இடர்களையும் எம்மானை .நெடுங்களத்தில் காணீர்!



வானத்தில் வைரமெனக் கண் சிமிட்டும் தாரகைகள் போல் தெய்வத் தமிழகத்தில் ஒளிவீசிப் பிரகாசிக்கும், வழிபாட்டுச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட திருக்கோயி ல்கள் மக்களுக்குத் தங்கள் தெய்வீக சக்தியினால் துணை நிற்கின்றன. தமிழ் மக்களின் இதயத் தூய்மைக்கும், பண்பிற்கும், ஒழுக்கத்திற்கும், அன்பிற்கும் இத்திருக்கோயில் களே காரணமாகும்.

இத்தகைய திருக்கோயில்கள் மிகவும் புராதனமானவை. முடியுடை மூவேந்தர்களாலும் வணங்கப்பட்ட இத்திருத்தலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பும், விசேஷ சக்தியும் உண்டு. இதற்காகவே, அந்தந்த திருக்கோயில்களில், விசேஷ மந்திர சக்தி ஊட்டப்பெற்ற யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இரகசியம்!

நமது மூதாதையர்கள் முக்காலத்தையும் உணர்ந்த தவசிரேஷ்டர்கள். ஆதலால், ஏதோ ஒரு காலகட்டத்தில், அன்னியர்களால் நமது அரிய திருக்கோயில்களுக்கு ஆபத்து கள் நேரிடக்கூடும் என்பதைத் தங்கள் ஞான திருஷ்டியினால் முன்கூட்டியே அறிந்து, இந்த யந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், இறைவனின் சான்னித்தியம் பாது காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கருவறைக்குக் கீழே 40 அடி முதல் 80 அடி வரை ஆழத்தில், காலத்தினாலும் அழிக்க இயலாத அதிசக்தி வாய்ந்த மூல யந் திரங்களையும் ரகசியமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பகைவர்கள் திருக்கோயில்களை இடித்து, நிர்மூலமாக்கி, பல ஆண்டுகள் கடந்தும், மீண்டும், மீண்டும் இக்கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று, அதே சக்தியுடன் புதுப்பொலிவு பெறுவதற்கு இந்த மூல யந்திரங்களே காரணமாகும்.

நம் திருக்கோயில்களை இடித்து நிர்மூலமாக்கிய பகைவர்கள் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்ததற்கும், அப்பன், பிள்ளை ஆகியோரே ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு, கொன்று அழிந்ததற்கும் இம்மூல யந்திரங்களே காரணமாகும். இந்த மூல யந்திரங்களை எவராலும் அணுகவும் முடியாது. ஏனெனில், அவற்றில் அதர்வண வேத மந்திரங்கள் பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய, பிரத்யேக சக்தி கொண்ட திருக்கோயில்களில் ஒன்றுதான், திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் சாலையில், துவாக்குடி எனும் ஊரிலிருந்து, வடதிசையில், சுமார் 3 கி.மீ. தொலைவில், தன்னிகரற்றுத் திகழும் திருநெடுங்குளம் திருஒப்பிலாநாயகி உடனுறை திருநெடுங்களநாதர் திருக்கோயில் என்னும் சிறப்பான க்ஷேத்திரம் ஆகும்.

தேவாரப் பாடல் பெற்ற பெருமை!

தமிழ் நாட்டில், தேவாரப் பாடல் பெற்று விளங்கும் 275 திருத்தலங்களில், காவிரி நதியின் தென்கரையில் திகழும் 228 தலங்களில் 8-வது தலமாக திருநெடுங்களம் விளங்குகிறது.

திருஞான சம்பந்தப் பெருமான் இத்திருத்தலத்துப் பெருமானை தரிசித்து, அடியவர் இடர்களைக் களையும் கருணைப் பெருவள்ளலான இத்தலத்து ஐயன் மீது திருப்பதிகம் பாடி, பாமாலை சூட்டி, நெகிழ்ந்துள்ளார். தன்னைத் தரிசித்து, சரண் அடையும் பக்தர்களின் இடர்களை அப்போதே களைந்தெறியும் கற்பகத் தருவான இப்பெருமானை ‘‘இடர் களையும் எம்மான்’’ என மனமுருகித் தனது ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் ‘‘இடர்களையாய் நெடுங்களம் மேயவனே’’ என உளம் உருக வேண்டுகிறார்.

சைவ நெறிச் செல்வனான திருஞான சம்பந்தப் பெருமான் நெடுங்களம் வந்து, வழிபட்ட பெருமையினை ‘‘நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும், இடும்பைகள் தீர்த்து, அருள் செய்வாய்...’’ என்னும் ‘‘இன்னிசை மாலை கொண்டேத்தி ஏகி...’’ என்று பெரிய புராணம் போற்றுகிறது. அருட்பிரகாச வள்ள லார் பெருமானும் ‘‘தன்னார் நெடுங்கள மெய்த் தாரகமே...’’ என்று இப்பெருமானைத் துதித்துள்ளார். மேலும், அப்பர் பெருமானும், ‘‘புள்ளிருக்கும் வேளூர்த் திருத்தாண்டகம்’’ பதிகத்திலும், நெடுங்களம் திருத்தலத்தைப் போற்றிப் பாடி மகிழ்ந்துள்ளார்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய ‘‘க்ஷேத்திரத் திருவெண்பா’’ பாடலிலும், நெடுங்களத்து இறைவனின் திருவடிகளை அல்லும், பகலும் நினைக்கவேண்டும் என அருளியுள்ளார்.

‘‘தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி
எடுங்களத்தா என்னும் முன் - ஏழை
மடநெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை’’ என்ற அற்புதமான அப்பாடல். மனிதப் பிறவிக்கு எளிதில் கிட்டாத அரிய அறிவுரை அல்லவா இது!

பேரழகுப் பெருமானின் பெருமை!

இத்திருத்தலத்துப் பெருமானின் திருநாமம் ‘‘திருநெடுங்காநாதர்’’ என்பதாகும். தினமும் ஓர் திவ்ய அழகுடன் காட்சி அளிப்பதால், ‘‘நித்திய சுந்தரேஸ்வரர்’’ எனவும் அழைக்கப்படுகிறார். ‘‘சுந்தரம்’’ என்றால் ‘‘அழகு’’, ‘‘லாவண்யம்’’ என்று பொருள். ‘‘நித்திய’’ என்றால் ‘‘தினமும்’’ அல்லது ‘‘ஒவ்வொரு நாளும்’’ என்று அர்த்தம்.

ஈடில்லா அழகுப் பெருமானுக்கு ஏற்ற தேவியாகத் தரிசனம் அளிக்கிறாள் அம்பிகை ‘ஒப்பிலாநாயகி’. தன்னை நாடிவரும் குழந்தைகளான பக்தர்களுக்குச் சகல மங்களத் தையும், அஷ்ட ஐஸ்வர்யத்தையும் அருள்வதால், ‘‘மங்களாம்பிகை’’ எனவும் பூஜிக்கப்படுகிறாள் அன்னை!

தாயை தரிசிக்கும்போது, மெய்யெல்லாம் சிலிர்க்கிறது! பேசாமல் பேசுகிறாள் தாய்!! பல பிறவிகளில் பெரும் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய தரிசனம். ‘‘நான் இருக்கும்போது உனக்கேன் கவலை...?’’ என்று கேட்பது போன்ற பிரமை ஏற்படுகிறது நம் மனத்தில். அன்னையின் கருணையைப் போற்றும் தனிப்பாடல் ஒன்றும் உள்ளது.

புராண வரலாறு!

அன்னை பார்வதி தேவி இத்தலத்தில் கடும் தவம் இயற்றி, கயிலைநாதனின் கைத்தலம் பற்றியதாகத் தலவரலாறு கூறுகிறது. அகத்திய முனிவர் இங்கு தவமிருந்து, இறைவனின் திருவருள் பெற்றதாகவும், வங்கிய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் தரிசனம் அளித்து, அருள்புரிந்ததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன.

திருக்கோயிலினுள்...!

இனி, திருக்கோயிலினுள் செல்வோம் வாருங்கள்!

இதோ! அழகிற்கு அழகு செய்வதுபோல், அழகான திருக்கோயிலுக்கு முன் திருக்குளம்!!
திருக்குளத்தின் பெயரோ, ‘‘சுந்தர தீர்த்தம்!’’ வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்கமுடியும் கண்கவர் தெய்வீகக் குளத்திற்கு?

திருக்குள தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, கோயிலினுள் பிரவேசிக்கிறோம்.

நுழைவாயிலின் இடது பக்கம் வினை அகற்றும் விநாயகப் பெருமானின் தரிசனம் பெறுகிறோம். வலது பக்கம் கம்பீரமாக கருப்பண்ணசாமி கோயில் கொண்டுள்ளார். உடல் நலம் குன்றியவர்கள், மருத்துவத்திற்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படாத நோயுற்றவர்கள், சக்தி வாய்ந்த இந்த கருப்பண்ணசாமியை தரிசித்து, பானகம் நைவேத்தியம் செய்தால், நோய் நீங்கி, உடல் நலமடைவது அனுபவத்தில் கண்டுவரும் உண்மை ஆகும். அடுத்ததாக, நமது கண்களைக் கவர்வது, அழகான, ஐந்து நிலை சித்திர கோபுரம்!

முன்பிருந்த கோபுரம், பகைவர்களால் இடிக்கப்பட்டு, அஸ்திவார கல்கார பகுதி மட்டுமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இதனைக் கண்டு, கண்ணீர் வடித்த பக்தர்கள் ஒன்றுகூடி, சிந்தித்து ‘‘திருநெடுங்காளர் உழவாரப் பணிக்குழு’’ அமைத்து, அழகான ஐந்து நிலைக் கோபுரத்தை நிர்மாணித்து விட்டனர்.

‘‘ஏதோ! ஒரு கோபுரத்தைப் புனரமைத்துவிட வேண்டும்’’ என்றில்லாமல், அரும்பாடுபட்டு, பல இடர்களையும் சமாளித்து, அற்புத சித்திர கோபுரமாக, கலைநயத்துடன் நிர்மாணித்துள்ளார்!! பக்தியும், சிரத்தையும் இருந்தால், இமயத்தின் சிகரத்தையும்கூட எட்டிப் பிடித்துவிடலாம் அல்லவா!!!

திருஞானசம்பந்தர் எழுந்தருளி, வழிபட்ட வரலாறு, திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ள தெய்வீக நிகழ்ச்சிகள், இத்தலத்து புராண வரலாறு, இப்பெருமானை வழிபட்டு, பேறு பெற்ற சிதம்பரம் ஆடவல்லான், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆகியவை சுதை வடிவத்தில், இக்கோபுரத்தை அழகு செய்கின்றன.

கோபுரத்தை அடுத்து, நெடிய கொடிமரம் - அதனை ஒட்டி, அன்றலர்ந்த கமல மலர் போன்ற பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை அணி செய்கின்றன.

அம்பிகை திருச்சந்நிதி!

நந்தி மண்டபத்திற்கு வலப்பக்கத்தில், தெற்கு நோக்கி, அம்பிகை சந்நிதி பிரகாசிக்கிறது.

அம்பிகை, தனது இரு திருக்கரங்களிலும் தாமரை மலர்களுடனும், கீழிரு ஹஸ்தங்களில் (கைகள்) அபய, வரத முத்திரை தாங்கியும், ஒப்பில்லாத நாயகி என்ற திருப்பெய ருக்கு ஏற்ப அன்பர்களுக்கு அருள்புரியும் ஆனந்த காட்சி முற்பிறவிப் புண்ணிய பலன்களால் மட்டுமே பெறக்கூடிய பேரானந்த, பரவச அனுபவமாகும். மிகை அல்ல இது!

இரண்டாம் சுற்று!

இரு நிலையுடன் கூடிய அழகிய கோபுரத்தை முதல் திருச்சுற்றிற்குக் செல்லும்போது காண்கிறோம். நுழைவாயிலின் இரு புறமும் தேவகோட்டத்தில், துவாரபாலகர்களின் அழகிய வடிவங்களைத் தரிசிக்கிறோம். சோழர் காலத்து அரிய கலைச்செல்வங்கள் இவை!

முதல் சுற்றின் தெற்குப் பகுதியில் சமயக்குரவர் நால்வர், மற்றும் சேக்கிழாரும் தரிசனம் அளிக்கின்றனர். இம்மண்டபத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த கல் உரல் ஒன்று கண்களைக் கவர்கிறது. உரலின் வெளிப்பகுதி, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.

முருகப் பெருமான்!

மேற்குப் பிராகாரத்தில், தென்மேற்கு மூலையில் அருணகிரிநாதர் பாடிப் போற்றிய ஸ்ரீ முருகப் பெருமான் திருச்சந்நிதி உள்ளது.

ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானையுடன் தன்னிகரற்ற திருமுகப் பொலிவுடன் காட்சி தரும் ஸ்ரீமுருகனின் அழகு, வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது.

‘‘அன்பர் குலவும் திருநெடுங்குள வளம்பதியில் அண்டரயனும் பரவும் தம்பிரானே...’’ என்று தனது தேனினுமினிய தீஞ்சுவைத் திருப்புகழில் பாடி, ஆடி பரவசமடைந்துள்ளர் அருணகிரிநாதரும்!

சைவ - வைணவ ஒற்றுமை!

பண்டை காலம் முதலே, நம் ஆன்றோர்களும், சான்றோர்களும், பெரியோர்களும் சைவ - வைணவ ஒற்றுமைக்காக பாடுபட்டு வந்துள்ளனர். புற்றுநோய் எவ்விதம் நம் உடலை அழித்துவிடுகின்றதோ, அதுபோன்றே சைவ - வைணவ பரஸ்பர ஒற்றுமையின்மை, நம் இந்து சமுதாயத்தையே வேரறுத்து வருகின்றது என்பதையும், அத்தகைய நிலையை எவ்விதம் பகைவர்கள் நம் தெய்வீக வாழ்க்கை நெறிமுறைகளைத் திட்டமிட்டு அழிக்க பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் கவலையுடன் கவனித்துவந்த அப்பெரியோர்கள், சைவ - வைணவ ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்துள்ளனர்.

அதன் சின்னமாகவே, இத்திருக்கோயிலிலும், வடமேற்கு மூலையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தனது இரு தேவியான ஸ்ரீதேவி, பூதேவியருடன் அற்புதமாகச் சேவை சாதிக்கிறார்.

தலவிருட்சம்!

வடக்கு பிராகாரத்தில், தலவிருட்சமாக கஸ்தூரி அரளியும், வில்வ மரமும் காட்சி அளிக்கின்றன.

நவக்கிரக சந்நிதி!

சூரியன் தனது இரு தேவியர்களுடன் மேற்கு திசை நோக்க, மற்ற அனைத்துக் கிரகங்களும் சூரியனைப் பார்த்து நிற்கும் அமைப்பு சிறப்பானதாக விளங்குகிறது.

அற்புத யோக தட்சிணாமூர்த்தி!

மூலக் கருவறையில் தரிசனம் அளிக்கும் திருநெடுங்காளநாதர் ஸ்வயம்பு மூர்த்தி ஆவார்.

பல்லவர் காலத்தில் புனர்நிர்மாணமும், திருப்பணிகளும் செய்யப்பெற்ற கலைப்பொக்கிஷமாகத் திகழ்ந்த இத்திருக்கோயில், பிற்காலத்தில் பகைவர்களின் தாக்குதல்களினால் பல மாற்றங்களை அடைந்துள்ளது.

கருவறையில் வெளிப்பக்கத்தில், தெற்குப் பக்கத்தில் உள்ள தேவ கோட்டத்தில், அற்புத கலைப் பொக்கிஷமாக அமர்ந்துள்ள திருக்கோலத்தில் தரிசனம் அளிக்கும் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியின் வடிவழகைக் காலமெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! அழகென்றால் அப்படி ஓர் அழகு! தரிசித்த மாத்திரத்திலேயே குருவின் உபதேசமும் கிட்டிவிடுகிறது!! அனுபவத்தில் உணரலாம்!!!

கல்வெட்டுகள்!

இக்கோயில் பற்றி 30-க்கும் மேற்பட்ட சோழர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஆதித்தசோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத் துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத் தலைவர்கள் ஆகியோர் இத்திருக்கோயிலுக்குப் பெரும் தொண்டுகள் செய்துள்ளனர்.

சூரியன் வழிபடுதல்!

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், தினமும் கருவறை சிவபெருமான்மீது சூரியனின் ஒளி படும் அற்புதக் காட்சியைத் தரிசித்து பரமானந்தம் அடையலாம். திருநெடுங்களம் திருத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது. பிறவியில் ஒருமுறையேனும் நாம் சென்று, தரிசிக்கவேண்டிய புனித தலம் இது.

திருக்கயிலாயத்தையும், திருவைகுண்டத்தையும் எளிதில் பெற, கடும் தவம் புரிய வேண்டியதில்லை - இக்கலியில்! பக்தியுடன் இத்தகைய திருத்தலங்களை நினைத்தாலும், தரிசித்தாலும் முக்தி நம்மைத் தேடி வரும்.

Comments