சன்னியாசம் ஏற்று ஏழு ஆண்டுகள் ஸ்ரீ மடத்தில் பல பிரசித்திபெற்ற பண்டிதர்களிடமும் வித்வான்களிடமும்,பலவித பயிற்சிகளையும் பாடங்களையும் கற்றார்.அந்த இளம்வயதிலிருந்தே அவருக்கு குருவாக இருந்து மிகக் கடினமான விஷயங்களை உபதேசித்த பண்டிதர்கள் அனைவருமே இவரது மேதாவிலாசத்தைக் கண்டு வியந்தனர்.

இத்தருணத்தில்தான் மடத்திற்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்ததால் அவரது வித்யாப்யாசத்திற்கு ஓர் ஏகாந்தமான இடத்தை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இத்தகைய தேவைக்கு இயற்கை அழகும்,தெய்வீகப் பொலிவும், அமைதியும் நிறைந்த இடமாக மகேந்திரமங்கலம் விளங்கியதால் அந்தக் கிராமத்தையே பெரியவர்கள் தேர்ந்தெடுத்தனர்.ஸ்வாமிகள் ஏகாந்தமாகத் தியானம் செய்வதற்கும்,கல்வி கற்பதற்கும் ஒரு சிறு பர்ணசாலையை காவிரிக்-கரையில் நீர்நிலையின் அருகாமையிலேயே நிர்மாணித்துத் தந்தனர்.



கி.பி.1911-ம் ஆண்டு ஸ்வாமிகள் மகேந்திரமங்கலத்திற்குப் புறப்பட்டார்கள். வழியில் லால்குடி என்ற ஊரில் தங்கி அங்கு ஒரு சங்கராலயத்தையும், குருகுலத்தையும் நிறுவினார்கள்.

மகேந்திரமங்கலத்தின் தெய்வீக சூழ்நிலையும், அமைதியும், இயற்கைப் பொலிவும் ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.பல நாட்கள் காவிரியின் மணல் திட்டில் அமர்ந்து தியானம் செய்வதில் அளவற்ற மனநிம்மதியை பெற்றார்.

யார் குரு...!
இளம் வயதிலேயே இம்மகான் ஓர் அவதாரபுருஷர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். பொதுவாக உலக வழக்கின்படி கல்வி பயிலும் மாணவர்கள் பாடம் சொல்லிக்கொடுக்கும் தங்கள் ஆச்சார்யர்களை குருவாகப் போற்றி வணங்குவது வழக்கம்.ஆனால் மகேந்திர மங்கலத்திலோ ஸ்வாமிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த பண்டிதர்களும், வித்வான்களும் அவரை குருவாகக் கருதி வணங்குவது வழக்கமாக இருந்து வந்தது.இருப்பினும் இம்மகானோ சிறிதளவும் கர்வம் இல்லாமல், தனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பண்டிதர்களைத் தன் குருவாகவே ஏற்று பக்தி,மரியாதை, வினயம் ஆகியவற்றுடன் அவர்களை வணங்கி வந்தார்.

குருவிடம் மாணாக்கன் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக தானே நடந்துக் காட்டினார் இம்மகான்.தினமும் காவிரியில் நீராடியபின், அங்கு சிறு சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரைத் தரிசித்தபின்தான் அன்றாட பணியைத் தொடங்குவது அம்மகானது வழக்கம்.

ஸ்ரீஸ்வாமிகள் 1911-ம் ஆண்டு முதல் 1914-ம் ஆண்டு வரையில் மகேந்திரமங்கலத்தில் தங்கியிருந்து சர்வ சாஸ்திர பண்டிதராய் கும்பகோணம் திரும்பினார்கள்.பல துறைகளிலும் அறியவேண்டியவற்றை நன்கு கற்றுத் தெளிந்து சகலகலாவல்லவராக குடந்தைக்குத் திரும்பினார் அளவற்ற தேஜஸ்ஸுடன்.

இவ்விதம் எதிர்காலத்தில் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாகத் திகழப்போகும் மகானின் திருவடி ஸ்பரிசம் பட்டும் மகேந்திரமங்கலம் மகத்தான புண்ணிய பூமியாக மாறியது.

இருப்பினும், பல நூற்றாண்டுகள் கடந்தும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரின் திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப்படாமலேயே இருந்து வந்தது.மிகப் பழைமையான இத்திருக்கோயிலின் நிலை கண்டு பக்தர்கள் மனம் வருந்தினர். ஒரு காலத்தில் அழகான ராஜகோபுரத்துடன் விளங்கிய இத்திருக்கோயிலை மீண்டும் அதன் புராதனப் பொலிவுடன் புனர்நிர்மாணம் செய்வதற்காக ஸ்ரீ காமகோடி சேவா சமிதி டிரஸ்ட் (Regd) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பிரசித்திபெற்ற ஸ்தபதி திரு.சுப்பையா ஸ்தபதி அவர்கள் இப்புனர் நிர்மாணப் பொறுப்பில் தன்னையும் அன்புடன் இணைத்துக்-கொண்டிருப்பது மனதில் அளவற்ற மனநிறைவைத் தருகிறது.

இத்திருக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிய வருகிறது. இங்குள்ள ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் திருவுருவம் காஞ்சி ஸ்ரீ மகாப்பெரியவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திருத்தலத்தில் கோயிலையொட்டி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிக்கரையில் இம்மகான் தினமும் சந்தியாவந்தனம் செய்துவந்த காரணத்தால், இது சந்தியாவந்தன கட்டம் என்று பிரசித்திபெற்றது. இத்தலத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் பீடாதிபதியான பிறகு, மூன்றாண்டுகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கு வந்து மேற்கொண்டு திருவுள்ளம் மகிழ்ந்தார் காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்.



அன்னியர்களின் படையெடுப்பின்போது இத்திருக்கோயில் முழுமையாகச் சிதைக்கப்பட்டது. அப்போது ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகை திருமேனிகள் அரும்பாடுபட்டு பல பெரியோர்களின் தியாகத்தினால் பாதுகாக்கப்பட்டன.அழகான ராஜகோபுரத்துடன், அற்புதமான மிகப்பெரிய விமானத்துடன் தெய்வீகப் பொலிவுடன் ஒளிவீசித் திகழ்ந்த இத்திருக்கோயில் அழிக்கப்பட்டு, இன்று ஸ்வாமியும், அம்பிகையும் ஒரு கீற்றுக்கொட்டகையில் இருந்து வருவதைப் பார்க்கும்போது கண்களிலிருந்து உதிரம் பெருகுகிறது. எதற்கும் ஒரு காலம் வரவேண்டும் அல்லவா? அதற்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருவுள்ளத்தில் படவேண்டுமல்லவா? அதற்குத் தற்போதுதான் காலம் கனிந்துள்ளது போலும்!



ஸ்ரீ மகா பெரியவரிடம் மகத்தான பக்திகொண்ட திரு. ஒய். பிரபு அவர்களை நிர்வாக அறங்காவலராகக் (Managing Trustee) கொண்டு,ஸ்ரீ காமகோடி சேவா சமிதி டிரஸ்ட் இத்திருப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்யாவசிய கட்டுமானப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், நமக்கு உதவி செய்ய எவரும் இல்லாததாலும்,பக்தர்களின் உதவி,ஆதரவு கொண்டுதான் நமது தெய்வீக ஆசைகளை நிறைவேற்றிக்-கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால், வசதியும், பக்தியுள்ளமும் கொண்ட அன்பர்கள் தங்கள் வசதிக்குட்பட்டு உதவும்படி பணிவன்புடன் வேண்டு-கிறோம்.

பல தடவைகள் நாங்கள் விளக்கியுள்ளதுபோல், பக்தியுடன் திருக்கோயில் புனர்நிர்மாணத்திற்கு அளிக்கப்படும் ஒரேயொரு ரூபாயானாலும் அதனை ஒரு கோடி ரூபாயாக ஏற்றுத் திருவுள்ளம் மகிழ்வான் அம்பிகைபாகனான அப்பேரருளாளன். மகா பெரியவாளின் திவ்ய திருவடி ஸ்பரிசம் பட்ட இடம் திருக்கயிலைக்குச் சமமாகும்.

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளும்படி வேண்டுகிறோம்.

முகவரி :திரு. ஒய். பிரபு,
மானேஜிங் டிரஸ்டி,
ஸ்ரீ காமகோடி சேவா சமிதி டிரஸ்ட் (Regd)
எண். 17 கி, சீதம்மா ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

போன் :  9003012311  / 044-65298363 / 044-24359202
குறிப்பு :
திருச்சியிலருந்து தொட்டியம் சென்று,அங்கிருந்து முசிறி செல்லும் வழியில் சென்றால் மகேந்திரமங்கலம் திருத்தலத்தை அடையலாம்.

Comments