ஓக்வில் வைஷ்ணவதேவி கோவில்


உங்களிடம் நிறைய பணம் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சென்று வர வாகன வசதிகள் இருக்கலாம்.

நீங்கள் சொல்வதை உடனே செய்துமுடிக்கக் கூடிய வேலைக்காரர்கள் இருக்கலாம். பலரும் மதிக்கும்படியான செல்வாக்கு, புகழ், பெருமை உங்களுக்கு இருக்கலாம்.

ஆனால் இவை எதுவுமே உதவாது நீங்கள் வைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கு. வைஷ்ணவி தேவியை தரிசிக்க மட்டுமல்ல அவளைப் பற்றிப் பேச, சொல்ல, எழுத, படிக்க.. அவ்வளவு ஏன், மனதால் நினைக்கவும்கூட அந்த அன்னையின் அருள் வேண்டும்.

அந்த தேவியின் மகத்துவத்தைச் சொல்ல ஆயிரம் நாவுகள் படைத்த ஆதிசேஷனாலும் இயலாது என்கிறது தேவி மகாத்மியம்.

சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாமல் மூவரும், தேவரும், முனிவரும் வழிபட்ட தேவி இவள்.

இந்தியாவில் திருப்பதியை அடுத்து அதிக அளவில் பக்தர்கள் கூடுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயிலில்தான். ‘ஜெய் மாதா தீ..!’ என்று பக்தர்கள் அங்கு எழுப்பும் குரல், அந்தப் பனிப் பிரதேசத்தையே பக்தியால் நிறைத்து மெய்சிலிர்க்க வைக்கும்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் தேவியை தரிசிக்க, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வருடந்தோறும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள்.

இமயமலையடிவாரத்தில் திரி¢கூட மலைச் சரி¢வில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200அடி உயரத்தில் அமைந்து உள்ளது, இக்கோயில்.

அம்பிகையின் அம்சமான சப்த மாதருள் மிகவும் ஆற்றல் மிக்க தேவியான வைஷ்ணோதேவியை மாதா ராணி, வைஷ்ணவி எனவும் அழைப்பர்.

மகா காளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகிய மூவரும் தங்களின் அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கியவளே வைஷ்ணோ தேவி. உலக நன்மைக்காகவும், தர்மத்தை நிலை நாட்டவும், மாயையைப் போக்கி யோக நிலையை பக்தர்களுக்கு அருளவும் உதித்தவளே வைஷ்ணோ தேவி எனவும் கூறப்படுகிறது.

அண்டி வந்தவரை அரவணைத்துக் காத்து அவர்கள் கேளாமலே வரம் பல தந்து அருளும் அன்னை வைஷ்ணவியைப் பற்றிப் படித்து மனதால் தரிசிக்கும் பாக்கியம் இதோ இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
ஒருநிமிடம்... இப்போது நீங்கள் தரிசிக்கப் போவது கனடா நாட்டின் டொரான்டோ நகரின் அருகே ஓக்வில் எனும் இடத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் வைஷ்ணோ தேவியை.

புறப்படத் தயாராகிக் கொண்டே அந்த புவனமாதா வைஷ்ணவி தேவி பூவுலகில் அவதரித்த புராணக் கதை ஒன்றைப் பார்ப்போமா!
வைஷ்ணோ தேவியின் அவதாரம் நிகழ்ந்தது, தென்னிந்தியாவில். அதுவும், தன் பக்தர் ஒருவருக்கே மகளாகப் பிறந்தாள் அம்பிகை.

தேவி உபாசகரான ரத்னாகர் சாகர் என்பவருக்கு, திருமணம் நடந்து பலகாலம் ஆகியும் குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவேயில்லை. அதற்காக அனுதினமும் தேவியை மனதார வேண்டினார். மகாசக்தியின் கருணையால், அவரது மனைவிக்கு கருவினைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது. நல்ல நாள் ஒன்றில் அழகான பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்கு.

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ரத்னாகர் சாகர் ஒரு தீர்மானம் எடுத்தார். அது, அந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் அல்லது செய்தாலும் அதற்குத் தடையாகத் தான் இருக்கப்போவதில்லை என்பதுதான்.

முப்பெரும் தேவியரின் அம்சமும் நிறைந்தவள் என்பது தெரியாமலே குழந்தைக்கு த்ரி¢குடா என பெயர் சூட்டினர். அறிவும் அழகும் ஒன்று சேர்ந்தவளாக வளர்ந்தாள், த்ரிகுடா.

அவளுக்கு ஒன்பது வயதானபோது, பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று கடற்கரையில் தவம் புரி¢ந்திட விரும்பினாள். அதனை ஈடேற்றத் தன் தந்தையின் அனுமதியைக் கோரினாள். மனம் வருந்தினாலும் ஏற்கெனவே செய்திருந்த தீர்மானத்தின்படி, மகளின் விருப்பத்தைத் தடுக்காமல் அனுமதித்தார் ரத்னாகர். தன் எண்ணப்படியே கடற்கரை சென்று இரவு, பகல், வெயில், மழை, குளிர், காற்று என்று எதுவும் பாராமல், ராமபிரானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தாள், த்ரிகுடா.

ராமபிரான், சீதையைத் தேடிப் பல இடங்களிலும் அலைந்த சமயத்தில், த்ரிகுடா தவமிருந்த கடற்கரைப் பகுதிக்கும் வந்தார். அப்போது அவரை தரிசித்த த்ரிகுடா பணிவோடு வணங்கி, தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினாள்.

ராமச்சந்திரன், தான் இப்பிறவியில் ஏகபத்தினி விரதன் என்பதை அவளுக்கு விளக்கினார். மேலும் அவளின் தவத்தை மெச்சி வைஷ்ணவி எனப் பெயர் சூட்டி, கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கும்போது அவளை மணந்து கொள்வதாக வாக்குறுதியும் அளித்தார்.

அதோடு தான் கல்கி அவதாரம் எடுக்கும் வரை மானிக் மலைப்பகுதியில் த்ரிகூட் பள்ளத்தாக்கில் தவம் புரியும்படியும்¢ சொன்னார்.தவமிருக்கும் தேவிக்குப் பாதுகாப்பாக தனது வில் அம்பு, வானரப் படைகள், சிங்கம் ஆகியவற்றை அவளிடம் அளித்தார்.

அதன்பின் ராமபிரான் சீதை இருக்கும் இடம் அறிந்து, அவளை மீட்க ராவணனுடன் போரிட்டபோது, போரில் ராமபிரான் வெற்றிபெற மகாசக்தியை வேண்டி நவராத்திரி விரதம் இருந்தாளாம் வைஷ்ணவி தேவி. அதனால் நவராத்திரி சமயத்தில் ராமாயணம் பாராயணம் செய்வது நற்பலன் தரும் என்ற நம்பிக்கை இன்றும் இந்த அன்னையின் பக்தர்களிடையே நிலவுகிறது.

உலகமே உன்னை வைஷ்ணோ தேவி என்னும் திருநாமத்தால் போற்றிப் புகழும் என்று ராமபிரான் அருளியதற்கேற்ப அன்னையின் புகழ் இன்று உலகம் எங்கும் பரவி இருக்கிறது.

இதோ, கனடா நாட்டு ஒன்டாரி¢யோ மாகாணத்தில் உள்ள ஓக்வில் என்னும் ஊரி¢ல் இருக்கும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு வந்து விட்டோம்.

கோயில் பகுதியில் நுழைந்ததுமே “வைஷ்ணோ தேவி மந்திர்’’ என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சொல்லி நம்மை வரவேற்கிறது, வரவேற்புப் பலகை.

வடநாட்டுக் கோயில்களின் பாணியில் அமைந்த கோபுரம் என்றாலும் பக்தி அதிர்வுகளை தென்னிந்திய பாணி கோபுரங்களுக்குக் கொஞ்சமும் குறைவில் லாமல் பரப்புகிறது. கோயிலைச் சுற்றி புல்வெளி, தூண்கள், பார்க்கிங் வசதி என மிக விஸ்தாரமாக இருக்கிறது.

படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் சென்றால், ஏதோ சமூகநலக் கூடத்திற்குள் நுழைந்தது போல் தோன்றுகிறது. பரந்த கூடத்தின் நடுவே அம்மனின் பெரிய சிலா ரூபம், இருகரம் குவித்து வருவோரின் இன்னல் யாவும் தீர்க்கும் தாய் வடிவில் அமைந்துள்ளது. கருவறை எனத் தனியாக இல்லாவிட்டாலும், அன்னையின் அருள் மணம், கோயில் முழுக்கப் பரவிக் கிடக்கிறது. குடத்தில் நடுநாயகியாக அம்பிகை இருக்க, பக்தர்கள் அமர்ந்து வழிபட வசதியாக இருபுறமும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது. கோயிலினுள் ஏகாந்தமான அமைதி நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள வைஷ்ணோ தேவி உருவம் ஏதுமின்றிக் காட்சி தந்தாலும், ஓக்வில் ஆலயத்தில் வைஷ்ணோ தேவிக்கு உருவம் அமைத்திருக்கிறார்கள்.

தீட்சண்யமான முகத்துடன் எட்டுக் கைகளுடன் சிங்கத்தின் மேல் அமர்ந்த நிலையில், சிலா ரூபமாகக் காட்சி தருகிறாள் வைஷ்ணோ தேவி. அம்மனின் ஆடை அலங்காரங்கள் சமிக்கி வேலைப்பாடுகளுடன் அழகாக இருக்கிறது.

சிறிது நேரம் உற்றுப் பார்த்தாலே அந்த தேவியின் எண்ணம் நம்முள் நிறைந்து, நம்மையறியாமலேயே அமைதியும் பரவசமும் நம்மிடம் குடி கொள்கிறது. சுற்றத்தாரையெல்லாம் விட்டு வந்து விட்டோமே என ஏங்கும்போது இங்கு வந்து வைஷ்ணவி தேவியை தரிசிக்கிறார்களாம் இங்குள்ள இந்தியர்கள். அவர்களுக்கு, தங்கள் தாயைப் பார்த்தது போன்ற மகிழ்ச்சியும், மனதுக்கு அமைதியும் கிட்டுகிறதாம்.

சிவன், பிள்ளையார், ராதா கிருஷ்ணர், ஆஞ்சநேயர் சிலைகளும் உள்ளன. அனைத்து சிலைகளுமே வட இந்திய பாணியில்தான் இருக்கின்றன.
வருடந்தோறும் தீபாவளிப் பண்டிகையை இக்கோயிலில் பக்தர்கள் விமரி¢சையாகக் கொண்டாடுகின்றனர்.. இவ்வருடம் பட்டாசு சத்தம் காதுகளைத் துளைக்க, வாணவேடிக்கை, சரவெடி என அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

நம் நாட்டு உறியடித் திருவிழாபோல், வெண்ணெய், மோர் நிரப்பிய குடத்தை உயரத்தில் கட்டி , கம்பால் அடிக்கும் ‘தஹி ஹண்டி’ என்கிற விளையாட்டையும் தீபாவளி சமயத்தில் கோயிலுக்குள் நடத்துகின்றனர்.பஜனைப் பாடல்கள், நாட்டியம் என களை கட்டுகிறது கோயிலில்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்கள் பலர் சேர்ந்து அனுமான் சாலிசா துதியைப் பாராயணம் செய்கின்றனர். பின்னர், பக்தர்களே சமைத்த ‘ப்ராத்தி போஜ்’ எனப்படும் பிரசாதத்தினை நைவேத்தியம் செய்து விநியோகிக்கின்றனர். வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத பருப்பு தால், பூரி¢, கீர், சப்பாத்தி, பச்சடி, பல வித காய்கறிகள் என வட இந்திய முறையில் சமைக்கப்பட்ட மிக மிகச் சுவையான பிரசாதம் அது.

கோயில் வளாகத்திலேயே நாட்டியம், இசை , யோகா வகுப்புகள், சத்சங்குகள் வாரயிறுதியில் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு, கோயில் அருகிலேயே யாகசாலையும் திறந்து இருக்கிறார்கள்.

மற்ற அயல்நாட்டுக் கோயில்களைப் போன்றே ஓக்வில் வைஷ்ணோ தேவி கோயிலும் இந்தியர்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், அவர்களை இணைக்கும் பாலமாகவும் செயல்படுகிறது.

தர்மநெறியில் இருந்து தவறாத வாழ்க்கைப் பாதையில் செல்வோருக்கு, எல்லா வளங்களையும் வைஷ்ணோ தேவி அருள்வாள் என்பது நம்பிக்கை. நீங்களும் அந்த தேவியை மனதார வணங்குங்கள், அவளது அருளால் வாழ்வில் வளம் யாவும் பெறுங்கள்!

இருப்பிடம்

கனடா நாட்டு ஒன்டாரி¢யோ மாகாணத்தில் உள்ள ஓக்வில் என்னும் ஊரி¢ல் உள்ளது வைஷ்ணோ தேவி கோயில்.கனடா நாட்டின் டொரொன்டோ நகருக்கு மிக அருகில் உள்ளது ஓக்வில்.

கோயில் நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 முதல் மதியம் 1 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் காலை 7 முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்தே இருக்கும்.


Comments