சிந்தையை நிறைக்கும் சிவ தரிசனம்

ம்பாள் கிரியா சக்தி, சிவன் ஞான சக்தி. இருவரும் இணைந்த வடிவமே லிங்க வடிவம்.
பொதுவாக சிவாலயங்களில் பெருமான் பலவகையான பெயர்களில் அழைக்கப்படுவார். அப்படி அழைக்கப்படும் பெயர்கள் அத்தலத்து தல புராணத்தை ஒட்டிய பெயர்களாக இருப்பது அபூர்வம்.

இங்கே தல புராணம் காரணமாக பெயர் பெற்ற இறைவனின் கருவறை திருக்கோலங்களை உங்கள் தரிசனத்திற்காக அளித்துள்ளோம்.

தரிசித்து மகிழுங்கள். சிவதரிசனம், சிந்தை குளிரச் செய்யும்!
புற்றிடங் கொண்டீசர், கோவை.


சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஓரிடத்தில் சிவலிங்க வடிவில் மண்புற்று வளர, அந்தப் புற்றை மக்கள் வணங்கத் தொடங்கினர். பின்னர், அந்த இடத்தின் அருகே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டினர். புற்று இருந்த இடம் அது என்பதால் ஈசன் `புற்றிடங் கொண்டீசர்' ஆனார்.



கொங்கணேஸ்வரர், தஞ்சாவூர்.
கொங்கணர் என்ற சித்தர் இமயமலையில் தவமிருந்து, பின் இறைவனின் கட்டளைப்படி தஞ்சாவூர் வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு இறைவனுடன் ஐக்கியமானார். கொங்கணர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இறைவனே  `கொங்கணேஸ்வரர்'.


தான்தோன்றீஸ்வரர், உறையூர்.

தினந்தினம் தன் ஆலயம் வந்து வழிபட்ட காந்திமதி எனும் கர்ப்பிணி ஒருநாள் வழியில் வெப்பம் தாளாது மயங்கி விழ, அங்கேயே சுயம்புவாகத் தோன்றி காட்சி தந்து அவளை ஆட்கொண்ட இறைவன் `தான்தோன்றீஸ்வரர்' என்ற பெயரிலேயே அழைக்கப்படலானார்.
தாயுமானவர், திருச்சி.

 
சிவ பக்தையான ரத்னாவதிக்கு பேறுகாலம் நெருங்கியபோது, அவள் தன் தாயை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவளது  தாயால் வரமுடியவில்லை. இறைவனே அந்தத் தாய் உருவம் கொண்டு, அப்பெண்ணின் அருகே இருந்து பிரசவம் பார்த்தார். தன் பக்தைக்கு தாயும் ஆகி பிரசவம் பார்த்த இறைவன் `தாயுமானவர்' என்றே அழைக்கப்படுகிறார்.

தர்மலிங்கேஸ்வரர், கோவை.


கோவையிலிருந்து 13 கி.மீ. யில் உள்ள மரப்பாலம் என்ற ஊரில் மலை மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இறைவன் இவர். பாண்டவர்களில் முதல்வரான தருமர் வழிபட்ட இறைவன். எனவே, `தருமலிங்கேஸ்வரர்'.
புனுகீஸ்வரர், மயிலாடுதுறை.

சிவனின் சாபத்தால் இந்திரன் புனுகுப்பூனை உருவெடுத்து பூலோகம் வந்தான். காட்டில் இருந்த சிவலிங்கத்தை பூஜை செய்து, சாபவிமோசனம் பெற்றான். இந்திரன் புனுகுப்பூனை உருக்கொண்டு பூஜித்த இறைவன் என்பதால் ஈசன் `புனுகீஸ்வரர்' என்ற பெயரைப் பெற்றார்.
மணவாளேஸ்வரர், திருவேள்விக்குடி.




மகரிஷி ஒருவரின் மகள், இறைவன் தன்னை மணக்க வேண்டி, பதினாறு திங்கள் விரதம் இருந்து, அவரையே மணாளனாகப் பெற்றாள். மணவாளனானவர் சிவபெருமான் என்பதால் இத்தலத்து இறைவன் `மணவாளேஸ்வரர்.'
தாளபுரீஸ்வரர், திருக்கோலக்கா.

திருஞான சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, கரங்களால் தாளம் போட்டபடி தன்னைப் போற்றி பதிகம் பாடியதைக் கண்டார் ஈசன். அந்தச் சிறுவனின் கரங்கள் சிவந்து போனதையும் பார்த்தார். எனவே, மனம் கசிந்த இறைவன் பொன்னால் ஆன தாளத்தை அவருக்கு வழங்கியதால், `தாளபுரீஸ்வரர்' என அழைக்கப்படலானார்.


கண்ணாயிரமுடையார், குறுமாணக்குடி.
அகலிகையின் மேல் கொண்ட ஆசையால் கௌதமரால் சபிக்கப்பட்ட இந்திரன், மேனியெங்கும் ஆயிரம் கண்கள் உண்டாகி தவித்தான். அதுவிலக, இறைவனை நோக்கி தவமிருந்தான். இரக்கம் கொண்ட இறைவன் அந்த ஆயிரம் கண்களையும் தன்மேல் ஏற்றதால் `கண்ணாயிரமுடையார்' ஆனார்.

Comments